யாழ்ப்பாண நீதிமன்றத்தில் கடந்தவாரம் ஒரு வழக்கு நடந்தது. யாழ். நகரில் பொது இடத்தில், மதுபோதையில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்பாக நிறுத்தியிருந்தனர் பொலிஸ் அதிகாரிகள்.
மன்றில் நிறுத்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்ட போது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். நீதிவானும் உடனடியாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்டப்பணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.
இதனை விட ஒரு வலுவான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளான பொலிஸார் தவற விட்டிருக்கிறார்கள்.
அதாவது, மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் மீது, மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தால் 2 ஆயிரம் ரூபா வரை குற்றப்பணம் அறவிடப்பட்டிருக்க முடியும்.
ஆனால், பொலிஸார் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் தான், அவர்களால் 5 ரூபா குற்றப் பணத்துடன் தப்பிக்க முடிந்தது.
இந்தச் சம்பவம், இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும், நீதியை நிலைநாட்டும் வகையிலான முயற்சிகளில் உள்ள தடைகளையும், தடங்கல்களையும் கூட எடுத்துக் காட்டுகிறது.
போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது தான், இலங்கை இப்போது எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்.
இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், நீதியை நிலை நிறுத்துவதற்கான பரிந்துரைகளைச் செய்வதற்கும் ஐ.நா. தொடர்ச்சியான மென் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதற்காக ஐ.நாவின் நிபுணர்களும் அடிக்கடி வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா நிபுணர் Juan Pablo Bohoslavsky நாளை இலங்கை வரப் போகிறார்.
இப்படிப் பலர் வந்து சென்று ஐ.நாவில் அறிக்கைகளை சமர்ப்பிக்கின்ற போதிலும், போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம், கிட்டத்தட்ட பூச்சிய நிலையில் தான் இருக்கிறது.
பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையை உருவாக்குவதும் அதற்கான சட்டங்களை நிறைவேற்றுவதும் அரசாங்கம் இந்தக் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு முக்கியமானது. ஆனால் அந்த விடயத்தில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவேயில்லை.
ஆயுதப்படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்கிறது என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரையில், சட்டம், நீதியின் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்றும் ஐ.நா, மற்றும் சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தினாலும் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்வதில்லை.
கொழும்பில் கடந்த 2008- –2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு கடந்தவாரம், நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கில் முக்கியமான சந்தேக நபர் நேவி சம்பத். தலைமறைவாக இருந்த அவர், நீண்ட இழுபறிக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த போது, 5 இலட்சம் ரூபா கொடுத்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவி செய்தார் என்று பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன என்றும் அவரைக் கைது செய்து விசாரிக்கப் போகிறோம் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பலமுறை கூறி விட்டது. நீதிமன்றமும் தேவைப்பட்டால் கைது செய்து விசாரிக்கலாம் என்று கூறியது.
ஆனால் கூட்டுப் படைகளின் தளபதி நிலையில் உள்ளவரைக் கைது செய்வதற்குத் தயங்குகிறது சி.ஐ.டி. கடந்தவாரம் அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து விட்டது. ஆனாலும் அவர் அரசாங்க நிகழ்வுகளில் அதிகாரபூர்வமாக கலந்து கொண்டு வருகிறார்.
நாளையுடன் அவரது பதவிக்காலம் முடியப் போகிறது அதற்குப் பின்னர் தான், அவர் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவைக் கைது செய்வதற்கும் நீண்ட இழுபறி காணப்பட்டது.
மூன்று தடவைகள் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், பின்னர் அவை கைவிடப்பட்டன. ஒருமுறை கைது செய்யப்படவிருந்த போது, இராணுவத்தின் பதில் தளபதியாக நியமிக்கப்பட்டு விட்டார். அதனால் அந்த வாய்ப்பும் நழுவியது.
கடைசியாக அவர் ஓய்வுபெற்ற பின்னரே, கைது செய்யப்பட்டார். இன்னமும் அவர் விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டிருக்கிறார். விளக்கமறியலில் இருந்தாலும், வழக்கிற்குத் தேவைப்படும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றிய இரகசியத் தகவல்களை வழங்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் விசாரணையாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது.
