நவுருவில் 12 வயது அகதிச்சிறுவன் உண்ணாவிரதப்போராட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வந்து தற்போது நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் இரண்டு வாரங்களுக்கு மேல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருவதாக அங்குள்ள மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் கடந்த நான்கு வருடங்களாக நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மேற்படி ஈரானிய சிறுவனின் நிலமை மிகுந்த கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், அவனை இந்த நிலையிலும்கூட ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து மருத்துவ வசதிகள் அளிப்பதற்கு குடிவரவுத்துறை மறுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிறுவனின் குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறுவதற்காக அனுப்பப்பட்டுவருகின்றவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அதிலும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும், ஈரான் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பெரும்பாலானவர்களின் கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்த குடும்பங்களை சேர்ந்த சுமார் 130 சிறுவர்கள் தற்போது நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-sbs