நடனத் திறனால் வியக்க வைத்த ஜெயலலிதா!

இந்திய பண்பாடு, அதோடு கலந்த தமிழர்களின் பண்பாடு மற்றும் பிரிட்டீஷ் நாகரிகம் இந்த மூன்றையும் தனக்குள் வசீகரித்துக்கொண்டு, தனித்து விளங்கிய ஓர் ஒப்பற்ற பெண்மணி தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் ஷூட்டிங்கை முதன் முதலில் நான் பார்த்தது 1975-ம் ஆண்டு ஏவி.எம். ஸ்டூடியோவில் தான். ஒருநாள் மாலை வேளையில் இயக்குனர் மகேந்திரன் என்னிடம் வந்து, ‘ஜெயலலிதா அம்மாவை ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப் போகிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா?’ என்று கேட்டார்.

நான் அதுவரை ஜெயலலிதா பட ஷூட்டிங்கை பார்த்ததில்லை என்பதால், அதிக ஆவலுடன் சென்றேன். ஏவி.எம்.-ல் நுழைந்தவுடன் முதலில் தயாரிப்பாளரும், இயக்குனரும், கதாசிரியருமான வி.சி.குகநாதன் அறைக்குச் சென்றோம். அங்கிருந்து ஏவி.எம்.-ல் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றோம். நடிகர் முத்துராமனையும், ஜெயலலிதாவையும் வைத்து, எஸ்பி.முத்து ராமன் இயக்கத்தில் வி.சி.குகநாதன் எடுத்துக் கொண்டிருந்த படம் அது. அந்தப் படத்தின் பெயர் ‘அன்புத் தங்கை.’

நாங்கள் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழையும்பொழுது ஜெயலலிதா நாற்காலியில், கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி, ஒரு பெரிய ஆங்கில புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அன்றைக்கு நடந்த படப்பிடிப்பில், ஜெயலலிதா பரதநாட்டியம் ஆடுவதுபோன்ற நடனக் காட்சியை எஸ்பி.முத்துராமன் படமாக்கிக் கொண்டிருந்தார். நடன அமைப்பு தங்கப்பன் மாஸ்டர். ஜெயலலிதா ஆட வேண்டிய நடன அசைவுகளை தங்கப்பன் மாஸ்டர் ஒரு முறை தான் சொல்லிக் கொடுத்தார்.

உடனே இசைக்கு ஏற்றபடி ஆடிக் காண்பித்தார், ஜெயலலிதா. பிறகு நேராக டேக்குக்கு ரெடியானார். ஒரே டேக்கில் அந்த நடன அசைவுகளை ஆடி முடித்தார். நடன அசைவுகளுக்கும், இசைக்கும் ஒரு வினாடி கூட வேறுபாடு இல்லாதவாறு ஆடி முடித்திருந்தார். அதை எஸ்பி.முத்துராமன் சிறப்பாக படமாக்கினார்.

