குற்றங்களுக்கான தண்டனைகள் நெருங்குகின்ற நிலையில் அதற்கு அச்சப்பட்டு மக்களை பலிகடாவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார் என சட்ட ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு எதிர் தரப்பினர் தலைநகரில் முன்னெடுக்கவுள்ள போராட்டம் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பனையும் ஏற்படுத்தாது.
எனினும் இப் போராட்டத்தினால் அப்பாவி பொது மக்களே பாதிக்கப்படுவர். மக்களை பலி கொடுத்து ஆட்சியினை கைப்பற்றுவதே கடந்த அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன் தொடர்ச்சியையே தற்போதும் தொடர முயல்கின்றனர்.
அத்துடன் பொது எதிரணியினர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் இந்த போராட்டத்தினை குழப்ப வேண்டிய அவசியம் எதுவும் எமக்கு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.