கடந்த வாரம் தான், அவர் ஒரு இராணுவத்தின் இரகசிய மறைவிடம் பற்றிய உண்மையை தனது சட்டத்தரணி மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பல்வேறு கொலைகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட மீறல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பல இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போதும், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
பிணையில் வெளிவர முடியாத வகையில் இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை.
போரில் வெற்றியைப் பெற்றுத் தந்த படையினரைத் தண்டிக்கிறது அரசாங்கம் என்ற குற்றச்சாட்டு எதிரணியால் கூறப்படுவதால், “அடிப்பது போல அரசாங்கம் அடிக்கிறது, கைது செய்யப்படுபவர்களும் வலிப்பது போல நடிக்கிறார்கள்.
குற்றச் செயல் ஒன்று தொடர்பாக கைது செய்யப்படுவதற்கு அப்பால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வலுவான சாட்சியங்கள், ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது தான் முக்கியம். ஆனால் அது அரிது.
அதைவிட, எந்தெந்த சட்டப் பிரிவுகளின் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் முக்கியம்.
அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட மதுவரிச் சட்டம் இருக்க, 150 ஆண்டுகளுக்கு முந்திய பொலிஸ் சட்டத்தை கையில் எடுத்து வழக்கைத் தாக்கல் செய்து வெறும் 5 ரூபா தண்டத்தை பெற்றுக் கொடுத்தது போன்ற சம்பவங்கள், போர்க்கால மீறல்களுக்கான பொறுப்புக்கூறலிலும் நடக்கலாம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக பல பிரபலங்கள் கைது செய்யப்பட்டார்கள். விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் எத்தனை பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்களுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன?
விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைகளும் நடத்தப்படுகின்றன. ஆனாலும், எந்தச் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான் முக்கியமானது. அது தான் வழக்கின் தீர்ப்பின் தன்மையைத் தீர்மானிக்கும்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வெறும் 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு தவறுக்காக, நீண்ட விசாரணைகள் நடத்தப்பட்டு, பெரும் உழைப்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போது, குற்றமிழைத்தவர் குறுகிய கால தண்டனை அல்லது மிகக் குறைந்த அபராதத்துடன் தப்பிக்கும் நிலை உள்ளது,
ஒரு குற்றத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்படும் நீண்ட புலனாய்வு மற்றும் தேடல் முயற்சிகள் மற்றும் தவறுகளின் கனதிக்கு ஏற்ற வகையில், தண்டனைகளும் அமைய வேண்டியது அவசியம்.
ஆனால் பழைமையான சட்டங்களின் மூலம் தான் இன்னமும் தண்டனை விதிக்கப்படும் நிலை உள்ளது. அதைவிட புதியதாக உருவெடுத்துள்ள குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டங்களும் இயற்றப்படவில்லை.
உதாரணத்துக்கு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் விடயத்தில் இலங்கையில் எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் இந்தக் குற்றங்கள் அதிகம் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்தச் சட்டங்களின் கீழ் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதற்கு ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
இத்தகைய சட்டங்களை வரைவதற்கான நடவடிக்கைகளும் இன்னமும் எடுக்கப்படாத நிலையில் தான், சர்வதேச அரங்குகளில் அரசாங்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்துக் கொண்டு வருகிறது.
நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கும் முயற்சிகளும் கூட இன்னமும் எடுக்கப்படவில்லை. அத்தகைய பொறிமுறை உருவாக்கப்பட்டாலும் எந்தச் சட்டங்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வது என்ற கேள்வி இருக்கிறது.
வெறுமனே குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை கைது செய்வது மாத்திரமே தீர்வு அல்ல. ஆனால் அரசாங்கம், அதனைத் தான் இழுத்தடித்துச் செய்து கொண்டிருக்கிறது.
எதிரணியும் அதனை வைத்துத் தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை மாறவில்லை. அல்லது குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பிக்கின்ற நிலை தான் தொடருகிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புகள் கால மாற்றம், தேவைக்கு ஏற்ப புதிய சட்டங்களைக் கையில் எடுக்காமல், குற்றமிழைத்தவர்களை காப்பாற்றும் மனோநிலையில் இருந்து வெளிவராமல் இருக்கும் வரை – குற்றங்களுக்கும் மீறல்களுக்கும் உரிய நீதியைப் பெற்றுக் கொடுத்தல் என்பது எட்டாக் கனி தான் .
நன்றி-வீரகேசரி