விக்கியின் தெரிவுகள்!

அண்மையில் நடக்க இருக்கின்ற வடக்கு மாகாணசபை தேர்தலில் பின்வரும் மூன்று தெரிவுகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு காத்திருக்கின்றன,

01. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய கூட்டமைப்பு = விக்கியின் அரசியல் மரணம்.

02. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + ஒட்டுக்குழுக்கள் (PLOT, TELO, EPRLF) = விக்கியின் அரசியல் மலினம்.

03. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய மக்கள் முன்னணி = விக்கியின் அரசியல் மலரும்.

முதலாவது கூட்டை பொறுத்தவரையில் அந்த தெரிவு விக்கியின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதாகும். விக்கிக்கு இருக்கின்ற இரண்டாவது முறையும் முதலமைச்சராக வரவேண்டும் என்ற பதவி ஆசை இந்த கூட்டுக்கு அவரை கடைசி நேரத்தில் கொண்டு போய் சேர்க்கலாம். ஆனால் இவரை வெளியில் அப்புறப்படுத்த வேண்டும் என நினைக்கும் கூட்டமைப்புக்கு இந்த தடவை மிக இலகுவாக இருக்கும். ஏனெனில் கடந்த தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பொழுது மக்கள் தடுத்தார்கள். அந்த மக்களுக்குள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பங்கு கணிசமான அளவு இருந்தது, ஆனால் இந்த முறை அப்படியான ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகின்ற பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணி திரும்பி பார்க்கும் என்று நான் நினைக்கவில்லை. பொதுமக்கள் கூட, இவர் தெரிந்தே போய் விழுந்தார் என்பதால் கருத்தில் எடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த கூட்டில் நிற்சயமாக முதலமைச்சராக வருவார், ஆனால் நீடிக்க விடமாட்டார்கள், இறுதியில் சிறு கண்ணீருடன் அரசியலில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும்.

இரண்டாவது தெரிவை பொறுத்தமட்டில் அவர் நிற்சயமாக பெரும்பான்மை எடுத்து முதலமைச்சர் ஆவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை, சில வேளைகளில் சிங்களக்கட்சிகள் அல்லது வேறு குழுக்களுடன் ஆட்சி அமைப்பதற்கோ அல்லது கூட்டமைப்புடன் சேர்ந்தோ ஆட்சி அமைக்க சாதியக்கூறுகள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள் ஒட்டுக்குழுக்களான PLOT, TELO, EPRLF போன்றவர்களின் விக்கினேஸ்வரனுடனான கூட்டு என்பது கொள்கை அடிப்படையில் இருக்கப்போவதில்லை, வெறுமனே தமிழரசுக்கட்சியில் இருக்கின்ற கோபத்தில் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே விக்கியுடன் சேர இருக்கிறார்கள். அதனால் தமிழரசுக்கட்சி ஒட்டுக்குழுக்க்களின் காலில் விழும் கட்டத்தில் விக்கியை வெளியில் அனுப்ப ஆதரவு கொடுப்பார்கள். உள்ளூராட்சியில் EPDP யின் காலில் விழுந்த கூட்டமைப்புக்கு, கடந்த 15 ஆண்டுகளாக நகமும் சதையும் போல வாழுகின்ற ஒட்டுக்குழுக்களின் காலில் விழுவது ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை. இதுவும் ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து மலினப்பட்டு இறுதியில் அரசியல் தற்கொலைக்கே இட்டு செல்வதாக அமையும்.

மூன்றாவது கூட்டைப் பொறுத்தமட்டில் மக்கள் நினைத்தால் விக்கி முதலமைச்சர் ஆவதற்கு சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. உண்மையில் அது அதிகமான ஆசையாக இருந்தாலும் நிற்சயமான, உறுதியான வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவராக வருவார். இவரை வேறு உதிரிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் கொள்கையில் உறுதியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இருப்பதனால் அதற்கு இடமளிக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த கூட்டு உண்மையில் விக்கினேஸ்வரனின் அரசியல் மலர்ச்சியை ஆரம்பித்து வைக்கும். 2009ற்கு பின்னர் முதன் முதலில் தமிழர் நலனில் அக்கறையுள்ள, தமிழ் தேசியத்தின்பால் பற்றுள்ள, கொள்கையில் உறுதியானவர்களின் கூட்டாக இருக்கும் என்பதால் நிற்சயமாக ஈழத்தமிழர்களின் மனங்களில் கார்த்திகைப்பூ மலர்வதைப்போன்ற ஒரு உணர்வு ஏற்ப்படும். இது தமிழ் தேசியத்தின் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும்.

இனி விடயத்திற்கு வருவோம்,

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண அரசியலை திறமையாக முன்னெடுக்கக்கூடிய அளவிற்கு திடகாத்திரமானவரோ அல்லது கைதேர்ந்த நிலையோ இல்லை என பல தடவைகள் கூறியிருக்கின்றேன், ஆனால் அவருக்கான கனதியான பணிகள் பல இருக்கின்றன,

01. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை உறுதியாக எடுப்பதுடன், அதன் மூலம்
பிரசவிக்க இருக்கின்ற தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான உறுதியான திட்டங்களை முன்னெடுத்தல்.

02. வெளிநாட்டு வாழ் ஈழத்தமிழர்களின் நிதிப்பங்களிப்பினைப் பெற்று, போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் திட்ட அடிப்படையில் மாகாணசபைக்கூடாக நடைமுறைப்படுத்த உதவுதல்.

03. காணி மீட்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு, திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள், தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உதவியுடன், இளைப்பாற்றல் நிலையில் உள்ள கல்விமான்கள், சமய முதல்வர்கள், இளம் கல்விமான்கள் உட்பட ஒரு 50 பேர் கொண்ட ஒரு கட்டமைப்பினை ஏற்ப்படுத்தி, தனிப்பட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படமுடியும். விக்கினேஸ்வரனின் தேர்தல் இதுவே கடைசி தேர்தலாக இருக்கப்போவதனால் அவர் தமிழ் தேசியத்தில் இறுக்கமான நிலையினை எடுத்து செயற்பட முடியும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாகாணசபைக்கு வெளியிலேயே செயற்பாடுகளை கொண்டிருப்பதனால் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர், முன்னாள் வடமாகாண முதலமைச்சர், அத்துடன் இன்றைய வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் என்ற அங்கீகாரங்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு போதுமானது.

நிற்க,
விக்கினேஸ்வரன் அரசியல் ரீதியாக மரணமா அல்லது மலினமா அல்லது மலர்வதா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். விக்கி என்ன முடிவு எடுத்தாலும் தமிழ் தேசியம் மலர்வினை நோக்கியே செல்லும், ஆனால் அவரும் மலருகின்ற முடிவை எடுத்தால் தமிழ் தேசியம் இன்னும் உத்வேகத்துடன் செல்லும் என்பதுடன், நாங்களும் மலர்வை நோக்கி பயணிப்போமாக.

…..பிரா. பத்மராஜ்…..