அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டவர் சிறிலங்கா அமைச்சரின் நெருங்கிய உறவினர்!

சிறிலங்கா அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினரே அவுஸ்;திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 25 வயது முகமட் நிஜாம்டீன் சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சரின் நெருங்கிய உறவினர் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

நிஜாம்டீன் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவரின் சகோதரரான ஒருவர், நிஜாம்டீன் குற்றமிழைத்திருக்கமாட்டார் அவர் வெளிப்படையான முஸ்லீம் என பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

அவர் அவுஸ்திரேலிய நகரமொன்றிற்கு இவ்வளவு மோசமான குற்றங்களை இழைப்பது குறித்து சிந்திக்கவேண்டிய தேவையில்லை எனவும் அவர் சமூக ஊடகத்தில் பதிவுசெய்துள்ளார் என ஏபிசி தெரிவித்துள்ளது.

நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்ட பின்னர் எங்களால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை நாங்கள் அனாவசிய சம்பவங்கள் காரணமாக மனமுடைந்துபோயுள்ளோம் எனவும் அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

நிஜாம்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ளவேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ள ஏபிசி வர்த்தக பட்டதாரியான அவர் தனித்து செயற்பட்டுள்ளார் என அதிகாரிகள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் விசா இந்த மாதத்துடன் முடிவடைவதால் அவரை அவுஸ்திரேலியாவில் வைத்தே விசாரணை செய்வதற்காக குற்றவியல் நீதி விசாவிற்கு அவுஸ்திரேலிய காவல் துறை விண்ணப்பித்துள்ளனர் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.