கருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். ஒரு நாள் யாரோ ஒரு ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளில் குறிப்பெழுதியிருந்தார். அதற்குக் கருணாநிதி ‘ஏனப்பா வயதை மதித்தாவது எழுத வேண்டாமா?’ என்ற தொனிப்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். அதற்கு மேற்படி ஈழத்தமிழர் ‘நீங்கள் மட்டும் பார்வதியம்மாவின் வயதை மதித்தீர்களா?’ என்று கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்விக்கு கருணாநிதி எதிர்வினையாற்றவில்லை.
ஈழத்தின் பெருங்கிழவியான பார்வதியம்மா பிறந்த அதே நாளில் தமிழகத்தின் பெருங் கிழவனாகிய கருணாநிதியும் இயற்கை எய்தியிருக்கிறார். அவர் உயிர் பிரிய முன்பு அதாவது அவர் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நாட்களில்; ஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர் அவரை விமர்சித்து முகநூலில் எழுதத் தொடங்கினார்கள். பிரான்சில் வசிக்கும் ஒருவர் கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே அவருக்கு அஞ்சலிக்குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார். அவரைப் போல பலரும் கருணாநிதியின் இறுதிக்கட்டத்தை ஒருவித பழிவாங்கும் உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதே சமயம் ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் கருணாநிதியைப் போற்றியும் எழுதியுள்ளார்கள். லண்டனில் வசிக்கும் புது சுரவி கருணாநிதியின் அரசியலை விமர்சித்த அதே சமயம் அவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பைப் போற்றியிருந்தார். அதற்குக் கனடாவில் வசிக்கும் சேரன் அவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்று கூற முடியுமா? என்ற தொனிப்பட கேள்வி கேட்டிருந்தார்.
இப்படியாகக் கருணாநிதி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போது ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பதிவுகளை எழுத எழுத தமிழகத்தில் உள்ள தி.மு.க ஆதரவாளர்களில் அநேகர் மேற்படி பதிவுகளுக்கு எதிராக கோபத்தோடு எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள். தமது பெருங்கிழவனை விமர்சித்தவர்களைத் திருப்பித் தாக்குவதற்காக அவர்களில் ஒரு பகுதியினர் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதினார்கள். இந்த முகநூல் விவாதம் பல சந்தர்ப்பங்களில் பொது வெளி நாகரிகத்தைப் புறக்கணிப்பதாகக் காணப்பட்டது. இறந்து கொண்டிருக்கும் ஒருவரைப்பற்றி எழுதும் போது தமிழ்ப்பண்பாட்டின் செழிப்பைக் காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மிகச் சிலராலேயே செவிமடுக்கப்பட்டன.எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை அந்திவேளையில் கருணாநிதி இயற்கை எய்தியதோடு மேற்படி வாதப்பிரதிவாதங்கள் ஒப்பீட்டளவில் தணிந்து விட்டன. அவரைக் கடுமையாக விமர்சித்த சிலர் கூட அவருக்கு நாகரிகமாக அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
இப்படியாக கருணாநிதியை முன்வைத்து இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் நிகழ்ந்துவரும் விவாதங்களில் வாசிக்கக் கிடைத்தவற்றைத் தொகுத்துப் பார்த்த போது பெற்ற அவதானங்கள் வருமாறு.
முதலாவது – கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்று கணிசமான அளவு ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். அதே சமயம் இந்திய மாநிலக் கட்டமைப்பிற்குள் கருணாநிதி ஒரு சுதந்திரமான தலைவர் அல்லவென்றும் எம்.ஜி.ஆரோ அல்லது ஜெயலலிதாவோ சுதந்திரமான தலைவர்கள் அல்லவென்றும் ஓர் அடிமை இன்னொரு அடிமைக்கு உதவுவதில் அடிப்படையான வரையறைகள் இருந்தனவென்றும் ஒரு பகுதியினர் வாதாடுகிறார்கள்.
