நாட்டை சீரழிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டும்!

யுத்தத்தை காரணம் காட்டியே வடக்கு மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் அரசியலை மேற்கொள்கின்றனர் என குற்றம் சுமத்தும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் வகமுல்ல உதித்த தேரர் நாட்டை சீரழிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டுமென தெரிவித்தார்.

தேசிய பிக்குகள் தினத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி நினைவுகூறவிருக்கும் புத்தசாசன பிக்குகள் அத்தினத்தை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்த ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று புத்தசாசன கலாசார மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டவர்களிடமிருந்து சுதந்திரமடைகையில் இலங்கை பிரஜையின் தனிநபர் கடன் தொகை 70 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று இது 480,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. அரசியல்வாதிகள் அரசியல் துறையிலும் பொருளாதாரத்திலும் கண்ட தோல்வியே இந்நிலைமைக்கு முக்கிய காரணமாகும்.

2017 வரவு செலவு கணக்கின் படி 1800 மில்லியன் வருவாய் உள்ள இடத்தில் 2500 மில்லியன் செலவு உள்ளது. இதன்படி 700 மில்லியன் துண்டுவிழும் தொகை. இந்த அதிகரித்த செலவீனத்தை சரிசெய்ய மேலும் மேலும் கடன் வாங்குகின்றோம்.

இவ்வாறு அடிக்கடி இலங்கைக்கு கடன் தர முன்வரும் நாடுகள் அவர்களின் அரசியல் நோக்குகளை எமது நாட்டின் நோக்காக மாற்றும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதாரத்தை வளர்ச்சிக்கான செய்வதற்காக எமக்கென்று எதுவித தீர்மானங்களும் இல்லாமல் செயற்படுகின்றோம். இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டிய அரசியல் தலைமைகள் யுத்ததை காரணம் காட்டி தங்களது சுயநல அரசியலை முன்கொண்டு செல்கின்றனர்.

இதற்காக நாட்டு மக்கள் மத்தியில் இனவாதம், மதவாதங்களை தோற்றுவித்து எம்மை தனி தனி குழுக்களாக பிரிவித்துள்ளனர். இவ்வாறான அரசியல் நிலைப்பாட்டை மாற்றி நாம் ஒன்றிணைந்தால் ஒழிய நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து எம்மால் சிந்திக்கவே முடியாது.

வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்கையில் இன,மத பிரிவினைகளின்றி நாட்டு மக்கள் என்ற ரீதியிலேயே போராடினர். இந்நிலை மீண்டு வருமாயின் நாட்டை சீரழிக்கும் இந்த அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்க முடியும்.

இல்லையாயின் இந்த சிங்கபூர், சீன, இந்திய, எட்கா போன்ற ஒப்பந்தங்களுக்கும், 19 ஆவது 20 ஆது சீர்த்திருத்தங்களும் நாம் முகம் கொடுத்து சுயநல அரசியல்வாதிகளின் தீர்மானங்களையே எமது தீர்மானங்களாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டியேற்படும்.

சாதாரண தர உயர்தரங்கள் கூட இல்லாத அரசியல் தலைமைகள் நாட்டின் வளர்ச்சிக் குறித்து சிந்திக்க மாட்டார்கள். எங்கு நாட்டை அடகு வைக்க முடியும் என்பது குறித்தே அவர்களது சிந்தனை காணப்படும்.

இப்படியான ஒரு அரசியல் கலாசாரத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டும். வெளிநாட்டர்வகளிடமிருந்து நாட்டை மீட்டு விட்டோம். இந்த சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்க அணிதிரல்வோம் எனவும் உதித்த தேரர் கேட்டுக்கொண்டார்.