45 நாட்கள் உணவின்றி தவித்த ஈழப் பெண்ணிடம் இராமநாதபுர மாவட்ட நீதிபதிகள் மண்டபம் அகதிகள் முகாமிற்க்குள் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உச்சகட்ட உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்கள் தமிழகத்திறக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு ஈழ அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அகதிகள் முகாமில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரிசி இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம்களில் காவல் துறை பாதுகாப்பில் தங்கியுள்ள அகதிகளுக்கு உணவுப்படியாக தினமும் 100 ரூபா வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அங்கு 24 வயதுடைய சோபணா என்ற ஈழப் பெண் மண்டபம் சிறப்பு முகாமில்; காவல் துறை பாதுகாப்பில் தங்கியுள்ளார் இவருக்கு கடந்த 45 நாட்களாக மறுவாழ்வு துறையால் வழங்கப்படும் உணவுபடி வழங்கப்படாமல் இருந்துள்ளது.
இப்பிரச்னைக்கு ராமநாதபுரம் இலவச சட்ட உதவி மையம் மூலம் தீர்வு கிடைக்குமா என வட்ஸ்அப் மூலம் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் இலவச சட்ட உதவி மைய தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான கயல்விழி மற்றும் செயலாளரும் இராமநாதபுரம் சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் ஆகியோர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 45 நாள் வழங்கப்படாத உணவுப் படியை அரசு விதிகளுக்குட்பட்டு இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருவதாக நீதிபதிகளிடம் மறுவாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்த நீதிபதி கயல்விழி தெரிவிக்கையில் அகதிகள் பிரச்னைகள் மட்டுமின்றி இலவச சட்ட உதவி மையத்திற்கு வரும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்து சட்ட உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.