இரண்டாவது – எம்.ஜி.ஆரோடு ஒப்பிடுகையில் கருணாநிதி புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமானவர் அல்ல. என்ற ஒரு கருத்து. ஆனால் தமிழகத்தின் கட்சிகளுக்கிடையிலான போட்டியில் எம்.ஜி.ஆர் புலிகளின் இதயத்தை வென்றெடுத்து விட்டதாகவும் குறிப்பாக புலிகள் இயக்கத் தலைமைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே தனிப்பட்ட பிணைப்பு ஒன்று ஏற்பட்டு விட்டது என்றும் இது அதன் தர்க்கபூர்வ விளைவாக கருணாநிதியை தூரத் தள்ளிவிட்டது என்றும் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.
மூன்றாவது – ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களில் ஈழத் தமிழருக்கு எதிரான போக்கு வெளிப்படையாகத் தெரிந்தாலும் நடைமுறையில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கடி குறைவாயிருந்தது.
நாலாவது – கருணாநிதியின் ஆட்சிக்காலங்களில் அவர் ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படையாக எதிர் நிலைப்பாட்டைக் காட்டாவிட்டாலும் நடைமுறையில் ஈழத்தமிழர்கள் மீதான கெடுபிடிகள் அதிகமிருந்தன.
ஐந்தாவது- இறுதிக்கட்டப்போரில் கருணாநிதி நாடகமாடினார். அவர் இனப்படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை. மத்திய அரசாங்கத்துக்கு இலக்கியத்தனமாகக் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் துணிச்சலான விசுவாசமான அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அவர் தன்னுடைய இயலாமையை விசுவாசமாக ஒப்புக்கொண்டிருந்திருக்கலாம். மாறாக பொய்யிற்கு நாடகமாடியிருக்கத் தேவையில்லை என்று ஒரு பகுதியினர் நம்புகின்றனர். அதே சமயம் ஐ.பி.கே.எவ் வெளியேறுவதற்கு முன்பின்னாக தனக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடல்களை இணைக்கப்பட்டிருந்த வட – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் பதிவு செய்திருந்தார். அதில் கருணாநிதி மாகாணசபையைக் கலைக்கச் சொல்லிக் கேட்டதாகவும் தான் அதற்கு உடன்படவில்லையென்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனக்கு நெருக்கமான தோழர்க்ள கொல்லப்பட்ட வேளை கருணாநிதி அவர்களைப் பாதுகாக்கவில்லை என்ற தொனிப்படவும் எழுதியிருக்கிறார்.
ஆறாவது – பார்வதியம்மாவின் விடயத்திலும் கருணாநிதி புலிகளுக்கு எதிரான மனோநிலையுடன்தான் முடிவெடுத்திருக்கிறார் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். மற்றொரு தரப்பினர் அது விடயத்தில் கருணாநிதி பார்வதியம்மாவிற்கு உதவ விரும்பியிருந்தார் என்றும் வை.கோ போன்ற ஏனைய தலைவர்கள் அதில் தலையிட்டதன் விளைவாகவே பார்வதியம்மா இந்தியாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது போயிற்று என்று வாதிடுகிறார்கள்.
ஏழாவது – ஈழத் தமிழர்கள் தமது தோல்விகளுக்கெல்லாம் புறத்தியாரையே குறை கூறுகிறார்கள். தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வதில்லை. என்று ஒரு பகுதியினர் கூறுகிறார்கள். கருணாநிதி மட்டுமல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களாலும் கூட கடைசிக்கட்டப் போரை தடுத்திருக்க முடியாது. புவிசார் அரசியல் நிலமைகளை விளங்கி வைத்திருக்கும் ஒருவர் இப்படியாக தனிநபர்களில் நம்பிக்கை வைக்க முடியாது. தனி நபர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் முடியாது. ஓர் உலகளாவிய மற்றும் பிராந்திய நிகழ்ச்சி நிரலின் படியே இறுதிக்கட்டப் போரில் உலகின் பெரும்பாலான நாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக ஓரணியில் நின்றன. இப்பொழுதும் கூட அந்த நிலமையில் பெரிய மாற்றம் இல்லை என்றும் ஒரு பகுதியினர் வாதாடுகிறார்கள்.
