இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்! – சி.வி.விக்னேஸ்வரன்

கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கையில்,

“யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்கள் தற்போதுதான் தமது கொடிய அழிவுகளின் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களையும் மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மக்களுக்கு அவசியமற்றதும் யுத்த வடுக்களின் நினைவுகளை மீள நினைவூட்டுவதுமான அந்த நினைவுகளை எமது பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் வைத்திருக்கவேண்டிய தேவையில்லை.

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றபோதும் இவ்வாறான நினைவுச்சின்னங்கள் இங்கு காணப்படுவது தொடர்ந்தும் மக்களின் மனங்களில் வேதனையையும் கொடிய நினைவுகளையும் ஏற்படுத்தும்.

எனவே நாட்டின் ஜனாதிபதி என்ற வகையின் இவ்வாறான செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு குறித்த இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.