முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியார் என உயர்கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த எவரும் இரண்டு தடவைகளிற்கு மேல்போட்டியிட முடியாது என 19வது திருத்தத்தின் ஏற்பாடுகள் தெரிவிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில குழுக்கள் சில சட்ட வாதங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மீண்டும் போட்டியிட முடியும் என்ற கருத்தை உருவாக்க முயல்கின்றன, அரசமைப்பு அனுமதிக்காததால் சந்திரிகா குமாரதுங்கவோ மகிந்த ராஜபக்சவோ மூன்றாவது தடவை போட்டியிட அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டம் தகுதியற்ற அல்லது தகுதி இழந்த ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்வது எவ்வளவு பாரதூரமானது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு வேட்பாளரிற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியுமெனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சில நபர்கள் தாங்கள் இதுதொடர்பில் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறப்போவதாக தெரிவிக்கின்றனர் ஜனாதிபதி மாத்திரமே இவ்விடயத்தில் உச்சநீதிமன்றின் ஆலோசனையை கோரமுடியும்,வேறு எவரும் நேரடியாக ஆலோசனையை கோரமுடியாது எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.