கனவில் மட்டுமே மஹிந்த ராஜகன்ஷ ஜனாதிபதியாக முடியுமெனவும் அவரின் குதூகலமான செயல்களுக்கு வயதுக் கோளாரே காரணமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக் ஷவினால் முடியாது. தோல்வி அடைந்த பின்னர் வீடு செல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வந்தார்.
அதன்பின்னர் பிரதமராக முயற்சித்தார். அது முடியாது போனமையினால் எதிர்க்கட்சி தலைவராக முற்பட்டார். தற்போது மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு கனவு காண்கின்றார். இவ்வாறான செயல்கள் அவருக்கு குதூகலமானவையாகும்.
அது வயது கோளாறாராகும். 70 வயதை தாண்டினால் அதுதான் நடக்கும். எனினும் இது தொடர்பில் உயர்நீதிமன்றம் சென்று விளக்கம் கோர முடியும்.
கேள்வி- ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிட முயற்சிக்கின்றாரே?
பதில் –முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்று என்னிடம் கேட்டு பிரயோசனமில்லை. நான் உயர்நீதிமன்றமும் இல்லை. சட்டத்தரணியும் இல்லை. எனக்கு தெரிந்த வகையில் அரசியலமைப்பின் பிரகாரம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவினால் முடியாது. என்னுடைய பழைய நண்பர் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு குதுகலத்தில் இருந்து வருகின்றார். தோல்வி அடைந்த பின்னர் வீடு செல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக முனைந்தார். அதன்பின்னர் பிரதமராக முயற்சித்தார். அது முடியாது போனமையினால் எதிர்க்கட்சி தலைவராக முற்பட்டார். தற்போது மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு கனவு காண்கின்றார். அது வயது கோளாறாராகும். 70 வயதை தாண்டினால் அதுதான் நடக்கும்.
கேள்வி – மஹிந்த ராஜபக்ஷவிற்கு தேர்தலில் போட்டியிட முடியும் என்று ஜீ.எல்.பிரிஸ்தான் கூறினாரே?
பதில் – 15 வருடங்களுக்கு முன்னரே ஜீ.எல்.பிரிஸின் கருத்துகளை கேட்பதனை நாட்டு மக்கள் நிறுத்தி விட்டார். அவர் தனது கருத்தை தேவையான சந்தர்ப்பத்தில் மாற்றிக்கொள்வார். அவர்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முற்பட்டார். அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியம் என்று கூறினார். அதேபோன்று அதிகார பகிர்வு யோசனையை முதலில் முன்வைத்ததும் அவராகும். அவர்தான் காணி மற்றும் காவல் துறை அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்க வேண்டும் என யோசனை முன்வைத்தார். இந்நிலையில் தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அதனை நிராகரிக்கின்றார். அவர் விடயத்தில் கவலை கொள்ள தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி மீண்டும் களமிறங்க முடியுமா என்பதனை உயர்நீதிமன்றத்தில் சென்று தெளிவுப்படுத்த முடியும்.
கொழும்பில் அமைந்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.