பூகோள அர­சியல் மாற்­றங்கள்: இலங்கை எதிர்­கொள்ளும் சவால்!

ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடி­யாது என்­பது போல தான், முதன்­மை­யான நாடு என்ற தகை­மையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்­பாத இரண்டு நாடு­களும், முட்டி மோதத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்த மோதலின் விளை­வுகள் இலங்கை போன்ற நாடு­க­ளிலும் எதி­ரொ­லிக்­கலாம் என்­பது பொது­வான எதிர்­பார்ப்பு. கடந்­த­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட இதனை ஏற்றுக் கொண்­டி­ருக்­கிறார்

அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்கும் இடையில் நடந்து கொண்­டி­ருக்கும் வணிகப் போர், அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்­சி­னைகள் என்­பன இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் தாக்­கத்தைச் செலுத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்­துள்­ளது.

ஈரா­னுக்கு எதி­ராக அமெ­ரிக்கா விதித்­துள்ள தடை­க­ளினால் ஏற்­படக் கூடிய பிரச்­சி­னையும், அமெ­ரிக்­காவும் சீனாவும் மாறி மாறி இறக்­கு­மதிப் பொருட்­களின் மீது விதித்த கடு­மை­யான வரி­களை அடுத்து எழுந்­துள்ள வணிகப் போரும், இலங்­கைக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடும் என்று பர­வ­லாக கணிக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்கா, சீனா, ஈரான் இந்த மூன்று நாடு­களுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உற­வுகள் மிக நெருக்­க­மா­னவை. அர­சியல் இரா­ஜ­தந்­திர உற­வு­களைத் தாண்டி, பொரு­ளா­தார ரீதி­யாக இந்த உற­வுகள் சிக்­க­லா­னவை.

ஈரா­னிடம் இருந்து எண்­ணெயைக் கொள்­வ­னவு செய்­கி­றது இலங்கை. அது­போ­லவே இலங்கைத் தேயி­லைக்கு ஈரான் மிக முக்­கி­ய­மா­ன­தொரு சந்­தை­யாக இருக்­கி­றது.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், இலங்­கையின் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த அமை­விடம் தான் அதற்கு முக்­கியம்.

அமெ­ரிக்­காவின் பசுபிக் கட்­டளைப் பீடத் தள­ப­தி­யாக இருந்த போது, தென்­கொ­ரி­யா­வுக்­கான தற்­போதைய அமெ­ரிக்க தூதுவர் அட்­மிரல் ஹாரி ஹாரிஸ், 2017இல் நடந்த காலி கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்று உரை­யாற்­றிய போது அமெ­ரிக்­கா­வுக்கு இலங்கை ஏன் முக்­கி­ய­மா­னது என்­ப­தற்கு மூன்று கார­ணங்­களைச் சொல்­லி­யி­ருந்தார்.

முத­லா­வது, அமை­விடம், இரண்­டா­வது அமை­விடம், மூன்­றா­வதும் அதே அமை­விடம். இவை தான் அந்த மூன்று கார­ணங்கள். அதா­வது இலங்­கையின் அமை­விடம் தான் அமெ­ரிக்­கா­வுக்கு முக்­கி­ய­மா­னது.

இலங்­கையின் பிர­தான ஏற்­று­மதி நாடாக அமெ­ரிக்கா விளங்­கு­கி­றது. மிகப் பெரி­ய­ளவில் இல்­லா­வி­டினும், இலங்­கைக்கு அதி­க­ளவு கொடை­களை அளிக்­கின்ற ஒரு நாடா­கவும் கூட அமெ­ரிக்கா இருக்­கி­றது.

சீனா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உற­வு­களை அவ்­வ­ளவு எளி­தாக யாரும் சொல்லி விட முடி­யாது. “சீனா எமது நெருங்­கிய நண்பன். எமக்­கி­டையில் ஒரு சிறப்­பான உறவு இருக்­கி­றது.” என்று, இலங்­கையின் அர­சியல் தலை­வர்கள், சீனத் தலை­வர்­களைச் சந்­திக்­கின்ற போது அடிக்­கடி கூறிக் கொள்­வார்கள். இலங்­கையின் அபி­வி­ருத்­திக்­கான கொடைகள், கடன்­களை வழங்கும் பிர­தான நாடாக சீனா விளங்­கு­கி­றது. சீன சுற்­றுலாப் பய­ணி­களும், தேயிலை உள்­ளிட்ட ஏற்­று­ம­தி­களும் இலங்­கைக்கு முக்­கியம்.

