விளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும்.
மொபைலின் GPS-ஐ ஆஃப் செய்துவைத்திருக்கும் சமயங்களிலும், மொபைலுக்கு லொகேஷன் சார்ந்த நோட்டிஃபிகேஷன்கள் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா. ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைவரும், ஏதேனும் ஒரு சமயத்தில் இதைக் கண்டிருப்பர். நம்முடைய மொபைல் போனின் இருப்பிடத்தை, மொபைல் அப்ளிகேஷன்கள் அறிந்துகொள்வதற்கு உதவும் டூல்தான் GPS. கூகுள் மேப்ஸ், வெதர் ஆப்ஸ், டாக்ஸி ஆப்ஸ் போன்ற அப்ளிகேஷன்கள் இதன் உதவியுடன் நம்முடைய லொகேஷனை மேப் செய்கின்றன.
எனவே, GPS ஆன் செய்து இருக்கும்பொழுது, நம்முடைய தகவல்களை இந்த ஆப்கள் பயன்படுத்திக்கொள்ளும். அதில் கூகுளும் ஒன்று. இந்த ஆப்களைப் பயன்படுத்தும்போது மட்டும், GPS-ஐ ஆன் செய்வதும், பின்னர் அதனை ஆஃப் செய்துவைப்பதும்தான் பலரது வழக்கம்.
முதல் காரணம், தேவையில்லாமல் மொபைல் சார்ஜ் குறையும். இரண்டாவது, நம்முடைய லொகேஷனைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் எந்த ஆப்பிற்கும் இருக்காது. ஆனால், கூகுள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நீங்கள் கூகுள் மேப்ஸ் வசதியைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், GPS-ஐ ஆன் செய்திருந்தாலும், ஆஃப் செய்திருந்தாலும், அதனால் உங்கள் லொகேஷனைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக நம் மொபைல் GPS-ஐ ஆஃப் செய்துவிட்டு, சத்யம் தியேட்டருக்குப் படம் பார்க்கச் செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். உடனே சிறிதுநேரத்தில் அதை மோப்பம் பிடித்து, `Rate Sathyam Theatre’ என புஷ் நோட்டிஃபிகேஷன் வரும். நாம் சத்யத்தில் படம் பார்ப்பது கூகுளுக்கு எப்படித் தெரியும். இத்தனைக்கும் நாம் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தவில்லை; கூகுளில்கூட தேடவில்லை; ஆனாலும், கூகுளுக்கு எப்படி நம் இருப்பிடம் தெரிகிறது. இந்தக் கேள்விக்கான பதில் இந்தக் கட்டுரையின் இறுதியில். ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு, கூகுளின் சில சூட்சுமங்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
பலரும் அறியாத டைம்லைன்
ஃபேஸ்புக், ட்விட்டர் டைம்லைன் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத இன்னொரு டைம்லைனும் இருக்கிறது; அது கூகுள் டைம்லைன். கடந்த ஒரு வருடத்தில், ஏதேனும் ஒரு தேதியைச் சொல்லி, அப்போது எங்கு இருந்தீர்கள் எனக் கேட்டால் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா. ஆனால், கூகுள் சரியாகச் சொல்லும். அதுவும் எப்படி, காலை 9 மணிக்கு சென்ட்ரலிலிருந்து கிளம்பி, 10 மணிக்குத் தாம்பரத்தில் இறங்கி, மீண்டும் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்து, அங்கிருந்து வீட்டுக்கு நடந்துசென்றது வரை அத்தனையையும் துல்லியமாகச் சொல்லும். இதை கூகுள் மேப்ஸின் டைம்லைனில் பார்க்கமுடியும்.
இதற்கு நீங்கள் எப்போதும் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தியிருக்க வேண்டும், மொபைல் இன்டர்நெட் வேண்டும், GPS ஆனிலேயே இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. இதில் எது இருக்கிறதோ, அதைவைத்து கூகுளே நம் தகவல்களைக் கணித்து இந்த டைம்லைனில் அப்டேட் செய்துவிடும். இவ்வளவு துல்லியமாக நாம் எங்கு செல்கிறோம், எப்போது செல்கிறோம் போன்ற விவரங்கள் எல்லாம் எதற்காக கூகுளுக்குத் தெரியவேண்டுமா என நினைத்தால், இந்த டைம்லைனை நிறுத்தவும் முடியும். அதாவது, நம்முடைய லொகேஷன் ஹிஸ்டரியை நிறுத்திவைக்கவும் ஆப்ஷன் தந்திருக்கிறது கூகுள். அதைப் பயன்படுத்தி, இந்த டைம்லைன் அப்டேட் ஆவதைத் தடுக்கலாம்.
ஆனால், கூகுள் நம்மை டிராக் செய்வதைத் தடுக்க முடியாது. நம்மைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேதான் இருக்கும். இதைச் சமீபத்தில் உறுதிசெய்திருக்கிறது AP செய்திநிறுவனம்.
அந்நிறுவனம் நடத்திய சோதனையில், நாம் லொகேஷன் ஹிஸ்டரியை ஆஃப் செய்திருந்தாலும்கூட, கூகுள் தொடர்ந்து கண்காணிப்பது தெரியவந்துள்ளது. இதை ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலுமே கண்டறிந்துள்ளனர். இது கூகுளின் பயனாளர்களை முழுமையாக ஏமாற்றும் செயல் என்கின்றனர் டெக் நிபுணர்கள்.
