நாயாறு எரியூட்டல்!

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன.

அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்குள், வடக்கு கடற்கரையோரங்களில் தொழில் உபகரணங்கள், படகுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டி அழிக்கப்பட்ட, மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கின் கட்டைக்காடு, தாளையடிப் பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு படகுகள் எரியூட்டி அழிக்கப்பட்டிருந்தன. அந்தப் படகுகளை எரித்தவர்கள் யார் என்கிற விசாரணைகள் சம்பந்தப்பட்ட தரப்பால் இதுவரை சீராக முன்னெடுக்கப்படவில்லை.

தொடர்ச்சியாக, தமது தொழில் உபகரணங்களைப் பாதுகாப்பதற்காக கடற்கரையோரங்களில் காவல் காக்கும் நிலைக்கு, பருத்தித்துறை முதல் முல்லைத்தீவு வரையான கரையோர மீனவர்கள் உள்ளாகியிருக்கின்றார்கள்.

ஆனாலும், அதையும் தாண்டி நாசகார, ஆக்கிரமிப்பு சக்திகள், தொழில் உபகரணங்களை அழிந்தொழிக்கும் நடவடிக்கைகளை அதிகாரத் தரப்புகளோடு இணைந்து, பெரும் திமிரோடு செய்து வருகின்றன.

வடக்கு, கடல் வளங்களால் நிறைந்தது. இலங்கையின் ஏனைய கடற்பரப்புகளோடு ஒப்பிடுகையில், ஆழம் குறைந்தது. சீரான கடற்பாறைகளும் அதிகளவாகக் காணப்படுகின்றன.

ஆழம் குறைந்த கடற்பகுதி என்பதால், சூரிய ஒளியின் ஊடுருவல் எப்போதும் இருக்கும். இவை, ‘பிளாந்தன்’ உள்ளிட்ட மீனுக்குத் தேவையான உணவுகளின் பெருக்கத்துக்கு உதவுகின்றன. இதனால், வடக்குக் கடல், மீன்களின் இனப்பெருக்கத் தளமாகக் காணப்படுகின்றது.

இவற்றால், வடக்குக் கடற்பரப்பு மீன்களால் நிறைந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தோடு, யுத்தம் நீடித்த சுமார் 30 ஆண்டுகள், வடக்குக் கடற்பரப்பு ஆழ்கடல் மீன்பிடிக்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்திருந்தது. இதுவும், வளப்பரப்பலை அதிகரிக்கவே செய்தது.

வடக்கு மீனவர்களால்தான், இலங்கையின் கடலுணவுத் தேவையின் 75 சதவீதம், 1980களின் ஆரம்பம் வரை,  நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், யுத்தம் வடக்குக் கடலையும் மீனவர்களையும் குறிப்பிட்டளவில் பிரித்து வைத்த போது, அந்நியர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.

குறிப்பாக, வளங்களின் சுரங்கமாகக் காணப்பட்ட வடக்குக் கடற்பரப்பை நோக்கி, இந்தியப் பெரு முதலாளிகளின் ரோலர் படகுகளும் தென்னிலங்கை பெரு முதலாளிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினரின் படகுகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

அதுவும், 2009 யுத்தம் நிறைவு பெற்று, வடக்குக் கடற்கரையோரங்கள் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சில ஆண்டுகள் வரையில், சொந்தக் கடலில் மீன்பிடிப்பதற்கு, தமிழ் மக்களுக்குப் பெரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

அந்தக் காலப்பகுதியில், தென்னிலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள், பாதுகாப்புத் தரப்பின் ஒத்துழைப்போடு, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்குக் கடற்கரையோரங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இரட்டை மடிகளைக் கொண்ட ஆழ்கடல் மீன்பிடி, சுருக்கு வலைப் பயன்பாடு, உழவு இயந்திரத்தைக் கொண்டு கரைவலை இழுக்கும் முறை, இலை தழைகளைக் கடலுக்குள் கொட்டி கணவாய் பிடிக்கும் முறை, இரவில் பிரகாசமான ஒளியைப் பாய்ச்சி அட்டை பிடித்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறை உள்ளிட்ட கடல் வளங்களை அடியோடு அழிக்கும் தொழில் நடவடிக்கைகளுக்கு, வடக்கு மீனவ சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்திருக்கின்றன.  2010முதல், அவற்றுக்கு எதிரான தடையையும் விதித்திருக்கின்றன.

ஆனால், தென்னிலங்கை ஆக்கிரமிப்பாளர்களும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களும் அதிகமாகத் தடை செய்யப்பட்ட முறைகளிலேயே தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது, வடக்கு மீனவர்களை அதிகமாகப் பாதித்து வருகின்றது. சுமார் 30 ஆண்டுகள், தொழில் நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில், வறுமைக்குள் வடக்கு மீனவர்கள் தள்ளப்பட்டார்கள். இவ்வாறான நிலையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளோடு வந்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, மெல்ல மெல்லத் தமது எதிர்க் கோஷங்களை எழுப்பிய வடக்கு மீனவர்கள், கடந்த சில வருடங்களாக, அவற்றை மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கினர்.

