ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்!

ஒகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக ஈழத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இந்த நாள் உலக சமூகத்தால் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியே எஞ்சுகிறது. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பல நூறு நாட்கள் எமது மக்கள் தெருவில் கிடந்து போராடினார்கள். இன்றும் கண்ணீரோடும் கம்பலையோடு்ம் அவர்கள் வாழ்கின்றனர். மனிதாபிமானம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசும் இந்த உலகின் மத்தியில்தான் எங்கள் சனங்கள் போராடுகின்றனர்.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இச் செயல்களுக்கு எதிராக அதிக அக்கறையும் கரிசனையும் செலுத்தி செயற்படுவதாக கூறப்படுகின்றது.

ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கியிருப்பவர். ஏன் அழ வேண்டும்? என்பதுதான் அவரது கேள்வி. இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கடமை.எனவே இலங்கை அரசு எனது பிள்ளையை திருப்பித் தரவேண்டும் என்கிறார் செல்லம்மா. காணாமல் போன பிள்ளை என்று அடையாளப்படுத்த விரும்பாத செல்லம்மா எனது பிள்ளையை காணாமல் போன பிள்ளை என்று இலங்கை அரசு சொல்ல முடியாது என்கிறார்.

கையளிக்கப்பட்ட பிள்ளை காணாமல் போவது எப்படி என்று அவர் கேட்கும் கேள்விக்கு இலங்கை அரசு பதில் அளிக்கவில்லை. இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட உயிர்களே காணாமல் போனவர்கள் என்று அரசு கை விரிக்கிறது என்றால் இந்த அரசு மனித உயிர்கள் குறித்தும் தமிழ் இளையர்கள் குறித்தும் என்னவிதமான மனநிலையைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். மனித உரிமை குறித்த இந்த மோசமான அணுகுமுறைக்கு உலகம் இணங்கிப் போவதுதான் உலகில் இன்றைய நாள் குறித்த உண்மை நிலையாகும்.

போரின் இறுதியில் சரணடையவப் போவதாக சொல்லி தனது உடைகளை தாயாரிடம் கையளித்துவிட்டுச் சென்றான் கோபிநாத். எனது பிள்ளை எங்கு சென்றான்? எப்போது வருவான் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே வாழ்கிறார் அவனது தாயார் வாசுகி. படலை திறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை வருகிறார் என்றே என் மனம் நினைக்கும் என்று சொல்கிறார் வாசுகி. நாளும் பொழுதும் கண்ணீரோடு காலத்தை கழிக்கும் இந்த தாயின் கண்ணீருக்கு யார் பொறுப்பு? இத்தகைய தாய்மார்களின் கண்ணீரில் நனையும் ஈழத் தீவு குறித்து இந்த நாளில் இவ் உலகம் என்ன பொறுப்பைச் சொல்லப்போகிறது?

இலங்கையின் புதிய அரசும் தமிழ் ஈழ அன்னையர்களின் கண்ணீரை துடைக்க முன்வரவில்லையே? அகாலத்தில் பறிக்கப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து இந்த அரசு என்ன சொல்லப் போகிறது? இந்த விடயத்தில் ஏன் புதிய அரசும் மௌனம் சாதிக்கிறது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்த ஜெயகலா கைது செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட தன் பிள்ளையின் புகைப்படத்தை ஏந்தியபடி கண்ணீர் சிந்துகிறார். கைது செய்யப்பட்ட மகன் பூசா சிறைச்சாலையில் உயிருடன் இருக்கும் புகைப்படத்தை சாட்சியமாக்கி இந்த தாய் போராடுகிறாள். இப்படி பல்லாயிரம் தாய்மார்கள் உள்ளனர்.

இலங்கையில் நடந்த இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பின்னர் ஒன்ரறை லட்சம் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. இவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். இன உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இலங்கையில் காணாமல் போகச் செய்தல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 1995இல் யாழ்ப்பாணம் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்த காலத்தில் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் ஒர் உபாயமாக காணாமல் போகச் செய்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இன விடுதலைக்காக போராடுபவர்களை காணாமல் செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. இன உரிமை சார்ந்த எண்ணம் அதிகமும் இளையவர்கள் மத்தியில் ஏற்படுகின்றமை காரணமாக இளைய தலைமுறைகளை காணாமல் ஆக்கி ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயலில் இலங்கை அரசு ஈடுபட்டது. இலங்கையைப் பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பேராாட்டம் என்பது ஒரு தலைமுறையைத் தேடும் போராட்டமாகும்.

ஈழத்தில் யுத்தத்தில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஈழம் இருக்கிறது. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான நீதிக்கான போராட்டம் முனைப்பாக இடம்பெற்று வருகிறது. காணாமல் போகின்றவர்கள் மரணமற்றவர்கள். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் வீடுகளில் அந்தப் பிள்ளைகள் குறித்து அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். எந்தக் கணத்திலும் அவர்கள் நினைவுதான். எந்தக் கணத்திலும் அவர்கள் வருகிறார்களா? என்ற எதிர்பார்ப்புத்தான் எஞ்சியிருக்கும்.

இலங்கையின் இனப்பிரச்சினையின் ஒடுக்குமுறையின் தீவிரத்தை காணாமல்; போகச் செய்தல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. முப்பதாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற காணாமல் போகச் செய்தல்கள், ஈழத் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக சந்திக்கும் ஒடுக்குமுறையின் கோரத்தை, இன அழிப்பின் தீவிரத்தை வெகுவாக எடுத்துரைக்கின்றன. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் அவர்கள் காணமால் போகச் செய்யப்பட்டார்கள்? அவர்கள் எங்கிருக்கின்றனர் என்ற கேள்விகளுக்கான பதில்களே ஈழத் தீவின் அமைதிக்கும் நீதிக்கும் அடிப்படையாய் அமைகின்றன.

தீபச்செல்வன்