முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறாதென அரசதலைவர் தெரிவித்துள்ள நிலையிலும், இந்தப் போராட்டம் நடந்து முடிந்துள்ளது.
தெற்கின் பல பிரதேசங்கள் மகாவலி கங்கையின் நீரால் செழிப்புடன் காணப்படுகின்றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்பதால் மூன்றுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் விவசாயிகள் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற னர். அநுராதபுர மாவட்டத்தின் வறட்சியான பகுதிகள் பச்சைப் பசேலெனக் காணப்படுவதற்கு மகாவலி நீரே காரணமாகும்.
ஆனால் அநுராதபுரம்வரை வந்த மகாவலி நீரினால் அதற்கு அப்பாலுள்ள வடபகுதியை எட்டிப் பார்க்க முடியவில்லை. இதற்கும் இனவாதத்தைத்தான் காரணமாகக் கூற முடியும். ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் மகாவலி அபிவிருத்திச்சபை முனைப்புடன் செயற்படுவதை எவரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?
முல்லைத்தீவில் சிங்களவர்கள் குடியேறப்படவில்லை என்கிறார் அரச தலைவர்!
முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் கிடையாதென அரசதலைவர் அடித்துக் கூறுகிறார். ஆனால் அவரையும் மீறி, அவருக்குத் தெரியாமல் அதிகாரிகளின் அனுசரணையுடன் இந்தக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றனவா? என்ற சந்தேகமும் கூடவே எழுகின்றது.
நாட்டின் பெரும்பான்மையின மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏராளமான நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளபோது தமிழர் பிரதேசங்களைக் குறிவைத்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கு ஏதேவொரு உள்நோக்கம் இருக்கத்தான் வேண்டும்.
தமிழ் மக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை, சேனாதிராசா கூறிய கருத்துக்கள் இன்றைய நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. சுமார் 40ஆயிரம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதுதான் மகாவலித் திட்டத்தின் முதன்மை நோக்கமெனவும், இதற்கான சான்றுகள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய குறித்த தகவல் உண்மையென்றால், சிங்களக் குடி யேற்றங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகப்பாரதூர மானவையாகவே அமைந்துவிடப் போகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாக மாறிவிடப்போகின்றது. அரசதலைவர் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறாதெனக் கூறுவதால் எவ்வித பயனும் ஏற்பட்டுவிடாது. அவர் தமது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி இதனை முற்றாகத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசதலைவரின் உறுதிமொழிகள்மீது தமிழ்மக்கள் நம்பிக்கை வைக்க முடியும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே மணலாறு பறிக்கப்பட்டு
வெலிஓயாவாக ஆக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே மணலாற்றில் ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றம் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரும் தலைவலியாகவே அமைந்துவிட்டது. முல்லைத்தீவிலிருந்து கிழக்கு மாகாணத்துக்குச் செல்வதாயின் இந்தக் குடியேற்றத்தை கடந்தே செல்ல வேண்டியுள்ளது. அசாதரணமான சூழ்நிலை ஏற்படும்போது இந்தப் பயணம் பாதுகாப்பாக இருக்காது.
இதனால் பல மைல்கள் சுற்றுப்பாதை யில் பயணிக்க வேண்டிய அவலத்தையும் தமிழர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகிவிடும். இந்த நிலையில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பகுதிகளில் மணலாறு, வெலிஓயா ஆக்கப்பட்டமை போன்று பெருமளவில் சிங்களக் குடி யேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டால் வடக்கும், கிழக்கும் நிரந்தரமாகவே பிரிக்கப்பட்டுவிடும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் வடக்கின் இனப்பரம்பலை முற்றாகவே சீரழித்து விடுமென்பதைக் கூறத்தேவையில்லை. கிழக்கைப் போன்று வடக்கிலும் தமிழர்கள் தமது பெரும்பான்மை பலத்தை இழந்து விடுவார்கள். அது மட்டுமல்லாது கிழக்கு மாகாணசபையை இழந்ததுபோல வடக்கிலும் இடம்பெற்றுவிடலாம்.
இந்த நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுவதை முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற தமிழர் விரோத சம்பவங்கள் உறுதி செய்கின்றன. இனவாதத்தைக் கைவிட்டால் அரசியலில் இடம்கிடைக்காது என்றதொரு நிலை இருக்கும்வரையில் சிறுபான்மையி னத்தவர்கள் இங்கு நிம்மதியாக வாழவே முடியாது.
முல்லைத்தீவு நில மீட்புப் போராட்டம் தமிழர் தரப்புக்களது ஒற்றுமைக்கு கட்டியம் கூறியுள்ளது
முல்லைத்தீவில் இடம்பெற்ற நிலமீட்புக்கான போராட்டம் தமிழர்கள் ஒரே அணியில் திரண்டு தமது உரிமைக்காகப் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆளுக்கொரு அணி, ஆளுக்கொரு கொள்கை என்று தமிழர்கள் பிரிந்து காணப்படுவதால் அவர்களுக்கெதிரான திட்டங்களை முன்னெடுப்பது இனவாதிகளுக்கு இலகுவாக ஆகிவிட்டது.
மிகவும் மோசமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் தமிழர்கள், தமக்குள் நிலவுகின்ற வேற்றுமைகளைக் களைந்து ஒரேயணியில் திரண்டு தமது பொது எதிரிக்கு எதிராகப் போராட வேண்டும். முல்லைத்தீவுப் போராட்டத்தை இதற்கொரு உதாரணமாக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைவிடுத்து அவர்கள் தமக்குள் பகைமையை வளர்த்து பல அணிகளாகச் சிதறிக் காணப்பட்டால் மோசமான எதிர் விளைவுகளை அவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டும்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டம் ஓர் ஆரம்பமே என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். தமது உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் தளராது ஒன்று திரண்டு எதிர்காலத்திலும் போராடவேண்டியிருக்கும் என்பதையும் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி- உதயன்