ஆனால் சீனாவோ, இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்­கா­வுக்கு உள்­ளது போன்ற அமை­விட முக்­கி­யத்­துவம் மீதே கரி­சனை கொண்­டி­ருக்­கி­றது.

இப்­ப­டிப்­பட்­ட­தொரு நிலையில், ஈரா­னு­டனும், சீனா­வு­டனும் அமெ­ரிக்கா நிகழ்த்தி வரும் பனிப்போர், இலங்­கைக்கும் நடுக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெ­ரிக்­காவின் பின்னால் நேட்டோ நாடு­களும், சோவியத் ஒன்­றி­யத்­துக்குப் பின்னால், வார்சோ நாடு­களும் அணி­வ­குத்­தன.

1990 களின் தொடக்கம் வரை, இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான பனிப்போர் நீடித்­தது. அமெ­ரிக்­காவும், சோவியத் ஒன்­றி­யமும் நிகழ்த்­திய பனிப் போருக்குள், நேட்டோ, வார்சோ நாடுகள் அகப்­பட்டுக் கொண்­டன. ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து தம்மை வளர்த்துக் கொள்­வதில் இந்த நாடுகள் ஆர்வம் காட்­டின.

ஆனால் இந்த இரண்டு அணி­க­ளிலும் சேராமல், நடு­நி­லை­யோடு இருக்க முயன்ற நாடு­க­ளுக்குத் தான் சிக்கல். பாம்­புக்குத் தலையும் மீனுக்கு வாலையும் காட்டித் தப்­பிக்க வேண்­டிய நிலை இந்த நாடு­க­ளுக்கு.

இரண்டு தரப்­பு­க­ளுக்கும் நல்­ல­வர்­க­ளாக நடிக்க வேண்டும். உற­வு­களை சம­நி­லை­யாக வைத்துக் கொள்ள வேண்டும். என்று ஏகப்­பட்ட சிக்­கல் ­களை எதிர்­கொண்­டன.

இந்தச் சிக்­கல்­க­ளுக்கு முடிவு கட்டும் நோக்கில் தான், அணி­சேரா நாடு­களின் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. அது நடு­நி­லையில் உள்ள நாடு­களைப் பாது­காக்கும் நோக்­கத்தைக் கொண்­டது.

இந்­தியா, இலங்கை போன்ற நாடுகள் இதில் இணைந்து கொண்­டதன் மூலம், தம்மை இரண்டு பிர­தான பனிப்போர் நாடு­க­ளிடம் இருந்தும் பாது­காப்புத் தேடிக் கொள்ள முயன்­றன.

அமெ­ரிக்­காவும் சோவியத் ஒன்­றி­யமும் நடத்­திய பனிப்­போ­ரினால், ஏரா­ள­மான நாடுகள் பாதிக்­கப்­பட்­டன. பல நாடு­களில் உள்­நாட்டுப் போர்கள் உரு­வா­கின. அதனை ஊக்­கு­வித்து, நேட்­டோவும், வார்­சோவும் தமது ஆயுத ஏற்­று­ம­தியை அதி­க­ரித்துக் கொண்­டன.

1990 களின் தொடக்­கத்தில் சோவியத் ஒன்­றி­யத்தின் உடை­வுடன் தான், இந்தப் பனிப்போர் முடி­வுக்கு வந்­தது. எந்த அணி­யையும் சேராமல் இருந்த நாடு­க­ளுக்குத் தான் இதனால் நிம்­மதி.

ஏனென்றால் ஏறச் சொன்னால் எரு­துக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முட­வ­னுக்குக் கோபம் என்ற நிலை தான் அவர்­க­ளுக்கு.