நான் பல நடிகைகளின் நடன காட்சிகளை படப்பிடிப்பின்போது பார்த்திருக்கிறேன். மூன்று, நான்கு முறை ஒத்திகை பார்ப்பார்கள். பின் ஒருமுறை மானிட்டர் பார்த்துவிட்டு டேக்கிற்கு போவார்கள். ஆனாலும் டேக்கை ஐந்து அல்லது ஆறு முறை எடுப்பார்கள். பின்புதான் ஒரு டேக், ஓகே ஆகும். அதுவும் இசைக்கும், நடன அசைவுக்கும் அரை வினாடி, ஒரு வினாடி வேறுபாடு இருக்கும். அதை தொழில்நுட்பத்தில் சரி செய்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் நடனத் திறமையை எண்ணி வியந்தேன். நடன காட்சி முடிந்தவுடன் மறுபடியும் நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டு, ஆங்கில புத்தகத்தை ஏற்கனவே விட்ட இடத்தில் இருந்து திரும்பவும் படிக்க ஆரம்பித்தார். அப்போது மகேந்திரன் ஜெயலலிதாவிடம் சென்று ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்தார்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் 1978-ம் ஆண்டு நடிகர் ஜெய்கணேஷ் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு ஜெயலலிதா வருகை தந்தார். ஜெய்கணேஷின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்ததால், விருந்தினர்களை வரவேற்கும் இடத்தில் நான் இருந்தேன். பச்சை நிற கார், டொயோடா என்று நினைக்கிறேன். அதில் வந்து ஜெயலலிதா இறங்கினார். மிக நாகரிகமாக புது வீட்டிற்கு சற்று தூரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்து வந்தார். அன்று அவரைவிட புகழிலும், பணத்திலும், அந்தஸ்திலும் குறைவானவர்கள், காரை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு பந்தாவாக உள்ளே வந்தார்கள். ஆனால் ஜெயலலிதா மிகவும் எளிமையாகவும், நாகரிகமாகவும் நடந்து கொண்டது, எனக்கு இன்றைக்கும் நன்றாக நினைவில் இருக்கிறது.

மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை நான் பார்த்தது, 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மறைந்த அன்று. ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உடல் அருகே தலைமாட்டில் ஜெயலலிதா நின்று கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரின் கால்மாட்டில் நான் நின்று கொண்டிருந்தேன். அரைமணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்தோம். அந்த சூழ்நிலையில் அவரிடம் எதுவும் பேச முடியவில்லை.

11-12-2010 அன்று ஜெயலலிதாவை நான்காவது முறையாக நான் பார்த்தது, எனது மகள் திருமண பத்திரிகையை கொடுக்கும்போது. 2011-ம் ஆண்டு, ஜனவரி 20-ந் தேதி நடக்க இருந்த எனது மகளின் திருமண பத்திரிகையை கொடுப்பதற்காக, டிசம்பர் 5-ந் தேதி போயஸ் கார்டனுக்கு போன் செய்தேன். போனை எடுத்து பேசிய பூங்குன்றன், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்.

‘அம்மாவை பார்த்து என் மகளின் திருமண பத்திரிகை கொடுக்கவேண்டும்’ என்றேன்.

‘அம்மா கொடைநாடு சென்றிருக்கிறார்கள். நாளைக்கு போன் பண்ணுங்கள்’ என்று கூறி வைத்து விட்டார்.

அதன்படி அடுத்தநாள் போன் செய்தேன். ‘அம்மா உங்களை 11-ந் தேதி மாலை மூன்று மணிக்கு வரச் சொன்னார்’ என்றார்.

காரின் பெயர், நிறம், எண்கள், எத்தனை பேருடன்.. அதுவும் யார் யாருடன் வருகிறீர்கள் என்பதையெல்லாம் கேட்டுக் குறித்துக் கொண்டார். அன்று மதியம் சரியாக 2 மணி 57 நிமிடத்திற்கு போயஸ் கார்டன் சென்றோம். வழியில் காவலுக்கு நின்ற காவல் துறையைச் சேர்ந்தவர்கள், காரின் பெயரையும், நிறத்தையும், எண்ணையும் பார்த்துவிட்டு, எனக்கும் மரியாதை செய்து ‘போங்கள்’ என்றார்கள்.

சரியாக மூன்று மணிக்கு கேட்டின் முன்பு சென்றோம். எங்களது காரை பார்த்த வுடன் வாசல் கதவு இரண்டும் திறந்தன. நான் டிரைவரிடம் ‘போர்டிகோவிற்கு முன்பாகவே காரை நிறுத்தி விடு’ என்றேன். அதன்படியே நிறுத்தினார்.

என்னுடன் என் மனைவியும், என் மகன் தீபக்கும் இருந்தனர். நாங்கள் மூவரும் காரில் இருந்து இறங்கியதும், மெட்டல் டிடெக்டர் வைத்திருப்பவர் எங்களை பரிசோதிக்கவில்லை.