எட்டாவது – தமிழ் இயக்கங்கள் தமக்குப் பின்தளமாக்க கிடைத்த தமிழகத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டன. குறிப்பாக தமிழகத்தில் நிகழ்ந்த படுகொலைகளின் பின்னணியில்தான் கணிசமான அளவு தமிழகத் தலைவர்களும், புத்திஜீவிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு அதிகம் நெருங்கி வருவதை தவிர்க்கத் தொடங்கினார்கள் என்று ஒரு பகுதியினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஒன்பதாவது – ஈழத் தமிழர்களுக்கு தலைவர்களாயிருப்பவர்கள் முழுத்தமிழினத்திற்கும்; தலைவர்களாக முடியாது. அது போலவே தமிழகத்துத் தலைவர்கள் முழுத்தமிழினத்திற்கும் தலைவராக முடியாது. அதாவது தமிழ்த்தேசியம் எனப்படுவது ஓர் உலகளாவிய தோற்றப்பாடு அல்ல. மாறாக அது பௌதிக எல்லைகளாலும் ஆட்சி எல்லைகளாலும் இடத்துக்கிடம் வேறுபடும் ஒரு தோற்றப்பாடாகும் என்ற ஒரு வாதம் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்பட்டது.
மேற்கண்ட அனைத்து அவதானங்களையும் விரிவாகப் பார்ப்பதென்றால் ஒரு சிறு கட்டுரை போதாது. அது ஒரு பெரிய ஆய்வுப் பரப்பு. இது தொடர்பான ஆய்வுகளை அதிகம் செய்ய வேண்டும்.
கருணாநிதி கடைசிக்கட்டப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்றவில்லை என்றும் பார்வதியம்மாவிற்கு உதவவில்லை என்றும் பெரும்பாலானவர்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள். ஆனால் வரதராஜப்பெருமாள் கூறுகிறார் அவர் தனது தோழர்களைப் பாதுகாக்கவில்லை என்று. இவ்விரு கூற்றுக்களும் எதைக் காட்டுகின்றன? ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்பது எதைக் குறிக்கிறது? ஒரு முறை தமிழகத்தில் நின்ற போது மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கணேசனோடு உரையாடக் கிடைத்தது. அவர் பின்வரும் தொனிப்படச் சொன்னார். அண்ணா போராடினார் முடியவில்லை. எங்களாலும் முடியவில்லை. ஆனால் அதைப் புலிகள் செய்தார்கள். அதனால் தான் அவர்களை ஆதரித்தோம் என்று. தமிழகத் தலைவர்களின் இயலாமையை அந்த இடத்தில் அவர் ஒப்புக்கொண்டார். அப்படிப்பட்ட தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கக்கூடும்?
உதாரணமாக எம்.ஜி.ஆர். இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தியாகிய போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். உடன்படிக்கை தொடர்பான ஒரு பொதுக் கூட்டத்திற்கு அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அக்கூட்டத்தில் உரையாற்றிய ரஜீவ்காந்தி உடன்படிக்கைக்கு எம்.ஜி.ஆரும் சம்மதம் என்று காட்டுவதுபோல எம்.ஜி.ஆரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து தன்னருகே நிறுத்தி வைத்து அவருடைய கையைத் தானே தூக்கி மக்களை நோக்கி அசைத்தார். புலிகள் இயக்கத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த எம்.ஜி.ஆரால் அந்த இடத்திலும் அதற்குப் பின்னரும் ஒரு கட்டத்திற்கு மேல் புலிகள் இயக்கத்திற்கு உதவ முடியவில்லை. தனிப்பட்ட ஒரு நட்பு ராஜீய அரங்கிலும் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொழுதும் ஒரு கட்டத்திற்கும் மேல் உதவ முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமா?
