20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அறிவித்தார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நேற்று பதவியேற்ற நிலையில் 20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அவர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்  நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், 20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை இம்ரான் கான் அறிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரியாக பர்வேஸ் கட்டாக், நிதி மந்திரியாக ஆசாத் உமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக மக்தூம் ஷா மகமுது ஹூசைன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மந்திரிசபையில் 15 பேர் மந்திரிகளாகவும், 5 பேர் அலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மந்திரிகளாக பதவியேற்பார்கள் என தெக்ரீக்-ஈ-இன்சாப் கட்ரியின் செய்தித்தொடர்பாளர் ஃப்வாத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.