உலகிலேயே மிக அடர்த்தியான, எஸ்.எஸ்.டி எனப்படும், ‘சாலிட் ஸ்டேட் டிரைவ்’ ஒன்றை இன்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறிய அளவுள்ள இந்த டிரைவ், 32 டெரா பைட் அளவு தகவல் கொள்திறன் கொண்டது.
பெரும் நிறுவனங்கள் தகவல் சேகரித்து வைக்கும், ‘டேட்டா சென்டர்’கள் முதல் இணையத்திற்கு பாலமாக இருக்கும் பிரமாண்ட, ‘சர்வர்கள்’ வரை அடியோடு மாறப்போகின்றன.
இந்த மையங்களில், சர்வர்கள் ஏராளமான இடத்தை அடைத்தபடி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சி, அதிக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருப்பவை. இந்த வெப்பத்தை தணிக்கவே நிறைய செலவு செய்யவேண்டும்.
இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் செய்யவிருக்கிறது இன்டெல்லின் புதிய, சில்லு.
எஸ்.எஸ்.டி.டி.சி., பி4500 என்ற முரட்டுப் பெயர் கொண்ட இந்த சில்லுவின் நீளம், 30.5 செ.மி., அகலம், 3.8 செ.மீ. தடிமன் வெறும், 0.8 செ.மீ.,தான். பார்ப்பதற்கு இரும்பு ஸ்கேல் போலத் தெரிகிறது. ஆனால், வழக்கமான ஒரு சர்வரில் சர்க்யூட்டை பொருத்தும் ‘ஸ்லாட்’டில், இன்டெல்லின் புதிய, எஸ்.எஸ்.டி., சில்லுகளில், 32 சில்லுகளை மாட்டிவிட முடியும். அதாவது மொத்தம், 1 பெட்டா பைட் தகவல்களை அத்துணுாண்டு இடத்தில் அடக்கிவிட முடியும். இந்த சில்லுகள் அதிக வெப்பத்தை கக்காது. எனவே சாதாரண ஹார்டு டிஸ்கிற்கு தேவையான காற்றோட்டமே போதும் என்கிறது இன்டெல்.
முதலில் கூகுள், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம்., போன்ற பெருங்கணினி நிறுவனங்கள் தான் இதை வாங்கும். பிறகே, சிறு நிறுவனங்களும் இதை நாடும். தனி நபர் உபயோகத்திற்கு இது கிடைக்க, சில ஆண்டுகள் ஆகும்.