கிட்­டத்­தட்ட இரண்­டரை தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர், மீண்டும் ஒரு பனிப்போர் உரு­வாகும் அறி­கு­றிகள் தென்­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

இம்­மு­றையும் அமெ­ரிக்­காவே மேற்­கு­ல­கத்தின் பக்கம் நின்று இந்தப் போருக்குத் தலை­மை­யேற்கப் போகி­றது. மறு­பக்­கத்தில் சோவியத் ஒன்­றியம் இல்லை. சோவியத் ஒன்­றியம் உடைந்த பின்னர் பல­மான தனி­நா­டாக உரு­வெ­டுத்த ரஷ்யா ஒரு பக்­கத்தில் நின்று இப்­போது வேடிக்கை பார்க்­கி­றது.

அதற்குப் பதி­லாக அமெ­ரிக்­கா­வுடன் வணிகப் போரை முன்­னெ­டுத்­தி­ருக்கும் நாடு சீனா. உலகின் இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட நாடாக மாறி­யி­ருக்கும் சீனா தனது வல்­ல­மையை அமெ­ரிக்­கா­வுக்கு இணை­யாக மாற்­றி­யி­ருக்­கி­றது.

ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடி­யாது என்­பது போலத் தான், முதன்­மை­யான நாடு என்ற தகை­மையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்­பாத இரண்டு நாடு­களும், முட்டி மோதத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்த மோதலின் விளை­வுகள் இலங்கை போன்ற நாடு­க­ளிலும் எதி­ரொ­லிக்­கலாம் என்­பது பொது­வான எதிர்­பார்ப்பு. கடந்­த­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட இதனை ஏற்றுக் கொண்­டி­ருக்­கிறார்.

“அமெ­ரிக்க – சீன வணிகப் போர், இலங்­கை­யையும் பாதிக்கும் சாத்­தியம் உள்­ளது. இந்தப் பூகோள நிலை­மை­களால் ஏற்­படக் கூடிய எத்­த­கைய மோச­மான நிலை­யையும் எதிர்­கொள்­வ­தற்கு இலங்கை தயா­ராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.

சீனாவின் பொரு­ளா­தாரப் பொறியில் இலங்கை சிக்கிப் போயுள்­ளது. மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் மீது குற்­றம்­சாட்­டிய தற்­போ­தைய அர­சாங்­கமும் கூட இப்­போது சீனா­விடம் கடனை வாங்கிக் குவிக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் அதிக வட்­டிக்கு கடன் கொடுத்­தது சீனா என்று குற்­றம்­சாட்­டிய தற்­போ­தைய அர­சாங்கம், இப்­போது சீனா­விடம் இருந்து 5.25 வீத வட்­டிக்கு 1 பில்­லியன் டொலர் கடனை வாங்­கி­யி­ருக்­கி­றது.

ஏனைய நிதி நிறு­வ­னங்­களை விட சீனாவின், கடன் விதி­மு­றைகள் இல­கு­வா­ன­தாக இருக்­கி­றது என்று அர­சாங்கம் கூறு­கி­றது. இதையே தான் முன்னர் மஹிந்த ராஜபக் ஷவும் கூறினார்.

எனவே, ஆட்­சிகள் மாறி­னாலும், இலங்கை அரசு சீனா­விடம் இருந்து கடன்­களை வாங்­கு­வது பொரு­ளா­தார நலன்­களை அடை­வது என்ற இலக்­கி­லேயே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

இது அமெ­ரிக்­கா­வுக்குப் பிடிக்­க­வில்லை என்­பது அர­சாங்­கத்­துக்கு தெரி­யாத விட­ய­மல்ல. ஆனால் வேறு வழியும் அதற்குக் கிடை­யாது.

அமெ­ரிக்­கா­வையும் பகைக்க முடி­யாமல் சீனா­வையும் கைவிட முடி­யாமல், இலங்கை சிக்கிப் போயி­ருக்­கி­றது.

இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வணிகப் போர் இன்னும் தீவி­ர­ம­டை­யு­மானால் – இது இலங்­கைக்கு நெருக்­க­டிகள் அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்தக் கூடும்.

