பாகிஸ்தான் சிறையில் இருந்து 29 இந்தியர்கள் விடுதலை. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்துள்ளார் ஒரு பெண். வாலிபராக சென்றவர் வயோதிகராக திரும்பி உள்ளார்.
பாகிஸ்தான் சிறைகளில் வாடிய 29 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் கராச்சி உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் 29 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை செய்யப்பட்டவர்கள் பாக்., சிறைகளிலிருந்து லாகூர் வந்தனர். பின்னர் தனி பஸ் மூலமாக அட்டாரி வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கு முன்னதாக இந்திய சிறைகளில் வாடிய பாகிஸ்தான் மீனவர்கள் 14 பேர் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவரை எப்படியாவது மீண்டும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மனைவிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த கஜானந்த் சர்மா என்பவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32-வது வயதில் காணாமல் போனார். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையே, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது.
விடுதலையானவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மாவை, அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர். வாழ்நாளில் ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் காத்திருந்தேன் என மக்னி தேவி கூறியுள்ளார்.
நிச்சயம் அவர் திரும்பி வருவார் என கடந்த 36 ஆண்டுகளாக மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அவரை பிரிந்திருந்த காலங்கள் மிக கடினமானவை.எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பினேன். அதனால் தான் எனது நம்பிக்கை நிறைவேறியது என கூறியுள்ளார். கஜனாந்தாவிற்கு தற்போது 68 வயதாகியுள்ளது.