கண்களைக் கெடுக்கும் திரை ஒளி!

தினமும் நாம் பயன்படுத்தும், கணினி, செல்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றின் திரைகளிலிலிருந்து வெளிப்படும், நீல நிற ஒளி, நம் கண்களை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக ‘சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வந்துள்ள, ஒரு ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது.

வேதி மாற்றம்

இரவில், ஒளிரும் திரையுள்ள கருவிகளை பயன்படுத்துவதால், ‘சர்க்காடியன் ரிதம்’ எனப்படும் நம் உடலின் பகல் -இரவு நேர கதியை உணரும் திறன் பாதிக்கப்படுவதை, ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது துாக்கம், மூளையின் செயல் திறன், உடலியக்கம் போன்றவற்றை பாதிக்கிறது.

என்றாலும் திரைக் கருவிகளிலிருந்து வெளியேறும் ஒளியில், நீல நிறம் கண்களில் உள்ள ஒளி உணர் திறனை நேரடியாக பாதிப்பதை, அந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் டொலீடோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் உறுதி செய்துள்ளனர்.

நீல நிற ஒளி, நம் விழித்திரையில் உள்ள ஒளிவாங்கிகளில் இருக்கும் ‘ரெடீனல்’ என்ற மூலக்கூறுகளை நிலைகுலையச் செய்கின்றன. ரெடீனல் மூலக்கூறுகள் தான் விழித்திரையில் படும் ஒளியை மூளை உணர்வதற்கு உதவுபவை.  நீல ஒளி படுவதால் ரெடீனல் மூலக்கூறுகள் வேதி மாற்றமடைந்து, விழித்திரையில் உள்ள ஒளிவாங்கிகளை தாக்க ஆரம்பித்துவிடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

வடிகட்டிகள்

சில செல்பேசி நிறுவனங்கள், நீல ஒளியை திரையிலிருந்து வெளியேறாமல் தடுக்கும் வடிகட்டிகளை அறிமுகப்படுத்தியிருப்பதை ஆய்வாளர்கள் பாராட்டியுள்ளனர். எதற்கு வம்பு? திரைக் கருவிகளை பார்க்கும் நேரத்தை முடிந்தவரை குறைப்பது கண்களுக்கு நல்லது.