பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
கிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானின் (வயது 65) தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் நிலை உள்ளது.
தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் என்றைக்கு பதவி ஏற்பார் என்பதில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. முன்னதாக அவர் 14 அல்லது 15-ந் தேதி பதவி ஏற்கக்கூடும் என தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அது விவரம் வருமாறு:-
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்து உள்ளது. இதன் காரணமாக இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து விட்டது. அதன் கூட்டணி கட்சியான பலுசிஸ்தான் அவாமி லீக் கட்சியின் பலமும் 4 என்ற எண்ணிக்கையில் இருந்து 3 ஆக குறைந்து இருக்கிறது.
நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், இம்ரான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் இரண்டான என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்), என்.ஏ. 131 (லாகூர்) தொகுதிகளும் அடங்கும்.
என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்) தொகுதியில் இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாசியை தோற்கடித்து இருந்தார். என்.ஏ. 131 (லாகூர்) தொகுதியில் முன்னாள் மந்திரி கவாஜா சாத் ரபீக்கை வீழ்த்தி இருந்தார்.
இம்ரான்கான் வெற்றி பெற்று உள்ள எஞ்சிய 3 தொகுதிகளான என்.ஏ.35 (பான்னு), என்.ஏ. 95 (மியான்வாலி-1), என்.ஏ.243 (கராச்சி கிழக்கு-2) தொகுதி முடிவுகளும் நிபந்தனையின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இம்ரான்கான் மீது தொடரப்பட்டு உள்ள வழக்குகளின் முடிவுக்கு கட்டுப்பட்டதாகும்.
தேர்தல் நடத்தை விதிகள் என்று பொதுவாக குறிப்பிட்டு இருந்தாலும், அது இஸ்லாமாபாத் தொகுதியில் தேர்தலின்போது இம்ரான்கான் ஓட்டு போடுவதற்கு திரைக்கு பின்னால் செல்லாமல், தேர்தல் அதிகாரியின் மேஜை மீது ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்தி, வாக்கு ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இம்ரான்கான் தேர்தல் வெற்றியில் 2 தொகுதிகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும், எஞ்சிய 3 தொகுதிகளின் முடிவுகள் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதும் அவர் பிரதமர் பதவியை ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படு கிறது.
மொத்தத்தில் இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து இருப்பதுவும் பிரச்சினைக்கு உரியதாக அமைந்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், 3 தொகுதிகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி வென்ற ஒரு தொகுதியிலும், பலுசிஸ்தான் அவாமிலீக் கட்சி வெற்றி பெற்ற ஒரு தொகுதியிலும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மொத்தத்தில் பாகிஸ்தானில் தற்போது கள நிலவரம், நிச்சயமற்றதாக உள்ளது.