வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்த சத்யராஜ், இனியும் சம்பாதிக்க அப்பா வேடத்தில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசினார்.
‘‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன்கிறீங்களே‘‘ என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு நடித்து முன்னேறியவர் சத்யராஜ் என்று அண்ணன் சிவகுமார் சொல்வார். முதலில் நடிக்க வந்த எனக்கு எல்லோரையும் போல் வில்லன் வேடம்தான் கிடைத்தது. சாதாரண வில்லன் கிடையாது. கொடூர வில்லன் வேடம்.
‘நூறாவது நாள்’ படத்தில் மேலும் என்னை கொடூர வில்லனாக காட்ட ஆசைப்பட்டார்கள். அதற்காக மொட்டையும் அடித்தார்கள். அந்த படத்தில் பல கொலைகளையும் செய்வேன்.
படம் நன்றாக ஓடுமா? அல்லது படுத்துக் கொள்ளுமா? என்று பயந்தேன். இப்படி நினைக்கும்போது மறுநாள் காலை பேப்பரில் முதல்பக்க எட்டுகால செய்தி என்ன தெரியுமா?
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கொலை. இன்னொரு செய்தி என்ன தெரியுமா? ‘‘நூறாவது நாள் படத்தை பார்த்துதான் இந்த கொலைகளை செய்தேன் – கொலையாளி ஜெயப் பிரகாஷ் வாக்குமூலம்’’.
அவ்வளவுதான் செத்தேன். படம் அவ்வளவுதான் என நினைத்தேன். மறுநாள் எழுந்து நூறாவது நாள் படம் ஓடிய தியேட்டருக்கு ஓடினேன். வியந்து போனேன். என்னா கூட்டம். போக்குவரத்து நெரிசல். தியேட்டர் பக்கத்திலேயே போக முடியலைன்னா பாருங்களேன்.
தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படத்துக்கு எப்படி கூட்டம் கூடுமோ… அப்படி ஒரு கூட்டத்தை பார்த்தேன். அப்போதுதான் எனக்கு உயிர் வந்தது. எப்படியோ பாஸாகி விட்டோம் என்று!
அந்த காலத்தில் யார் கதாநாயகனாக நடித்தாலும் அந்த படங்களுக்கு நான்தான் வில்லனாக இருப்பேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படத்துக்கும் நான்தான் வில்லன். ஒரு வருஷத்தில் பத்து படங்கள் வந்தாலும் அந்த படங்களுக்கு வில்லன் நானாகத்தான் இருப்பேன்.
அந்த காலத்தில்தான் கதாநாயகன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. நானும் மக்கள் ஆசியில் கதாநாயகன் ஆகி விட்டேன். அடி வாங்கி நடித்த நானும் வில்லனுக்கு அடி கொடுத்தேன். கதாநாயகிகள் கூட டூயட் பாடினேன்.
இப்படி வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து நிறைய சம்பாதித்து விட்டேன். போதும் இனியும் நாம் நடித்தால் அப்பா வேடத்தில்தான் நடிக்க வேண்டும். அப்பா வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.
இப்படி ஒதுங்கி இருக்கும் போதுதான் தெலுங்கு படம் ஒன்றில் என்னை நடிக்க கேட்டார்கள். தெலுங்கில் பெரிய நடிகர் கோபிசந்த் அவருக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் என அனைவரும் தமிழர்கள். ஆனால் படம்தான் தெலுங்குபடம்.
படத்தின் கதாநாயகி நடிகை திரிஷா. என்னை மாமாகாரு என்று படத்தில் கூப்பிட்டபோதே செத்தேன். போதுமடா சாமி இனி அப்பா வேடம் எல்லாம் வேண்டாம் என நினைத்தேன்.
இடையில் ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பா வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடித்தேன். பெயரும் கிடைத்தது. இத்தோடு சரி என்று நினைத்து ஒதுங்கி இருக்கிறேன். நடித்து சம்பாதித்தது போதும். சந்தோஷமாக இருக்கிறேன்.
இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார். சத்யராஜ் பேச்சை பார்வையாளர்கள் முன் வரிசையில் அமர்ந்து நடிகர் சிவகுமார் ரசித்து கேட்டார்.