வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அரசியல் தலைவர்களுக்குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்களை வியக்க வைத்துள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் இடம்பெற்ற நோயாளர் காவு வண்டியின் இலவச சேவைக்கான ஆரம்ப நிகழ்வின்போது இதை அவதானிக்க முடிந்தது.
இலங்கையின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது வட பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்றதாகத் தெரியவில்லையெனக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் காணொலி மூலமாக உரையாற்றிய இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, வட பகுதி மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை வளமான எதிர்காலத்துக்கு இந்தியா இட்டுச் செல்லுமெனத் தெரிவித்துள்ளார். இரண்டு தலைமை அமைச்சர்களும் கூறியதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. ஆனால் தமிழர்கள் தாம் கடந்து வந்த பாதையையும் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்த நாட்டில் மகிழ்ச்சியாக இருந்ததாகச் சரித்திரமே கிடையாது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
வேடிக்கையான வெளிப்பாடுகள்
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வடக்கின் அபிவிருத்தி தொடர்பாகக் கருத்து வெளியிட்டமை வேடிக்கையானது. போர் ஓய்ந்து 10ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வடக்கு அபிவிருத்தியைக் காணவில்லையென அவர் கூறியிருப்பதை எந்த வகையில் எடுத்துக்கொள்வது என்பது புரியவில்லை. நாட்டின் பிறபகுதிகள் அபிவிருத்தி கண்ட நிலையில் காணப்படும்போது வடபகுதி அபிவிருத்தியைக் காணாது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இங்குள்ள இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி வேதனையுடன் தமது காலத்தைக் கடத்தி வருகின்றனர். இவர்களுக்குத் தொழில் வாய்ப்பினை வழங்க வேண்டியது அரசின் கடமை. அரசு அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. தெற்கில் அரசு கொண்டுள்ள அக்கறையில் ஒரு சதவீதத்தைத்தானும் வடக்கில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த மாற்றாந்தாய் மனோபாவம் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகத் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. தெற்கின் இந்த மனநிலைதான் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. ஆனாலும் தெற்கு அரசியல்வாதிகள் இன்னமும் திருந்தியதாகத் தெரியவில்லை.
ஒரு நாட்டின் தலைமை அமைச்சர் என்ற வகையில் சகல பிரதேசங்களின் நிலவரங்கள் தொடர்பான பூரண அறிவு அந்தப் பதவியை வகிப்பவரிடம் இருத்தல் வேண்டும். சகல பிரதேசங்களும் சமனாக அபிவிருத்தி செய்யப்படுவதை அவர் உறுதிசெய்ய வேண்டும். ஆனால் இலங்கையின் தலைமை அமைச்சர் அந்தப் பொறுப்பிலிருந்து தாம் விலகியதை சொல்லாமல் சொல்கின்றார். வடபகுதியின் அபிவிருத்தி தொடர்பாகத் தாம் இப்போதுதான் புரிந்து கொண்டதாக அவர் காட்டிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காவு வண்டிகளை தந்தால் போதுமா?
இந்தியாவின் நிதியுதவியுடன் வடபகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள இலவச நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்ந்து இடம்பெறுமானால் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்குமென்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் இந்தியாவின் கடமை இத்துடன் நிறைவுபெற்றுவிட்டதாக எவரும் கூறிவிட முடியாது. ஏனென்றால் வடபகுதி மக்கள் அனுபவித்த துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணமாக இருந்துள்ளது. புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்கு அளப்பரியது.
போரில் இலங்கை அரசுக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கிய இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவே போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
ஆனால் போர் முடிவடைந்த பின்னர் தனது கடமை முடிந்துவிட்டதாக இந்தியா ஒதுங்கிக் கொண்டது. இதுவடபகுதித் தமிழர்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகமாகும். போரினால் சின்னாபிக்க மாக்கப்பட்ட வடபகுதியின் அபிவிருத்திக்கு உடனடியாகவே இந்தியா உதவி செய்திருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கைக்குக் கடுமையான அழுத்தத்தை வழங்கியிருக்க வேண்டும். இந்தியத் தலைமை அமைச்சரான நரேந்திரமோடி தனது இலங்கைப் பயணத்தின் போது குடா நாட்டுக்கும் வருகை தந்திருந்தார். அப்போது சில வாக்குறுதிகளையும் கூறிச் சென்றார். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. தற்போதும் வடபகுதி மக்களின் அபிவிருத்தி தொடர்பாகப் பேசியிருக்கிறார். இதுவும் பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டுவிடுமாவென வடபகுதி மக்கள் வினா எழுப்புகின்றனர்.
இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் தமிழர்களை இனியும் ஏமாற்றத்தில் ஆழ்த்துவது அவர்களுக்கு அழகாக இருக்காது. அவர்கள் எந்த வகையிலாவது அவர்களின் அபிவிருத்திக்கு உதவிட வேண்டும். இதன் மூலமாகவே கடந்த காலத் தவறுகளும் மறக்கப்பட்டுவிடும்.
நன்றி-உதயன்