சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியாராமல், மக்கள் ஒன்றிணைந்து தமது தேவைகளை தாமாகவே பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் உருப்பெறத் தொடங்கி விட்டன.
அண்மையில் இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர், இளைஞர்கள் ஒன்றிணைந்து மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றியதும் இந்த வகையில் அடங்கும்
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தன்னார்வ அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக ஒன்றிணையும் மக்கள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றாடல் போன்ற விடயங்களில், அரசாங்கத்தை பகைக்கா வண்ணம், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் செயற்பாடுகள் உருப்பெறத் தொடங்கி விட்டது ஒரு நல்ல ஆரம்பம்.
யாழ்ப்பாண மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான கட்சிகளும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிமுக்கியத்துவம் அளித்த விடயம், யாழ்ப்பாண நகரை தூய்மைப்படுத்துவது. யாழ்ப்பாண நகரின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்து வழியும் குப்பையும், அந்தக் குப்பையை கிளறிக் கொண்டிருக்கும் கட்டாக்காலி நாய்களும், அழகிய யாழ்ப்பாண நகரை அலங்கோலப்படுத்துவது மட்டுமன்றி சுகாதார சீர்கேடுகளிற்கும் வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தின் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் குழாம் ஒன்றின் முன்னெடுப்பில், யாழ்ப்பாண நகரை பொதுமக்களின் பங்களிப்போடு சுத்தப்படுத்த ஒரு திட்டவரைபு தயாரிக்கப்பட்டு, யாழ்ப்பாண மாநகர சபையோடு கலந்துரையாடப்பட்டு வருவது, எமது மண்ணில் எமது மக்களை மைய்யமாகக் கொண்ட முன்னெடுப்புக்கள் துளிர்விடத் தொடங்கியிருப்பதற்கான நல்லதோர் அடையாளமாக இந்த திட்டத்தை கருதலாம்.
இந்த நண்பர்கள் குழாமிடம், யாழ்ப்பாண நகரைத் தூய்மையாக்கும் திட்டத்தைத் தவிர, வட மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துகளை குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றும், வடக்கு கிழக்கு பாடசாலை மாணவர்களுக்கான Career Guidance செயற்திட்டம் ஒன்றும் நிதி வளங்கள் கிடைக்காமையால் கிடப்பில் கிடக்கிறது.
கிளிநொச்சியை தளமாகக் கொண்டியங்கும் IRDG எனும் தன்னார்வ அமைப்பு, புலத்தில் இயங்கும் வல்லுனர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, தாயகத்தில் கிராமங்களை மையமாகக்கொண்ட சிறிய அளவிலான பொருளாதார முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. விவசாயத்தையும் சிறு கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்யும் IRDG அமைப்பினை சர்வதேச அரசாங்கங்களும் தொண்டர் நிறுவனங்களும் ஊக்குவிக்கத் தொடங்கி விட்டன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1992ம் ஆண்டு நண்பர்கள் RfE எனும் தமது அமைப்பினூடாக வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும், கணிதப் பாடத்தில் எமது மாணவர்களின் அறிவை வளர்க்க திட்டங்களை முன்னெடுக்க, பரி யோவான் கல்லூரியின் 1987 பிரிவு மாணவர்கள் முல்லைத்தீவில் உருத்திரபுரம் மற்றும் தர்மபுரம் மகா வித்தியாலங்களின் அபிவிருத்தியை கடந்த பல வருடங்களாக தத்தெடுத்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
மீண்டும் விடுதலைப் புலிகளின் காலம் வரவேண்டும் என்று யார் சத்தம் போட்டாலும் நாங்கள் கைதட்டி வரவேற்கிறோம், ஆனால் விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, இன்று நம்மாலும் முன்னெடுக்கப்படக் கூடிய செயற்திட்டங்களை செயற்படுத்தாமலே காலத்தை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
“புலம் பெயர்ந்த மக்களின் ஆற்றலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தலைவரிடம் தெளிவான சிந்தனை இருந்தது, தம்பி” என்று புலத்தில் பல ஆண்டுகள் விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்களித்த அண்ணனொருவர் அண்மையில் தனது ஆதங்கத்தை பகிர்ந்தார். “எங்களுக்கு சுதந்திரம் கிடைத்ததும், புலம் பெயர்ந்த எங்கட மக்கள் தான், யுத்தத்தால் எங்கள் பிரதேசங்கள் அடைந்த பின்னடைவிலிருந்து மீளவும் எழ காத்திரமான பங்களிப்பு செய்யப் போகிறார்கள் என்பதில் அவருக்கு அதீத நம்பிக்கை இருந்தது” என்றார் அண்ணர்.