எனவே ஈழ – தமிழக உறவு தொடர்பில் இறந்த கால அனுபவங்களின் அடிப்படையில் புதிய பார்வைகள் அவசியம். இந்த விடயப் பரப்பை உணர்ச்சிகரமான ஒரு தொப்புள் கொடி உறவு என்று தட்டையாகப் பார்க்காமல் அதை ஓர் ஆய்வுப் பரப்பாக மாற்ற வேண்டும். அதிலிருக்கக் கூடிய பல்பரிமானங்களை விளங்கி புதிய உபாயங்களை வகுக்க வேண்டும்.
ஈழ – தமிழக உறவு எனப்படுவது வெறுமனே இன ரீதியிலான உணர்வுபூர்வ உறவு மட்டுமல்ல. இரு வேறு ஆள்புல எல்லைகளால் பிரிக்கப்பட்ட ஒரே இன மக்களுக்கிடையிலான பந்தம் அது. இங்கு இருவேறு ஆள்புல எல்லைகள் என்ற விடயம் அதிகம் அழுத்தத்திற்குரியது. எனவே ஈழத்தமிழ் நோக்குநிலையிலிருந்து விரிவான ஆய்வுகள் அவசியம். ஈழத்தமிழ் நோக்குநிலையிலிருந்து தமிழகத்தைக் கையாள்வது என்பது ஈழத்தமிழ் மக்களின் பிராந்திய வெளியுறவுக் கொள்கையின் இதயமான ஒரு பகுதி. அது வெறும் உணர்ச்சிகரமான ஒரு பரப்பு மட்டும் அல்ல. அதிகம் அறிவுபூர்வமான ஒரு ராஜியப் பரப்பு அது. தமிழகத்தைக் கையாள்வது என்பது ஒரு தட்டையான ஒற்றைப்படையான அணுகு முறையாக இருக்க முடியாது. அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக அணுகினால் அது தட்டையான ஓர் அணுகு முறையாகத்தான் இருக்கும். மாறாக அறிவு பூர்வமாக அணுகினால்தான் அது அதற்கேயுரிய பல பரிமாண, பலதட அணுகுமுறைகளுடன் விரியும்.
தமிழகம் எனப்படுவது தனிய அரசியல்வாதிகளும் கட்சித்தலைவர்களும் மட்டுமல்ல. அதற்குமப்பால் பரந்துபட்ட ஒரு வெகுசனப்பரப்பு உண்டு. அதில் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், மதத்தலைவர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் என்று ஒரு பெரிய சனப்பரப்பு உண்டு. எனவே தமிழகத்தைக் கையாள்வது என்பது கட்சிகளைக் கையாளும் அதே சமயம் கட்சி அரசியலுக்கு வெளியே வெகுசனங்களை நெருங்கிச் செல்வதும்தான்.
கருணாநிதியோ,எம்.ஜி.ஆரோ அல்லது ஜெயலலிதாவோ கட்சித் தலைவர்கள்தான். அவர்களுக்கென்று கட்சி அரசியல் உண்டு. ஈழத்தமிழர் விவகாரத்தை அவர்கள் தமது கட்சி அரசியற் தேவைகளுக்கு ஏற்றாற்போலவே பயன்படுத்தினார்கள். அதற்குமப்பால் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளிப்பதற்கு அவர்களில் யாரும் முத்துக்குமார் அல்ல. ஏன் அதிகம் போவான்? இறுதிக்கட்டப் போரில் கூட்டமைப்பு எம்.பிமார்களில் யாராவது சாகும்வரை உண்ணாவிரதமிருக்கத் தயாராக இருந்தார்களா? இல்லையே. எங்களுடைய எம்.பிமாரே சாகத்துணியாத போது அதை நாங்கள் தமிழகத் தலைவர்களிடம் எப்படி எதிர்பார்க்கலாம்?
அதே சமயம் முத்துக்குமார், செங்கொடி உட்பட 19 பேர் தமிழகத்தில் இதுவரையிலும் எங்களுக்காகத் தீக்குளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் கூட்டு மனச்சாட்சியின் தியாகிகள் இவர்கள். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு என்று அழைக்கப்படும் உணர்ச்சிகரமான உறவின் இரத்த சாட்சியங்கள் இவர்களே.
