நிலைமாறுகால நீதியை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் இலங்கை குறித்த இரண்டு பிரேரணைகள் சமர்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான நிபுனரும் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான விஷேட அறிக்கையிடும் ஐக்கிய நாடுகள் நிபுனரும் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தயாரித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அமர்வில் பிரஸ்தாபிக்கவுள்ளார். இந்த அறிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் குழப்பத்துடன் அதை எதிர்கொள்ளும் பிரயத்தனங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதற்காக தனியான நிபுணர் குழுக்களை அமைத்து முன்னாயத்தப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. ஆனால் எத்தகைய பிரேரணைகள் இலங்கை அரசுக்கு எதிராக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அல்லது நிறைவேற்றப்பட்டாலும் அதையிட்டு ஆட்சியாளர்கள் அச்சப்படப் போவதில்லை.

ஏன் என்றால் என்னதான் சர்வதேச அழுத்தங்கள் என்று கூறினாலும் அல்லது மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் எதிராக நிறைவேற்றப்பட்டாலும் தற்போதைய ஆட்சியை கவிழ்க்கும் ஆபத்தை இந்த சர்வதேச சமூகம் தற்போதைக்குச் செய்யாது என்ற பெரும் நம்பிக்கையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

சர்வதேச சமூகமானது வெளிப்படையாக இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் கொடுப்பதுபோல் அறிக்கைகள் விட்டாலும், அதுமாதிரியான சில செயற்பாடுகளை செய்வதாக கூறினாலும், உள்ளுர தற்போதைய ஆட்சியாளர்களை பாதுகாத்துக்கொண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சிக்கின்றன என்பது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

உதாரணமாக அமெரிக்கா போன்ற சில நாடுகள் இலங்கையில் பல்வேறு வேலைத்திட்டங்களை பாரிய நிதிச் செலவில் முன்னெடுத்துள்ளதை உணரமுடிகின்றது. நல்லிணக்க வேலைத்திட்டங்கள், வாழ்வாதார வேலைத்திட்டங்கள், சமூக ஐக்கிய வேலைத்திட்டங்கள் என்று பல முகங்களில் தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும், உள்ளுர் அமைப்புக்கள் ஊடாகவும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வேலைத்திட்டங்களின் நோக்கமாக இருப்பது தற்போதைய ஆட்சியாளர்களின் சுமூகமான ஆட்சிச் சூழல் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டாலே இவ்வாறான உதவிகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பதையும், எதிர்காலத்தை நோக்கிய பல நல்ல முயற்சிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள் என்பதையும் சாதாரண மக்கள் மத்தியில் விதைப்பதே இவர்களின் பிரதான நோக்கமாக இருக்கின்றது.

இவ்வாறு செயற்படும் நாடுகள் இந்த அரசாங்கத்தை பாதகமான சூழலுக்குள் தள்ளிவிடப்போவதில்லை, என்ற நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம் செயற்படுவதையே 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அசட்டை செய்து கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் போக்கு உணர்த்துகின்றது.

இந்த ஆட்சியாளர்களை ஆட்சிபீடமேற்றிய சர்வதேச சமூகத்தினர், 2015ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடர்பில் இலங்கை தொடர்பாக பிரேரணையை நிறைவேற்ற முன்மொழிந்தபோது, இலங்கை அரசும் இணைந்து அந்தப் பிரேரணையை நிறைவேற்றியது.

அந்தப் பிரேரணையின் பிரகாரம் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை உருவாக்குதல் என்ற அடிப்படையில், இலங்கையில் நடைபெற்றதான போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நிபுனர்கள் உள்ளடங்கிய நிபுனர்கள் உள்ளடங்கிய விசாரணைப் பொறிமுறையை அமைத்து விசாரிப்பதும் அதில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் கிடைக்கச் செய்வதும் பரிந்துரைக்கப்பட்டது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நம்பகமான பொறிமுறையூடாக விசாரிப்பது, பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினரிடமிருந்து விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு வழி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அரசியல் தீர்வொன்றைக் காண்பது என்பதும் முக்கியமான பரிந்துரையாகும்.

இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்கு இரண்டுவருட கால அவகாசமும் மனித உரிமைப் பேரவையால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதாவது 2017ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென சர்வதேச சமூகம் கூறியிருந்தாலும் அவ்விடயங்களில், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தவதற்கான முன் முயற்சியாக நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றி, குழுக்களை அமைத்து சில வரைபுகளை தயாரிப்பதாகக் கூறினாலும், அந்த முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முழுமையான ஈடுபாடு இருக்கவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழுமையான ஈடுபாட்டைக் கொண்டிருந்தாலும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுயநிர்ணய அடிப்படையான பரிந்துரைகளை அரசியல் தீர்வில் உள்ளடக்க முடியாதவராகவும், தென் இலங்கை அரசியல் அழுத்தங்களை துணிச்சலாக எதிர்கொள்ள முடியாதவராகவும், பிரச்சனைகளை தள்ளிப்போடுவதன் ஊடாக தனிக்க முடியும் என்ற தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பவராகவுமே இவ்விடயத்தில் செயற்பட்டு வருகின்றார்.

பிரதமரின் இவ்விதமான இழுத்தடிப்புக்களால் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு அவருக்கு இருந்த தோதான காலத்தை இப்போது இழந்துவிட்டார். இப்போது ஆட்சியாளர்கள் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளதும், எதிர்க்கட்சிகள் பலமடைந்து வருவதும், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டுவரும் சாதகமற்ற நிலைமையும் புதிய அரசியலமைப்பை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் வலிமையை இந்த அரசுக்கு இழக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் புதிய அரசியலைமைப்பு வரும், ஆனால் வராது என்ற சினிமாக் கதைபோலவே மாறியுள்ளது.