நான் எங்களை பரிசோதிக்கும்படி கேட்டேன். அவர் ‘தேவையில்லை’ என்று சொல்லிவிட்டு, எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார். மூவரும் உள்ளே சென்றோம். ஒவ்வொரு கதவாக திறந்து கொண்டே சென்றது. கடைசியாக ஒரு அறையில் அரசியல் கட்சியினர் சிலர் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே சென்ற நாங்கள் மூவரும் காலியாக இருக்கும் ஷோபாவில் உட்காருவதற்கு திரும்பினோம்.

அப்போது எங்கள் நெஞ்சருகே ஒரு பெண்மணி மூன்று காபி கப்பை வைத்தபடி நின்று கொண்டிருந்தார். சினிமாவில் கூட இப்படிப்பட்ட ஒரு ஷாட்டை, அவ்வளவு சரியாக எடுக்க முடியாது. ஒரு ராணுவ முகாமில் நடைபெறும் நடவடிக்கையைப் போல் அந்த வரவேற்பு, அவ்வளவு துல்லியமாக இருந்தது.

நாங்கள் உட்கார்ந்த பிறகு, அந்த அறையில் இருந்த அனைவரையும் ஜெயலலிதா அவரின் தனிப்பட்ட அறைக்கு அழைத்தார். நாங்கள் உட்கார்ந்து அரை மணி நேரம் ஆகியது.

என் மனைவி, என் காதருகே வந்து ‘நம்மை பார்ப்பார்களா? இல்லை.. வேறு யாராவது பத்திரிகையை வாங்கிக் கொள்வார்களா? நம்முடன் பேசுவார்களா?’ என்று பெண்களுக்கே உரிய சந்தேக எண்ணத்தோடு கேட்டார்.

நான் எனது வாயை கையால் மூடிக்கொண்டு, ‘சுற்றி மூன்று நான்கு கேமராக்கள் இருக்கிறது. எதுவும் பேசாதே. அவர் பெரிய நடிகை. நம்முடைய உதட்டு அசைவுகளிலேயே நாம் என்ன பேசுகிறோம் என்பதை கண்டுகொள்வார். அவர் நம்மை கண்டிப்பாக பார்ப்பார்்’ என்று உறுதியுடன் கூறினேன்.

நான் என் மனைவியிடம் கூறியபடி, 45 நிமிடங்கள் கழித்து ஜெயலலிதா எங்களை அழைத்தார். அவருக்கு மிகவும் பிடித்த நிறமான பச்சை நிறத்தில், நல்ல சால்வை ஒன்றை வாங்கிக்கொண்டு வந்திருந்தேன். அந்த சால்வையை நான் வைத்துக்கொண்டேன். தட்டில் பழங்களுடன் பத்திரிகையை சேர்த்து என்னுடைய மனைவி வைத்துக்கொண்டார்.

நாங்கள் மூவரும் ஜெய லலிதாவின் அறைக்குள் நுழைந்தோம். அறைக்குள் அவர் நின்றுகொண்டு எங்களைப் பார்த்து வரவேற்கும் முறையில் கும்பிட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவரைப் பார்த்து நாங்கள் வணங்கியது என்பது, பதிலுக்கு வணக்கம் சொல்வதைப் போல் இருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டுப்படி விருந்தினர்களை வரவேற்கும் முறையில், எங்களை வரவேற்பதில் முந்திக் கொண்டார். ‘இதனால் தான் தமிழ்நாட்டின் முதல் பெண்மணியாக வர முடிந்ததோ!’ என்று எண்ணிக்கொண்டேன்.

