நடைமுறையில் காணப்படுகின்ற மாகாண சட்ட திட்டங்கள் ஊடாக செயற்பட்டால் மாத்திரமே ஜனவரி மாதம் 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த முடியும். எனவே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்களை ஒத்திவைக்கும் நிலைப்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 5 ஆம் திகதி 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் அறிவித்தல் விடுத்திருந்தது. ஆனால் தேர்தல் முறைமை குறித்து அறிவிக்கப்படாத நிலையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதனை தீர்மானிப்பதற்கான அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனவரியில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் செப்டெம்பர் மாதம் இறுதிக்குள் தேர்தல் முறைமை குறித்து அரசாங்கம் தீர்மானித்து அதனை அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தது.
ஆனால் தேர்தல் முறைமை தொடர்பில் இது வரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையிலேயே பிரதமர் ரணில்விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்தவார இறுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆனால் நடைமுறையில் காணப்படுகின்ற தேர்தல் முறைமை ஊடாகவே தேர்தலை நடத்துவது எளிதான விடயமென்பதுடன் தேர்தலை காலம் கடத்தாமல் நடத்த முடியும் என்பதனை பிரதமர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. விவாதத்தின் பின்னர் கட்சி தலைவர்கள் கூட்டத்தைத் கூட்டி இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.