மறுபக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் அமைத்தல் பணியானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டு ஒருவருடத்திற்குப் பின்னரே இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இருந்தபோதும் அந்த அலுவலகச் செயற்பாடுகள் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எவரையும் குற்றவாளிகளாகக் காணாது, உரிய விசாரணைகளை முன்னெடுக்காது, காணாமல் போனவர்களாக தமிழ் மக்கள் தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டவர்கள் இறந்துவிட்டவர்களாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பதையே இந்த அலுவலகம் ஈற்றில் செய்யப்போகின்றது என்ற சந்தேகத்திற்குரியதாகவே மாறியுள்ளது.

ஆகவே அரசாங்கம் அமைத்துள்ள காணாமல் போனோர் அலுவலகச் செயற்பாடுகளும் சர்வதேச சமூகத்திற்கான ஒரு கண் துடைப்பு நாடகமேயன்றி, அதனால் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை என்பது சர்வ நிச்சயமாகும்.

பொது மக்களின் உரித்துடைய காணிகளிலிருந்து படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய சில ஏக்கர் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சி செய்தாலும் அந்தப் பணிகள் திருப்தியளிக்கக்கூடியவாறு நடக்கவில்லை. இறுதியாக இலங்கை இராணுவத்தை குறிப்பிட்டு வெளியாகிய காணிகள் தொடர்பான ஓர் செய்தியில் வடக்கு கிழக்கில் தனியார் காணிகளிலிருந்து படையினர் முற்றாக வெளியேறி வேறு பொறுத்தமான பகுதிகளில் முகாம்களை அமைத்துக் கொள்வதற்கு 10 கோடி ரூபாவரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தான் இராணுவத்தின் நிலைப்பாடா என்பதை ஆராய வேண்டும்.

அடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இதுவரை தேவையான எந்தவிதமான நடவடிக்கையையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக மரண தண்டனையை அமுல்படுத்துவதில் கங்கனம் கட்டிக்கொண்டு அரசு அறிக்கைவிட்டுக்கொண்டு இருந்தது. அது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து மரண தண்டனையை அமுல்படுத்தப் போவதாக துள்ளிக் குதித்த இலங்கை அரசாங்கம் இப்போது அடங்கிப்போய் இருக்கின்றது.

முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்ட போர்க்குற்ற விசாரணைகள் என்ற பக்கத்தை கிட்டத்தட்ட இலங்கை அரசாங்கம் மறந்துவிட்டது. அல்லது மறைத்துவிட்டது இடைக்கிடையே ஏதேனும் படையினரின் நிகழ்வகளில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால, படையினர் எவரையும் விசாரணைக்கு உட்படுத்தப் போவதில்லை என்பதை மறக்காமல் கூறிவருகின்றார்.

மறுபக்கத்தில் முன்னாள் ஆட்சியாளர்களை சர்வதேசத்தின் மின்சாரக் கதிரையில் இருந்து தமது ஆட்சியாளர்களே காப்பாற்றியதாகக் கூறுகின்றனர். அவ்வாறெனின் போர்க்குற்றத்தோடு தொடர்புபட்டவர்களாக கருதப்படுகின்றவர்களை தாம் பாதுகாத்துவிட்டதாகவும், எவரையும் குற்றவாளியாக விசாரிக்கப்போவதில்லை என்றும் கூறிவருகின்றார்கள். இவற்றைப்பார்க்கின்றபோது போர்க்குற்ற விசாரணை என்பது ஒருபோதும் சாத்தியமானதல்ல என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதியளித்தவற்றை இரண்டு வருடகாலத்திற்குள் நிறைவேற்றத் தவறியிருக்கும் இலங்கை அரசு 2017ஆண்டு தமக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தது. அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நிறைவேற்ற மேலும் இரண்டுவருட கால அவகாசத்தை சர்வதேச சமூகம் வழங்கியது.

அதன்படி 2019ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் சர்வதேச பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

ஆனாலும் 2018ஆண்டு செப்ரெம்பர் மாதம் மனித உரிமைப் பேரவையின் 39ஆவது மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் முன்னேற்றம் எத்தகையதாக இருக்கின்றது என்பதை ஆராய்ந்துவருகின்றது.

அதற்காகவே ஐக்கிய நாடுகளின் பல துறைசார் நிபுனர்கள் இலங்கைக்கு வருகை தந்து ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள், பொது மக்கள் அமைப்புக்கள் என்பவற்றை சந்தித்து தமது ஆய்வுகளை செய்து அறிக்கைகளை தயாரித்து வருகின்றனர். இதுவரையாக தயாரிக்கபட்ட அறிக்கைகளின் சாராம்சத்தைப் பார்க்கின்றபோது, இலங்கை அரசின் செயற்பாடுகள் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் அமுலாக்கத்தை எதிர்பார்க்கும் தரப்புகளுக்கு பாரிய ஏமாற்றமாகவும், அதிருப்தியையுமே கொடுத்திருக்கின்றது எனலாம்.

இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமலும், நிலைமாறுகால நீதியை ஏற்படுத்தாமலும் காலத்தை இழுத்தடிப்புச் செய்வதற்கும், சர்வதேச பொறிக்குள்ளிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் விஷேட குழுக்களை அமைத்து இந்த அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று சிந்திக்கின்றனறே தவிர, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கோ விருப்பத்துடன் செயற்படுவதாகத் தெரியவில்லை.

நன்றி-ஆதவன்