நாங்கள் மூவரும் அவரது காலில் விழுந்து வணங்கினோம். அதன்பின்பு எங்களை உட்காரச் சொன்னார். நாங்கள் உட்கார்ந்த பின்பு தான், அவர் அமர்ந்தார். என் மனைவியையும், மகனையும் பார்த்து ‘இவர்கள் யார்?’ என்று கேட்டார். நான் அவர்களை முறையாக அறிமுகப்படுத்தினேன்.

‘என்ன விஷயமா வந்திருக்கிறீர்கள்?’ என்றார்.

‘எனது மகளின் திருமணம் ஜனவரி 20-ந் தேதி (20-1-2011) நடக்க இருக்கிறது. அதற்கு நீங்கள் அவசியம் வரவேண்டும். வந்து மண மக்களை ஆசீர்வதிக்கவேண்டும்’ என்றேன்.

‘திருமணம் எங்கு நடக்கிறது?’ என்றார்.

‘அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள கதீட்ரல் சர்ச்சில் நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வரவேற்பு நடக்கிறது’ என்று கூறினேன்.

கதீட்ரல் சர்ச் என்றவுடன், ‘நான் ஏற்கனவே பி.எச்.பாண்டியன் வீட்டில் நடந்த ஒரு திருமணத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு அந்த சர்ச் நன்றாகத் தெரியும். நான் திருமணத்திற்கு நிச்சயம் வருகிறேன். ஆனால் வரவேற்பிற்கு என்னால் வர இயலாது’ என்று வெளிப்படையாகக் கூறினார்.

வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான், நக்கீரனில் வெளியிட்ட வணக்கம் என்கிற புத்தகத்தில் ஒருமுறை, ‘எம்.ஜி.ஆர். மற்றவர்கள் நினைப்பது போல் அல்ல, அபூர்வமானவர். அறிவில் ஒரு கமல்ஹாசன், ஜெமினிகணேசன், ராஜேஷ் எல்லாம் சேர்ந்தவர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதை ஜெயலலிதா படித்திருப்பார் என நினைக்கிறேன்.

அதனால் என்னிடம், ‘என்ன ராஜேஷ்! நீங்கள் பெரிய அறிவாளியாமே. நிறைய படிப்பீர்களாம், நல்ல மேடைப் பேச்சாளராம், உங்களுக்குத் தெரியாத விஷயம் எதுவுமே இல்லையாம், நீங்கள் ஒரு என்சைக்ளோப்சடியா என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?’ என்று என்னை மனதார பாராட்டிக் கேட்டார்.

உடனே நான் ‘உங்களுடைய அறிவிற்கும், புத்திக்கூர்மைக்கும், சாதனைகளுக்கும் முன்னால், நான் ஒன்றுமே இல்லையம்மா’ என்றேன். நான் கூறிய கருத்தையும் விமர்சனத்தையும் கேட்டவுடன், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று அடக்கத்துடன் மறுத்தார். அதில் தான் அவருடைய பெருந்தன்மையும், நாகரிகமும் அடங்கியிருந்தது.

என் படிப்பைக் கேட்டார்.. அவர் படிப்பைச் சொன்னார். சரிதாவுடன் நான் நடித்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தை ரசித்ததாகக் கூறினார். எம்.ஜி.ஆர். என் தங்கை திருமணத்திற்கு வந்ததை, அவருடன் பகிர்ந்து கொண்டேன். பல விஷயங்களை 45 நிமிடங்கள் பேசி முடித்த பிறகு, ‘வேறு ஒன்றுமில்லையே’ என்றார்.

‘ஒன்றுமில்லை அம்மா. நீங்கள் திருமண வரவேற்பிற்கு வரவேண்டும். அவ்வளவு தான்’ என்றேன். ‘கண்டிப்பாக வருகிறேன்’ என்றார்.

