வடக்கு மாகாண சபை, தனது ஆயுள் முடிவடைவதற்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்தவருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இத்தகையதொரு பின்னணியில், வடக்கு மாகாண சபைக்காக நடைபெறப்போகும் புதிய தேர்தலை பெரும்பான்மைக் கட்சிகள் இலக்கு வைத்து அதற்கேற்ப காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது.
தென்னிலங்கைக் கட்சிகளின் வடக்கு நோக்கிய வருகை
கூட்டு அரசின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வடக்கு தமிழ்மக்களது ஆதரவை ஈட்டிக்கொள்ளும் முனைப்பில் வடக்குநோக்கித் தமது பார்வையை திருப்பியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, அமைச்சர் ரிசாத் பதியூதின் ஊடாக வன்னி மாவட்ட தமிழ்மக்களது வாக்கு ஆதரவுக்காக வலை வீசுகிறது. யாழ்.மாவட்டத்து மக்களது ஆதரவை ஐ.தே.கட்சிக்கு ஈட்டிக்கொள்ள ஐ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் ஊடாகக் காய் நகர்த்துகின்றது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி, வன்னி மாவட்ட வாக்காளர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் ஊடாகவும், யாழ்ப்பாணப் மாவட்ட மக்களது ஆதரவை ஈட்டிக் கொள்ள சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும்,பிரதி அமைச்சருமான அங்கஜன் ராமநாதன் ஊடாகவும் வியூகம் வகுத்துச் செயற்படுகின்றன.
அரச தலைவர், தலைமை அமைச்சர் இருவரினதும் தொடர்ச்சியான வடக்கு நோக்கிய வருகைகள்கூட மிக விரைவில்இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்துத்தானா என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதுவே யதார்த்தமும்கூட.
என்ன செய்கிறது கூட்டமைப்பு?
முன்னைய காலகட்டங்களைப் போன்றல்லாது, தென்னிலங்கைக் கட்சிகள் இவ்வாறு வடக்கில் மும்முரமாக தேர்தலில் களமிறங்க முக்கிய காரணம், நடந்து முடிந்த உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தமைதான் என்பது தெட்டக்தெளிவாக புலப்படும் உண்மையாகும்.
ஆனால் கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய தேர்தல் நடைமுறையொன்றுக்கு அமைய நடத்தப்பட்டதாலேயே தமது வாக்கு வங்கி சரிந்தது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காரணம் முன்வைப்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முன்னைய பலம் வாய்ந்த நிலையில் தற்போது இல்லை என்பது, கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்கிற நிலையில் தெட்டத் தெளிவாகப் புலப்படும் உண்மை நிலையாகும்.
சம்பந்தரும் விக்னேஸ்வரனும் தத்தமது ‘ஈகோ’வைக் கைவிட வேண்டும்
அண்மைக் காலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற பிளவுகள், கருத்து மோதல்கள் என்பவை அந்த அமைப்பு நலிவடையக் காரணமாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும், அவரது தயவால் வடக்கில் ஆட்சிபீடம் ஏறிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் எதிரெதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருப்பது தமிழர்களின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு நல்ல அறிகுறியல்ல.
இருவரும் தத்தமது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காத தன்மையைக் கைவிட்டு (ஈகோ) தமக்கிடையே பேச்சு நடத்த வேண்டும். முதல்வர் அணி, சம்பந்தரின் அணி என்கிற எண்ணவோட்டங்களை விடுத்து, தமிழர்களின் அணி என்கிற வகையில் அவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின் தென்னிலங்கைக் கட்சிகளின் ஊடுருவல் பிசுபிசுத்துப்போய்விடும் . இல்லாவிடில் தென்னிலங்கைப் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதிக்கம் வடபகுதித் தேர்தலில் கணிசமான அளவுக்குஆதிக்கம் செலுத்தும் நிலை தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்.
நன்றி-உதயன்