வாங்கிய சில மாதங்களில் மொபைல் போனின் திரை உடைந்து விடுவது பரவலாக நடக்கிறது. அதுவும் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ‘ஸ்மார்ட் போன்’ விரிசல் கண்டது என்றால், வாங்கியவரின் துயரத்தை சொல்லவே வேண்டியதில்லை.
அடுத்த ஆண்டு முதல் கிடைக்கவிருக்கும் அதிக விலை சாம்சங் ஸ்மார்ட் போன்களில் உடையாத, ஓ.எல்.இ.டி., திரை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இதற்கான அங்கீகாரத்தை, அமெரிக்க அரசு சார்பில் சான்று வழங்கும், ‘அண்டர்ரைட்டர்ஸ் லேபாரட்டரீஸ்’ என்ற அமைப்பிடம் பெற்றிருக்கிறது சாம்சங்.
ஓ.எல்.இ.டி., திரையை தயாரிக்கும் இடுபொருட்களில் புதுமையை புகுத்தியிருப்பதோடு, அதன் வெளிப்பாகத்தில் கண்ணாடிக்குப் பதில், வலுவூட்டப்பட்ட புதிய வகை பிளாஸ்டிக்கையும் வைத்திருப்பதால், சாம்சங்கின் தொடு திரைகள் உடையாமல் இருப்பதோடு, வளைத்தாலும் பாதிப்படையாது.
சோதனைகளின் போது, 6 அடி உயரத்திலிருந்து, ‘தொப்’பென்று போட்டாலும் உடையாமல் இருந்ததோடு, ஒரு சுத்தியலால் பலமாக அடித்த பிறகும் சாம்சங்கின், ஓ.எல்.இ.டி., திரை வேலை செய்தது.
மேலும், 71 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் வரை தாக்குப்பிடிக்கிறது இந்தத் திரை. போட்டி போன் தயாரிப்பாளர்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றனரா?