அது­போல தான், அமெ­ரிக்­காவின் தடை­களை எதிர்­கொண்­டுள்ள ஈரா­னுடன் நெருக்­க­மான உற­வு­களை வைத்­தி­ருந்­தாலும், பொரு­ளா­தார ரீதி­யான நலன்­களை அடைய முடி­யாமல் திண­று­கி­றது அர­சாங்கம்.

ஈரான் மீது அமெ­ரிக்கா புதிய தடை­களை அறி­வித்த பின்னர் முத­லா­வது வெளி­நாட்டுத் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெஹ்ரான் சென்­றி­ருந்தார்.

அப்­போது நடத்­தப்­பட்ட பேச்­சுக்­களில் எண்ணெய் இறக்­கு­மதி, தேயிலை ஏற்­று­மதி உள்­ளிட்ட விட­யங்­களில் உற­வு­களை பலப்­ப­டுத்த இணக்கம் காணப்­பட்­டது.

ஜனா­தி­ப­தியின் ஈரான் பயணம் வெற்றி, ஈரா­னிடம் இருந்து எண்ணெய் வாங்­கினால் எரி­பொருள் விலை குறையும் என்­றெல்லாம் தம்­பட்டம் அடிக்­கப்­பட்­டது.

ஆனால் கடை­சியில், என்ன நடந்­தது? அமெ­ரிக்­காவின் தடையை மீறி ஈரா­னிடம் இருந்து எண்ணெய் வாங்­கு­வதில் சிக்­கல்கள் நீடிக்­கின்­றன. வாங்­கப்­படும் எண்­ணெய்க்­கான கொடுப்­ப­னவை ஈரா­னுக்கு டொல­ராக வழங்க முடி­யாத சிக்கல் இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்­ளது..

இதனால், எண்­ணெய்க்குப் பதி­லாக தேயிலை என்ற பண்­ட­மாற்று முறையில் வணிகம் செய்­வது பற்­றியும் பேசப்­ப­டு­கி­றது. ஆனால் இன்­னமும் முடிவு எதுவும் வர­வில்லை.

இந்த நிலையில் ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் அண்­மையில் கொழும்­புக்கு வந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து விட்டுச் சென்­றி­ருந்தார்.

அந்தப் பேச்­சுக்­களின் போது, இரண்டு நாடு­களின் உற­வு­க­ளுக்கு இடையில் யாரும் குறுக்கே வர முடி­யாது என்று ஜனா­தி­பதி கூறி­ய­தாக ஈரா­னிய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. ஆனால், அது­பற்றி ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவோ வெளி­வி­வ­கார அமைச்சோ வாய் திறக்­க­வில்லை.

ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்­சரின் பய­ணத்­துக்கோ, அவ­ரது சந்­திப்­புகள் குறித்தோ இலங்கை அர­சாங்கம் முக்­கி­யத்­துவம் கொடுத்ததாக காட்டிக் கொள்ளவில்லை. ஈரானிய ஊடகங்களிலேயே அதிகளவில் செய்திகள் வெளியாகின.

இதனை வைத்துப் பார்க்கும் போது. ஈரானுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதில், இலங்கைக்கு அழுத்தங்கள் இருப்பதை உணர முடிகிறது.

அமெரிக்கா- ஈரான் இடையே நீடிக்கும் பிரச்சினையால், அடுத்த மூன்று மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும், இதனால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அமெரிக்கா, சீனா, ஈரான் போன்ற நாடுகளை மையப்படுத்தி, பூகோள அரசியல் சூழலில், உருவாகி வருகின்ற மாற்றங்கள், இலங்கை போன்ற நாடுகளுக்கு சிக்கல்களாகவே அமைந்திருக்கின்றன.

இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க இலங்கை போன்ற நாடுகள் எத்தகைய அணுகுமுறைகளைத் தெரிவு செய்யப்போகின்றன என்பது தான், எதிர்பார்ப்புக்குரிய விடயமாக இருக்கிறது.

ஹரி­கரன்