2004 மார்கழியில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அவலத்திலிருந்து மீள, எமது மக்களிற்கான உடனடி உதவிகளை ஒழுங்காக ஒருங்கமைத்து வழங்கிய செயற்பாட்டில் புலம்பெயர் மக்கள் ஆற்றிய பங்களிப்பு தலைவரின் சிந்தனைக்கு அவர்கள் கொடுத்த செயல்வடிவம். ஆசிய கண்டம் எதிர்கொண்ட அந்த பேரழிவின் பின்னர், நடைபெற்ற மீட்பு பணிகளை அதியுச்ச செயற்திறனுடன் நடாத்திக் காட்டியது விடுதலைப் புலிகள் தான் என்று உலகமே புகழாரம் சூட்டியதை எங்களால் மறந்திருக்க முடியாது.
புலம்பெயர்ந்த மக்களின் ஆற்றலைப் பயன்படுத்தி தாயகத்தின் தேவைகளை நிறைவு செய்யும் செயற்திட்டங்களாக மாற்றியதில் விடுதலைப் புலிகளின் நந்தவனம் செயலகம் ஆற்றிய பணி பலருக்கு தெரியும். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நந்தவனம் செயலகத்தினூடாக தாயகத்தில் அரும்பணியாற்றிய புலம்பெயர்ந்த உணர்வாளர்கள் அந்த நாட்களைப் பற்றி இன்றும் மகிழ்வோடும் நிறைவோடும் நினைவு கூர்வார்கள்.
தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மக்களின் ஆற்றலை உள்வாங்கி, தாயகத்தின் தேவைகளை நிறைவு செய்யவல்ல செயற்திட்டங்களை நடைமுறைவல்ல ஒரு கட்டமைப்பு இல்லாதது ஒரு பெருங் குறையாகவே தொடர்கிறது. அதே வேளை “சண்டை நடக்கேக்க ஓடினாக்கள் இங்க தேவையில்லை.. நாங்களே எங்களை பார்த்துக் கொள்ளுவம்” என்ற ஒரு மனநிலையும் தாயகத்தில் உருவாகி வருகிறதோ என்று ஆதங்கப்பட வைக்கத்தக்க சில நிகழ்வுகளும் நடக்கின்றன.
போரின் காரணமாக புலம்பெயர்ந்து, தங்களையும் பலப்படுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கும் பலம் சேர்த்த ஒரு தலைமுறை, “நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற இன்னும் நிறைவேறாத வேட்கையுடன் முதுமையை நோக்கியும் மரணத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது.
போரால் அழிவுண்ட எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய நிபுணத்துவத்தையும் நிதிவளங்களையும் இந்த புலம்பெயர்ந்த மக்கள் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள். எங்கள் தேசத்தை ஆழமாக நேசிக்கும் இந்தத் தலைமுறைக்குப் பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களிற்கிருக்கும் அதேயளவு பற்றுடன் தாயகத்திற்கு உதவி செய்யப் போவதில்லை.
நந்தவனம் செய்த அதே செயற்பாட்டை செய்யவல்ல ஒரு மக்கள் மைய்ய அமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கான காலம் வந்துவிட்டது. மாகாண சபை செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்வினம், ஜனாதிபதியின் செயலணி செய்யும் என்று பார்த்துக் கொண்டிராமல், மக்களால் மக்களுக்காக இயங்கவல்ல மக்கள் மைய்ய அமைப்பு ஒன்றே, தாயகத்தின் தேவைகளை நிறைவு செய்ய புலம்பெயர் மக்களின் ஆற்றல்களை ஒருங்கிணைக்கும் பணியை திறம்பட ஆற்றும் என்ற சிந்தனை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஓசூர் மாவட்டத்தில் இயங்கும் ஓசூர் மக்கள் சங்கத்தின் செயற்பாடுகள் நமக்கு ஒரு முன்மாதிரியாக அமையலாம். அரசாங்க அதிகாரிகளோடு இணைந்து, குளங்களை தூர்வாரி நீர்நிலைகளை தூய்மைப் படுத்துவது, டெங்கு ஒழிப்பு, வீதி விபத்துக்களை குறைப்பது, சூரிய மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்துவது, வரலாற்று மரபுகளை நினைவு கூறுவது என்று பல்வேறு அரிய நல்ல திட்டங்களை ஓசூர் மக்கள் சங்கம் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறது.
“ஒசூர் மக்கள் சங்கத்தின் தாரக மந்திரம் –
ஒருவரையும் -குறை -குற்றம் -கேலி செய்யாமல் , அரசு அதிகாரிகளுடன் இணைந்து நம் ஊர், நம் மக்கள் , நமக்காக என்ற ஒரே கோட்பாடுடன் அரவணைத்து சென்றால் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் சாதிக்க முடியும்” என்று ஓசூர் மக்கள் சங்கத்தின் முகநூல், சங்கத்தினது நோக்கத்தை தெளிவாக பறைசாற்றுகிறது.
வெற்றி பெற்ற மக்கள் இயக்கங்களின் DNA என்று கருதப்படும் “For the People, By the People and Of the People, என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் தங்களது ஓசூர் மக்கள் சங்கம் அமைக்கப்பட்டுள்ளதாம். ஆதாவது, மக்களின், மக்களுக்காக மக்களால் !