தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் 7 ஆம் திகதி முற்றாக முடங்கும்!

மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி பூரண கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான பசுமை நிறைந்த புல்லுமலை கிராமம் நூறு வீதம் விவசாயமும் கால்நடையும் கொண்ட பசும் சோலை கிராமமாகும்.

இக் கிராமங்களை அண்டி கித்துள், உறுகாமம், தம்பட்டி, வெலிக்காகண்டி என பல கிராமங்கள் உள்ளன. புல்லுமலையுடன் இணைந்த மெருவட்டை சிறு குளமும் அதனை இணைத்தாற் போல் கித்துள், உறுகாமம் குளங்களும் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்தின் உயிர் நாடி உன்னிச்சை, உறுகாமம், கித்துள் குளங்களே. புல்லுமலை பிரதேசத்தில் அமைந்துள்ள பெருவட்டை குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தாற்போல் பெருவட்டை குளத்திற்கும் பதுளை பிரதான வீதிக்கும் இடையில் அமைக்கப்படுவதுதான் தண்ணீர் தொழிற்சாலை.

இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்வர் உரிமை கோரியுள்ளார். இருந்தபோதும் அரபு நாட்டு நிதியைக் கொண்டு இயங்கும் மஹா எனும் நிறுவனத்தின் பெயரிலேயே இந்த தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக விவசாயப் பண்ணை அமைக்கப்படுவதாகவே கூறி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சகல அனுமதிகளும் காதும் காதும் வைத்தாற் போல் நான்கு சுவருக்குள் நடந்து முடிந்து விட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வீழ்ச்சி கூடிய வெள்ளம் பெருகும் காலமான நவம்பர் மாதத்திலேயே நிலத்தின் நீர் மட்டம் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கியது நமது நாட்டின் ஜனாதிபதியின் வசமுள்ள சூழல் சுற்றாடல் அமைச்சேயாகும் .

புல்லுமலையையும் அதனை அண்டியுள்ள பிரதேசத்திலிருக்கும் விவசாய அமைப்புகளிடமோ அல்லது கால்நடை அமைப்புகளிடமோ அல்லது மீன்பிடி அமைப்புகளிடமோ எந்த அறிவுறுத்தலோ அல்லது அனுமதியோ சூழல் சுற்றாடல் அமைச்சு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிமிடம் ஒன்றிற்கு 55 லீற்றர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்டு அரபு நாட்டிற்கு அனுப்பும் இத் திட்டம் மூலம் சுமார் 3 கோடி லீற்றர் நீர் வருடம் ஒன்றிற்கு உறிஞ்சப்படும்.

இதன்மூலம் பசுமையான நில வளம் பாலைவனமாகும் திட்டத்தை கைவிடுமாறு தொடர்ச்சியாக பாராளுமன்றம் தொடக்கம் மாவட்ட அபிவிருத்தி சபை வரை எதிர்ப்புகளும் மக்கள் போராட்டங்களும் எடுத்துச் செல்லப்பட்டும் மக்கள் கருத்திற்கு எந்தவித மதிப்பும் அளிக்கப்படவில்லை.

புல்லுமலை கிராமத்திற்கு தினமும் குடிநீர் பவுசர்கள் மூலமே நீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய சுற்றுச் சூழல் அமைச்சுக்கு எதிராகவும் தண்ணீர் தொழிற்சாலையை அகற்றக் கோரியும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் உணர்வாளர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள், கிராமிய சங்கங்கள், வியாபார சங்கங்கள் , போக்குவரத்து அமைப்புகள், மத அமைப்புகள் என எல்லோரையும் ஒன்றிணைந்து மாபெரும் ஹர்த்தால் ஒன்றின் மூலம் மாவட்டம் முழுவதும் எதிர்ப்பினை காட்ட ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்டிற்குள் முடங்கி வீதிகளை வெறிச்சோட்டும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வராது வீட்டிற்குள் முடங்கியும் மாணவர்கள் பாடசாலையை பகிஷ்கரித்தும் அரச உத்தியோகத்தர்கள் மருத்துவ விடுமுறை பெற்றும் வாகனச் சாரதிகள் அன்றைய தினம் வாகனங்களை செலுத்தாது வீதிகளை வெறிச்சோட்டியும் ஹர்த்தால் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.