வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் திகதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற உறுதி கொண்டு வடகொரியா, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த நிலையில் டிரம்ப், ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின்போது அவர் கூறுகையில், “வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுதங்களை கைவிடுவாரா, மாட்டாரா என்பதில் பரவலாக சந்தேகங்கள் இருந்தாலும்கூட, அவர் சொன்னபடி அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். வடகொரியாவுடன் பல நல்ல விஷயங்கள் நடந்து உள்ளன. இந்த விஷயத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சீனா உதவிகள் செய்யவில்லை. அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சினைகள்தான் இதற்கு காரணம்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “வடகொரியா அணு ஆயுதங்களை சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன். அவர்கள் ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதையும் நிறுத்தி உள்ளேன். ஜப்பான் இதைக் கண்டு சிலிர்த்துப்போனது. இனி என்ன நடக்கப்போகிறது? யாருக்கு தெரியும்? நாங்கள் மீண்டும் சந்திக்கப்போகிறோம்” என்று குறிப்பிட்டார்.