இதனால், வடக்கிலிருந்து மீன்களையும் கடல் அட்டைகளையும் அள்ளிச் சென்றவர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில்தான், வடக்கு மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் ஒரு கட்டமாகவே, இந்த எரியூட்டல் சம்பவங்களையும் பார்க்க வேண்டிய ஏற்படுகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் நிலப்பகுதிகள் மாத்திரமல்ல, வளங்கொழிக்கும் கடலும் திட்டமிட்டே ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. இதை வடமராட்சிக் கிழக்கு முதல் முல்லைத்தீவு வரையான கடற்கரைப் பகுதிகளை பார்க்கும் போது, தெரிந்து கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக, கடந்த பத்து ஆண்டுகளாகப் போராடி வரும் வடக்கு மீனவர்கள், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை முற்றாக, மூர்க்கமாக எதிர்ப்பதில் குறியாக இருந்தனர்.

ஆனால், தென்னிலங்கை மீனவர்கள் முறையான, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, அதை ஒருவித இணக்கப்பாட்டுடன் கடந்து செல்லவே முயன்றனர். ஆனால், தென்னிலங்கை மீனவர்களில் பெரும்பான்மையினர், அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அதனால் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல், வடக்கு மீனவர்களுக்கு ஏற்படுகின்றது.

இதனால்தான், வடக்கு மீனவர்கள், தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட வேண்டி ஏற்பட்டது. ஆரம்பத்திலிருந்து பிரச்சினைகளைப் பேசித் தீர்வு காண வேண்டும் என்கிற போக்கிலேயே, அஹிம்சை வழிப் போராட்டங்களை, வடக்கு மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

நிறைந்த பொறுமையோடு, விடயங்களைக் கையாண்டு வருகிறார்கள். ஆனால், அவர்களை நோக்கி, ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமும் ஏதேச்சதிகாரமும் நீட்டப்படுகின்றன. அதன் ஒரு கட்டமே, நாயாறு கடற்கரையிலும் நிகழ்ந்து முடிந்திருக்கின்றது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான, முல்லைத்தீவு மீனவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, முல்லைத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா கலந்து கொண்ட கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது, தடை செய்யப்பட்ட வழிமுறைகளில் மீன்பிடிப்பதற்கான தடை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும், அடுத்த நாளும் சுருக்கு வலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வழிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தென்னிலங்கை மீனவர்கள் முயன்றனர். இந்த முயற்சியை, முல்லைத்தீவு மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, முரண்பாடான நிலையொன்று ஏற்பட்டது.

அன்று இரவே, படகுகளும் தொழில் உபகரணங்களும் எரியூட்டப்பட்டிருக்கின்றன. எரியூட்டல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு நாயாறு பகுதி மீனவர்கள் முனைந்த போதும், அதைத் தட்டிக்கழித்து நடந்து கொண்டதாகப் பொலிஸார் மீது, மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எரியூட்டப்பட்ட பகுதியில் கடற்படையும் இராணுவமும் பொலிஸாரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தாலும் ஆக்கிரமிப்பாளர்களையோ, எரியூட்டியவர்களையோ கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை.  தடை செய்யப்பட்ட முறைகளில், அட்டை பிடித்து வந்தவர்களுக்கு எதிராகப் போராடிய மக்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே, கட்டைக்காட்டிலும் தாளையடியிலும் படகுகள் எரிக்கப்பட்டிருந்தன.

அதுவும், போராட்டங்களில் அதிக கரிசனையோடு பங்கெடுத்தவர்களை இனங்கண்டே, அவர்களின் படகுகள் எரியூட்டப்பட்டதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியையே நாயாறு எரிப்பும் பதிவு செய்திருக்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்துக்கும் தனது நிலத்தையும் கடலையும் பாதுகாப்பதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு. அதைத் தலையாய பணியாக மேற்கொண்டிருக்கின்ற போது, ஆக்கிரமிப்பாளர்கள் உள்நுழைந்து, வளங்களை அழித்து, அள்ளிச் செல்வதை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; போராட்ட வழிகளைத் நோக்கி நகரவே செய்வார்கள். அது, தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்கிற வேறுபாடுகளையேல்லாம் தாண்டியது.

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் போராடும் சிங்கள மக்கள் கோரும் நீதியைத்தான், தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வடக்கு மீனவர்களும் கோருகின்றனர்.

அதைத்தான், வடமராட்சிக் கிழக்கு மீனவர்களும் முல்லைத்தீவு மீனவர்களும் கடந்த சில மாதங்களாகச் செய்து வருகின்றார்கள்.

 புருஜோத்தமன் தங்கமயில்