ஆனால் பல்வேறு பணிச் சூழல் காரணமாக அவரால் என்னுடைய மகள் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. இன்றைக்கு துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், கலைராஜன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவரை ஜெயலலிதா அனுப்பி வைத்திருந்தார். மேலும் தனது முக்கிய உதவியாளரான மகாலிங்கத்திடம் ஒரு வெள்ளித் தட்டும், மலர்க் கொத்தும் கொடுத்து, தான் வர முடியாததற்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு கையெழுத்திட்ட கடிதத்தையும் அனுப்பியிருந்தார்.

என்னுடைய குடும்ப விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கலைஞர், சிவாஜி அண்ணன் போன்றவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அந்த வகையில் ஜெயலலிதா மட்டும் கலந்துகொள்ளவில்லை என்ற மனக்குறை இன்னும் என் நெஞ்சில் நிழலாடியபடியே இருக்கிறது.

40 ஆண்டுக்குப் பின் கேட்ட மானசீக மன்னிப்பு

எனது மகளின் திருமண பத்திரிகையை ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். எங்களுடைய கார், ஜெயலலிதா கார் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதுவும் கார் ஸ்டார்ட் செய்யப்பட்டு, ஏ.சி. போடப்பட்டிருந்தது.

கார் ஓட்டுனரிடம் சற்று கோபம் கலந்த தொனியில், ‘எதற்காக இந்த இடத்தில் காரை நிறுத்தி, ஸ்டார்ட் செய்து, அதுவும் ஏ.சி. போட்டு வைத்திருக்கிறீர்கள்?. என்ன அவசரம்?’ என்றேன்.

அதற்கு அவர் “அம்மாவின் உதவியாளர்களில் ஒருவர், 10 நிமிடத்திற்கு முன்பாக வந்து ‘காரை ஸ்டார்ட் செய்து ஏ.சி. போட்டு வைக்கும்படி அம்மா கூறினார்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்” என்றார்.

பிறகு நாங்கள் காரில் ஏறி புறப்பட்டோம்.

என்னுடைய எண்ண ஓட்டம்.. 40 ஆண்டுகள் பின்நோக்கி ஓடியது..

1968-ம் ஆண்டு நான் சென்னைக்கு வந்த சமயம், இயக்குனர் மகேந்திரன் மூலம் எனக்கு திரையுலகத்தில் உள்ள சிலர் அறிமுகமானார்கள். அவர்களின் மூலமாக ஜெயலலிதா பற்றி நான் கேள்விப்பட்டது என்னவென்றால், காலையில் இருந்து ஸ்டூடியோவில் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு மதியம் 1 மணிக்கு படப்பிடிப்பு முடியும். ஆனால் மதியம் 12.30 மணிக்கே வீட்டில் உள்ள அறைகளில் ஏ.சி. போட்டு வைக்கச்சொல்வாராம். அவர் வந்து வீட்டிற்குள் காலடி வைக்கும் பொழுது, ஏ.சி. முழு மூச்சுடன் அவரை குளிர வைக்குமாம்.

இந்த செய்தியை கேள்விபட்டவுடன், ‘என்ன ஒரு நிலப்பிரபுத்துவ சுகம்’ என்று பாட்டாளி வர்க்கப் பார்வையில் இருந்து நான், ஜெயலலிதாவை விமர்சனம் செய்திருக்கிறேன்.

ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய காரை 10 நிமிடத்திற்கு முன்பாகவே ஸ்டார்ட் செய்யச் சொல்லி, அதுவும் ஏ.சி. போடச் சொன்ன அந்த மனித நேயத்தையும், பண்பாட்டையும் எண்ணி வியந்தேன். என்னை நினைத்து மனதிற்குள் வெட்கப்பட்டேன். மானசீகமாக அவரிடம் மன்னிப்பும் கேட்டேன்.

அன்றைக்கு வந்த என் கார் ஓட்டுநர், தி.மு.க. அனுதாபி. அவரும் கூட அன்று ஜெயலலிதா நடந்து கொண்ட நாகரிகத்தையும், பண்பாட்டையும் வியந்து பாராட்டினார்.

-நடிகர் ராஜேஷ்