அரை நிமிடத்தில் பல் துலக்க முடியுமா?

சுத்தமாக பற்களை துலக்க, 3 நிமிடங்களாவது தேவை. ஆனால், 30 வினாடிகளில் பற்களை சுத்தம் செய்ய முடியும் என்கிறது, ‘சீஸ்’ (Chiiz) நிறுவனம். இது வடிவமைத்துள்ள சீஸ் என்ற பல் துலக்கும் கருவி, பார்ப்பதற்கு பாட்டியின் பல் செட் போலவே இருக்கிறது.

சீஸ் பிரஷின் மேல் பற்பசையை போட்டு, மேல், கீழ் பற்களில் வைத்து லேசாக கடித்துக்கொண்டு, ‘ஆன்’ செய்தால் போதும்.

நடுவே இருக்கும் ஒலி அலைகளை எழுப்பும் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். பிரஷின் நார்கள் அதிர்ந்து, நுரை கிளம்பி பற்களின் இண்டு இடுக்குகளை அசைக்க, அழுக்கு, உணவுத் துணுக்குகள் போன்றவை ஆட்டம் கண்டு நுரையோடு வந்துவிடும். பற்கள் பளிச்.

ஒலி அலை ஏற்படுத்தும் அதிர்வுகளால், வினாடிக்கு, 25 ஆயிரம் தடவை பிரஷ்ஷை தேய்த்தது போன்ற பலன் கிடைக்கும் என்கின்றனர், இதன் வடிவமைப்பாளர்கள். இத்தனையும், 30 வினாடிகளுக்குள் முடிந்துவிடும் என்பது தான், அதிகாலை அவசரக்காரர்களுக்கு ஆறுதலான செய்தி.

‘கிக்ஸ்டார்டர்’ இணைய தளத்தில், சீஸ் பிரஷ் அறிவிக்கப்பட்டவுடனே, 1.35 கோடி ரூபாய் அளவுக்கு சீஸ் பிரஷுக்கு ஆர்டர்கள் குவிந்துவிட்டன!