ஐநா குழுவிற்கு பதில் அளிக்காத சிறிலங்கா அரசாங்கம்!

ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய காலத்தில் பதில் அளிக்காதது குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாகவும் அந்த சித்திரவதைகளுக்கும் முன்னாள் சிஐடி தலைவரிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிப்பொறிமுறையையொன்றை உருவாக்குமாறு ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.

ஐக்கியநாடுகள் குழு இது தொடர்பாக மேலதிக விபரங்களை சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.

ஐக்கியநாடுகளின் குழுவினர் கோரிய தகவல்களை வழங்குவதற்கான காலம் முடிவடைந்து ஒரு வருடகாலமாகிவிட்ட நிலையிலும் இன்னமும் பதில் வழங்கப்படவில்லை என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஐநா குழு தெரிவித்துள்ளது.

2016 ம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கியநாடுகளின் சித்திரவதை தொடர்பான குழுவின் 59 அமர்வில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா 2017 டிசம்பர் வரை இதற்கு பதில் அளிப்பதற்கான காலஅவகாசத்தை ஐநா குழு வழங்கியிருந்தது.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் கால அவகாசம் முடிவடைந்து பல மாதங்களாகிவிட்ட போதிலும் இன்னமும் அதற்கு பதில் அளிக்கவில்லை.

இந்த விவகாரங்களை கையாளும் விசேட அறிக்கையாளர் இலங்கையிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததை உறுதிசெய்துள்ளதுடன் இது குறித்து பதில் அளிக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.