இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் வயோதிகம் காரணமாக காலமானார்.
கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபாலின் முழுப்பெயர் சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவார்.
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக அந்தாண்டு நோபல் பரிசு நைபாலுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்களை பற்றி இந்த புத்தகம் பேசியது. இந்நிலையில், 85 வயதான அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். நைபாலின் மறைவுக்கு சர்வதேச அளவிலான பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.