கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் இன்று நீதிமன்றத்தில ஆஜர் செய்யப்பட்டவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.
முப்படைகளின் பிரதானி கடற்படை தளபதியாகயிருந்தவேளை நேவி சம்பத் தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக நேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது தொடர்பிலான விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வங்கிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் மார்ச்மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் இடம்பெற்ற வங்கிபரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபரை தொடர்ந்து விசாரணை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ள நீதவான் சந்தேகநபர் வெளிநாடு தப்பிச்செல்வதற்கு உதவிய நபர்கள் குறித்த விசாரணைகளைமேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.