அதே சமயம் கட்சித் தலைவர்களை அவர்களுக்கேயான பின்புலத்தில் – ஊழவெநஒ – வைத்து அவர்களை அவர்களாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களைக் கையாளும் போது அங்குள்ள கட்சிச் சண்டைகளுக்குள் சிக்கிவிடக் கூடாது. அது அவர்களுடைய உள்ளுர் விவகாரம். அதில் ஈழத்தமிழர்கள் பக்கச்சாய்வான முடிவுகளை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. அதே சமயம் அவர்கள் தமது கட்சி அரசியலுக்காக ஈழத்தமிழ் அரசியலைக் கையாள்வதை ஒரு கட்டம் வரை தடுக்கவும் முடியாது.
எனவே இது தொடர்பில் பொருத்தமான ஒரு வியூகம் ஈழத்தமிழர்களிடம் இருக்க வேண்டும். கட்சி நலன்சார்ந்து ஈழத்தமிழ் விவகாரத்தை அணுகும் தரப்புக்களையும் நலன்சாராது இன உணர்வோடு ஈழத் தமிழ் விவகாரத்தை ஆதரிக்கும் தரப்புக்களையும் வேறு வேறாக அணுக வேண்டும்;. கருணாநிதி ஒரு தனி மனிதர் அல்ல. தமிழகத்தின் கோடிக் கணக்காண மக்களுக்கு அவர் ஒரு பெருந் தலைவர். அந்த மகாஜனங்கள் ஈழத் தமிழர்களுக்கு துன்பம் நேர்ந்தால் வெகுண்டெழுவார்கள். எனவே அந்த மக்களின் உணர்வுகளை மதித்துக் கருத்துக் கூற வேண்டும். அதே சமயம் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற எல்லாருடைய பங்களிப்புக்களையும் காய்தல், உவத்தல் அற்ற ஆய்வுப் பரப்புக்குள் கொண்டு வர வேண்டும்.ஈழத்தமிழர்கள் தங்களையும் சுயவிமர்சனம் செய்துகென்ன வேண்டும்.
மேற்கத்தைய அறிஞரான ஹாவார்ட் றிக்கிங்ஸ் இலங்கைத் தீவில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் சிறுபான்மை தாழ்வுச் சிக்கலோடும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பெரும்பான்மை தாழ்வுச் சிக்கலோடும் காணப்படுவதாகக் கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்கள் தங்களைத் தமிழகத்தோடு சேர்த்துச் சிந்திப்பதால் உயர்வுச்சிக்கலோடும் அவர்களைத் தமிழகத்தோடு சேர்த்துப் பார்;ப்பதால் சிங்கள மக்கள் தாழ்வுச்சிக்கலோடும் இருப்பதாக அவர் கூறுகின்றார். இந்தியாவின் மீதான சிங்களத் தலைவர்களின் எதிர்ப்புணர்வே ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைக்குக் காரணம் என்று மு.திருநாவுக்கரசு கூறுகிறார். ஆனால் கருணாநிதியை முன்வைத்து நடந்த விவாதங்களைப் பார்க்கும் போது ஹாவார்ட் றிக்கிங்ஸ் கருதிய தொப்புள்கொடி உறவு இப்பொழுது பலவீனப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது. அந்த உறவை அறுக்க விளையும் சக்திகள்; 2009 மேக்குப் பின்னரும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது.
எனவே ஈழத்தமிழர்கள் எப்படி தமிழகத்தை அணுகுவது என்பது தொடர்பில் தெளிவாகவும் தீர்க்கதரிசனத்தோடும்; சிந்திக்க வேண்டும். கருணாநிதியை அவருடைய பின்னணிக்குள் – (Contex) வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும். அவர் தன்னுடைய அரசியலைச் செய்தார். எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியலைச் செய்தார். ஜெயலலிதா தன்னுடைய அரசியலைச் செய்தார். ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும் வெளியாருக்காகக் காத்திருக்காமல்.
நிலாந்தன்