நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநேகமானோர் காணாமல்போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பரிசீலிக்கும் போது ஆசியாவில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியிலேயே அதிகமானோர் காணாமல் போயுள்ள நாடாக இலங்கை உள்ளது.முன்னைய ஆணைக்குழுக்களின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் தற்போது பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்று காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் அலுவலகம் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது. அந்நிகழ்வு தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை காணாமல்போனோர் அலுவலகத்தினால் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பின் போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணாமல்போனோர் அலுவலகம் எதிர்வரும் 30ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் அலுவலகம் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் மனித உரிமை ஆணையாளர் தீபிகா உடகம விசேட உரையாற்றவுள்ளதுடன், காணாமல்போனோரின் உறவினர்களும் உரையாற்றவுள்ளனர்.
இந்த நிகழ்வு ‘’காணாமல்போதல் இனி நிகழக்கூடாது” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள அதேவேளை, காணாமல்போனோர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இது ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் காணாமல்போனோர் அலுவலகம் நடத்தியிருந்த மக்கள் சந்திப்புக்களில் இருந்தும், சிவில் சமூக அமைப்புக்களுடனான சந்திப்புக்களில் இருந்தும், காணாமல்போனோர் அலுவலகத்தின் அனுபவங்களில் இருந்தும் ஆராயப்பட்டுக் கண்டறியப்பட்ட பரிந்துரைகள் உள்ளடங்கியதாக மேற்படி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் குறிப்பாக காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான நிவாரணத்தொகை, உண்மையைக் கண்டறிதல் மற்றும் காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கான நீதியைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
2018 ஆம் ஆண்டில் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டதுடன், வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. எனவே காணாமல்போதல் தொடர்பில் முக்கிய செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ள இவ்வாண்டில், இனிமேலும் காணாமல்போதல் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் எனும் நோக்கிலேயே இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையில்,
தற்போது மக்கள் சந்திப்புக்கள் மூலமும், முன்னைய ஆணைக்குழுக்களின் மூலமும் காணாமல்போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மாதங்களில் அலுவலகத்திற்கான விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு காணாமல்போயுள்ள நபரின் குடும்பத்திற்கான சான்றிதழை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும், காணாமல்போனோரின் உறவினர்கள் அதனைப் பெற்றுக்கொள்வதில் கூடிய கவனம் செலுத்தவில்லை. மாறாக தமது உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது.
மேலும் காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுவதில் தடைகளை விட சவால்களே அதிகமாக உள்ளன. காரணம் இது சுயாதீன ஆணைக்குழு எனும் போதும், அலுவலகம் சில கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அத்தோடு காணாமல்போனோர் அலுவலகத்திற்கு இவ்விடயம் தொடர்பில் செயற்படத்தக்க சிறப்புத்தேர்ச்சியும், தொழில்நுட்ப ரீதியான தேர்ச்சியும் உள்ள சர்வதேச அதிகாரிகள் இருப்பார்களாயின் அவர்களையும் அலுவலகத்தில் இணைத்துக்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார்.