ஏன் கூகுள் இப்படிச் செய்கிறது?
விளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும். நம்முடைய தகவல்களை வைத்துக்கொண்டுதான் கூகுள் நமக்குச் சரியான விளம்பரங்களைக் காட்டுகிறது; அதை வைத்துதான் வருமானம் ஈட்டுகிறது. நம்முடைய கூகுள் தேடல்கள், கூகுள் ஆப்களின் பயன்பாடு ஆகியவற்றின் தகவல்களை இதற்காகப் பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான் நம் இருப்பிடம். உதாரணமாக, சென்னையில் இருக்கும் ஒரு நபருக்கும், மதுரையில் இருக்கும் ஒரு நபருக்கும் ஒரே விளம்பரங்களைக் காட்டமுடியாது அல்லவா. இருவருக்கும் அவர்களின் தேவைக்கேற்ற துல்லியமான விளம்பரங்கள் காட்டினால்தான், விளம்பரதாரர்கள் லாபம் ஈட்டமுடியும். இதற்காகத்தான் நம்முடைய இருப்பிடம் சார்ந்த தகவல்களைக் கண்காணிக்கிறது கூகுள். ஆனால், நாமே இதை வேண்டாம் என்றாலும்கூட தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!
தற்போது இந்தப் பிரச்னை குறித்து விளக்கமளித்துள்ள கூகுள், “லொகேஷன் ஹிஸ்டரி என்பது பயனாளர்களின் விருப்பம் சார்ந்த ஒரு வசதிதான். அது வேண்டாம் என்றால், பயனாளர்கள் அதனை நிறுத்திக்கொள்ளலாம். அதற்கான வழிகள் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே இருக்கின்றன. கூகுள் மேப்ஸ் மூலமாக மட்டுமே கூகுள் பயனாளர்களின் இருப்பிடம் சார்ந்த தகவல்களை எடுப்பதில்லை. கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் காலண்டர், கூகுள் போட்டோஸ் என எந்த ஆப்பில் லொகேஷன் ஆப்ஷனைப் பயன்படுத்தினாலும், அது கூகுளின் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால், அவையெல்லாம் மேப்ஸ் டைம்லைனில் காட்டப்படாது. இவை முழுமையாக நிறுத்தப்பட வேண்டுமென்றால், கூகுளின் ஆக்டிவிட்டி கன்ட்ரோல் பகுதிக்குச் சென்று, `Web & App Activity’ (க்ளிக் செய்க) என்ற ஆப்ஷனை நிறுத்திவிடலாம்” என விளக்கமளித்திருக்கிறது. இதன்மூலமாக கூகுள் நாம் செல்லும் தினசரி இடங்களைக் கண்காணிப்பதை வேண்டுமானால் நிறுத்தமுடியும். ஆனால், முக்கிய இடங்களுக்குச் செல்லும்போது அந்தத் தகவல்கள் தானாக கூகுளுக்குச் சென்றுவிடும்.
சரி… அந்த GPS மேட்டர்?
இதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனால், GPS ஆஃப் செய்துவைத்திருக்கும்போதும் கூகுள் எப்படி நம் இருப்பிடத்தைக் கண்டுகொள்கிறது. இந்தப் பிரச்னை பல ஆண்ட்ராய்டு பயனாளர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், குவார்ட்ஸ் இணையதளம்தான் 2017-ல் முதன்முதலில் இதனை நிரூபித்தது. உடனே இதனை கூகுளின் கவனத்துக்கும் கொண்டுசென்றது. கூகுளும் இதை ஒப்புக்கொண்டது. அப்போதுதான் நம் இருப்பிடத்தை கூகுளால் எப்படி வேண்டுமானாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியவந்தது. கூகுள் இதற்காக செல் ஐடி (Cell ID) என்ற கான்செப்டைப் பயன்படுத்தியது.
அதாவது GPS மொபைலில் ஆன் ஆகியிருக்கும்போதெல்லாம், அதன்மூலம் நம் லொகேஷன் தெரியும். ஆஃப் ஆகியிருக்கும்போது, அதற்கு மாற்றாக நம் மொபைல் நெட்வொர்க்குகளின் டவர்கள் மூலமாக இதை அறிந்துகொள்ளும். இதற்காகத்தான் செல் ஐடியைப் பயன்படுத்தியது கூகுள். இதனால் நம்மால் எப்போதுமே கூகுளின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பமுடியாது. இந்தப் பிரச்னை வெளியே தெரிந்தபோது இதுகுறித்து விளக்கமளித்த கூகுள், “நாங்கள் கடந்த 11 மாதங்களாகத்தான் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் இதைக் கைவிடவும் இருக்கிறோம். மேலும், Cell ID மூலமாகப் பயனாளர்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டாலும், அவற்றைப் பயனாளர்களின் சேவைக்காகவே பயன்படுத்துகிறோம். அவர்களுக்குச் சரியாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது, தகவல்களை அனுப்புவது போன்றவற்றிற்காக மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். மற்றபடி இந்தத் தகவல்கள் கூகுளின் சர்வர்களின் எங்கேயும் பதிவாகாது” என்றது. ஆனால், இப்போதும் நம்மால் GPS அற்ற இடங்களில் கூகுளின் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கமுடியும். அது எப்படி என்பது கூகுளுக்கே வெளிச்சம்!