கூட்டு அரசின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடையவுள்ள நிலையில், அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
அடுத்த தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்புக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேனவே தலைமை அமைச்சராக நியமிப்பாரெனவும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக ஆட்சியை அமைக்குமெனவும் பொது எதிரணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பொது எதிரணியினர் இவ்வாறு கூறிவருவது புதியதொரு விடயமெனக் கூறமுடியாது. வழக்கமானதொரு கருத்து வெளிப்பாடே அது.
தமது எண்ணப்படி நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்தவர் முன்னாள் அரச தலைவர் மகிந்த
அரசதலைவராகச் சுமார் 10ஆண்டுகள் பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச. தமது ஆட்சிக் காலத்தில் ஓர் அரசரைப் போன்றே அவர் நடந்து கொண்டார். அவரது சொல்லுக்கு மறுவார்த்தை கூறுவதற்கு அந்தக் காலகட்டத்தில் எவருக்குமே துணிவு இருந்ததில்லை.அவருக்கு எதிராக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவரின் கீழ் ஓர் அமைச்சராகப் பணியாற்றியவர்தான் தற்போதைய அரசதலைவர். இந்த நிலையில் அவருக்குக் கீழ் பணியாற்றுவதற்கு மகிந்த முன்வருவதை ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் மகிந்தவைச் சார்ந்தவர்கள் இதைச் சிறிதுகூட எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.
இதைவிட, மகிந்த மிகப்பெரிய அளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அதைவிட, அவரது சகோதரர்கள் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பிரபல விளையாட்டு வீரர் தாஜூதீனின் சாவு தொடர்பாக மகிந்தவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ‘நல்லாட்சி’ என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும், முதுகெலும்பு இல்லாத இன்றைய கூட்டு அரசினால் இவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியவில்லை. கூட்டு அரசு சகலத்துக்கும் அஞ்சி அஞ்சியே தனது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றது. மகிந்த தரப்புக்கு இது பெரும் வாய்ப்பாகவே அமைந்துவிட்டது.
குள்ள நரித்தன அரசியலுக்குப்பெயர் பெற்றவர் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தலைமை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, தமக்கு எதிரான நடவடிக்கைகளையெல்லாம் அமைதியாகவே அவதானித்துக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. மைத்திரிபால சிறிசேனவை அரசதலைவர் பதவியில் அமர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த அவர், தமது பதவியைக் காப்பாற்றுவதற்கான வியூகங்களை வகுக்காமல் சும்மா இருக்கமாட்டார் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அரசியல் குள்ள நரித்தனத்தில் கை தேர்ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகன் முறையான ரணிலும், அமைதியாக இருந்து குள்ள நரித்தனமாகக் காய்களை நகர்த்துவதில் வல்லவர். புலிகளின் துணைத் தலைவராகவும், சிறந்த தளபதிகளில் ஒருவராகவும் திகழ்ந்த கருணாவை புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்தெடுப்பதற்கு அவரது இந்தக் குள்ளநரித் தந்திரம் உதவியுள்ளது. ஆனால் இதுவே புலிகளுக்கு அவர்மீது கோபத்தை ஏற்படுத்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசதலைவர் தேர்தலில் ரணில் தமது வெற்றி வாய்ப்பை இழப்பதற்குக் காரணமாகவும் அமைந்துவிட்டது. தோல்விகளைக் கண்டு துவளாதவர் ஒருவர் இந்த நாட்டில் இருக்கிறார் என்றால் ரணில் விக்கிரமசிங்கவையே அதற்கு உதாரணமாகக் குறிப்பிட இயலும். அந்த அளவுக்கு தமது மனதைத் திடப்படுத்திக் கொள்வதில் அவர் வல்லவர்.
அடுத்த அரச தலைவருக்கான தேர்தலைக் குறிவைத்துக்காய் நகர்த்தும் ரணில்
தற்போது அடுத்த அரச தலைவர் தேர்தலைக் கருத்தில் கொண்டு ரணில் செயற்படுவதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், தமிழர்களின் வாக்குகள் மிக அவசியமானவை என்பதை உணர்ந்து கொண்ட ரணில், அடிக்கடி வடபகுதிக்கு வருகை தருகின்றார். நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொள்கின்றார். அதுமட்டுமல்லாது, வடக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசுகின்றார். பலாலி வானூர்தி நிலையத்தை சிவில் விமானப் போக்குவரத்துக்கு இயங்க வைப்பது தொடர்பாகக் கவனம் செலுத்துகின்றார். மகிந்தவின் பரமவைரியும், ரணிலுக்கு வேண்டியவருமான சந்திரிகா அம்மையார் 2020க்குள் தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்துவிடுமெனக் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவர்களின் உள்நோக்கம் புலப்படுகின்றது.
அடுத்த அரச தலைவர் தேர்தலில் மகிந்த போட்டியிட முடியாத நிலை தோன்றினால், மகிந்த குடும்பத்துக்கு வௌியிலிருந்தே ஒருவர் போட்டியிடுவாரென வௌிவந்த அறிவிப்பு மகிந்தவுக்கு எதிரானவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கக்கூடும்.
தென்பகுதியின் அரசியல் நிலவரங்கள் கலங்கிய குட்டையைப் போன்று காட்சியளிக்கின்றது. இவற்றுக்குத் தௌிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளையும் காணோம். இதை அமைதியாக இருந்து பார்ப்பதைத் தவிர தமிழ்மக்களுக்கு வேறு மார்க்கம் எதுவும் கிடையாது.
நன்றி -உதயன்