`நான் என் இலக்கை நோக்கிய பயணத்தைத் தனியாகத் தொடங்கினேன். போகும் வழியில் என்னோடு மக்கள் பலர் இணைந்துகொள்ள, நாங்கள் ஒரு வண்டியாக மாறிவிட்டோம்’ என்ற உருதுமொழிக் கவிதையோடு தொடங்குகிறது `கர்வான்’. பயணங்களைப் பற்றிய திரைப்படங்களில் எப்போதும் பயணம் என்பது இடங்களுக்கு இடையில் மட்டும் இல்லாமல், பயணப்படும் மனிதர்களின் ஆழ்மனதை நோக்கியும் இருக்கும். எதிர்பாராத பயணங்கள் மனிதர்களின் ரெகுலாரான வாழ்க்கையிலிருந்து மாறுதல் அளிப்பவை. `கர்வான்’ அதையே பேசுகிறது.
சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மனதுக்குப் பிடிக்காத வேலையையும், கொடுமைக்கார முதலாளியையும் சமாளிக்கும் சராசரி இளைஞன் அவினாஷ் ராஜ்புரோஹித் (துல்கர் சல்மான்). போட்டோகிராஃபராக ஆக வேண்டும் என இளமையில் தான் கண்ட கனவை நொறுக்கி, பிடிக்காத வேலையில் தள்ளிவிட்ட அப்பாவின் மீது வெறுப்புடனும், தொடர்பு இல்லாமலும் வாழ்கிறார். தேவையின்போது மட்டுமே வாய்திறக்கும் அவினாஷுக்குத் தன் குணத்துக்கு நேரெதிர் குணம் கொண்ட நண்பனாக இருக்கிறார் ஷெளகத் (இர்ஃபான் கான்). எப்போதும் எதையாது பேசிக்கொண்டும், யாருடனாவது வம்பு வளர்த்துக்கொண்டும் சுற்றும் மெக்கானிக் ஷெளகத்.
அமைதியாக இருக்கும் அவினாஷ், அனைத்துக்கும் ஏதாவது கவுண்டர் கொடுத்துக்கொண்டே இருக்கும் ஷெளகத், தன் வயதையும் ஜென்ரேஷனையும் புரிந்துகொள்ளாத இருவருடன் பயணிக்க நிர்பந்திக்கப்படும் தான்யா ஆகிய மூவருக்குள்ளும் தொடங்குகிறது பயணம். இறப்பு மூவரையும் ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கிறது. மூவரும் ஏதோ ஒரு வழியில் தங்கள் அப்பாவின் அன்பைப் பெறாதவர்களாக உணர்கிறார்கள். பயணத்தின் இடையில் ஷெளகத்தின் அப்பா வாங்கிய கடனுக்காக அவனைத் துரத்தும் ரவுடிகளால் தாக்கப்படுகிறார்கள்; ஷெனாய் வாசிக்கும் முதியவருடன் நட்பு ஏற்படுகிறது. அவினாஷின் முன்னாள் காதலியைச் சந்திக்க நேர்கிறது. ஷெளகத்துக்கு ஒரு பெண்ணின் மீது காதல் மலர்ந்து, ஒரு கட்டத்தில் அதுவும் மிஸ்ஸாகி விடுகிறது. பயணம் இருவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மலையாளத்திலும், தமிழிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் துல்கர் சல்மானுக்கு இந்தியில் முதல் படம் இது. அப்பாவின் இறப்பினால் பாதிப்பு ஏற்படாமல் எந்த ரியாக்ஷனுமின்றி அமைதியாக இருப்பதாகட்டும், இறுதியில் அப்பாவை மிஸ் செய்பவராக மாறுவதாகட்டும், தான்யாவுக்கு போட்டோகிராஃபி பற்றி ஆத்மார்த்தமாக உரையாடுவதாகட்டும், அனைத்துக் காட்சிகளிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். பாலிவுட்டிலும் கலக்க வாழ்த்துகள் ப்ரோ! தான்யாவாக நடித்திருக்கிறார் இந்தியின் இன்டெர்னெட் சென்சேஷன் மிதிலா பல்கர். அவருக்கும் பாலிவுட்டில் இது முதல் படம். இர்ஃபான் கானும், துல்கர் சல்மானும் நடிப்பில் இறங்கி அடித்திருக்க, மிதிலாவின் நடிப்பு பெரிதாக வெளிப்படவில்லை.
’கர்வான்’ படத்தை முழுவதுமாகச் சுமந்திருப்பவர் இர்ஃபான் கான். `கொஞ்சம் விட்டிருந்தா செத்துட்டேன்னு நெனைச்சு, என்னைப் புதைச்சு இருப்பாங்க!’ என்று தன் சொந்த வாழ்க்கையோடு பொருந்தும் வசனத்துடன் அறிமுகமாகிறார். படம் முழுவதும் உருது பேசும் இர்ஃபான், வெளிநாட்டவர்களைக் கண்டால் கடுப்பாகி விடுகிறார். அவர்களிடம் இர்ஃபான் சண்டை போடுவது காமெடியாக இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பொதுமைப்படுத்தி, கிண்டல் செய்வதாகவே இருக்கிறது. மிதிலாவும் அவரும் சண்டையிடும் தருணங்கள் சிரிப்பை ஏற்படுத்துகின்றன. ஷெனாய் கலைஞருடன் அவரது நட்பும், அதே ஷெனாய் கலைஞருக்கு `தலாக்’ சொல்லி அவர் செய்யும் துரோகமும் ரசிக்க வைப்பவை. நடிகை அமலா அக்கினேனியும் ஒரு கதாபாத்திரத்தில் கெளரவ தோற்றத்தில் வருகிறார்.
பாலிவுட்டில் பல ஆண்டுகளாக திரைக்கதை ஆசிரியராக இருந்த ஆகர்ஷ் குரானா `கர்வான்’ மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். `ஷைத்தான்’, `டேவிட்’, `சோலோ’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் இந்தத் திரைப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். `மசான்’, `மதாரி’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவினாஷ் அருண் `கர்வான்’ திரைப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ட்ராவல் மூவிகளுக்குத் தேவையான அளவுக்கு, ஊட்டியையும், கேரளாவையும் மிக அழகாகப் படம்பிடித்திருக்கிறது அவரது கேமரா.
இந்தி சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த ட்ராவல் படங்களான `ஃபைண்டிங் ஃபேனி’, `பிக்கு’முதலானவற்றின் சாயல் `கர்வான்’ திரைப்படத்திலும் இருக்கிறது. அதிலும் `பிக்கு’ திரைப்படத்தைப் போலவே, கொஞ்சம் வேறுபாடுகளுடன் இருக்கிறது இர்ஃபான் கானின் கேரக்டர். `போட்டோகிராஃபி வேண்டாம்’ என்று சொல்லும் தந்தைகளை `வேக் அப் சித்’, `த்ரீ இடியட்ஸ்’ முதலானவற்றிலும், சாஃப்ட்வேர் வேலை பிடிக்காத ஹீரோக்களையும் பல பாலிவுட் திரைப்படங்களில் சமீபத்தில் பார்த்தாகிவிட்டதால், `கர்வான்’ முழுவதும் ஏற்கெனவே பார்த்துப் பழகிய ஃபீல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கதை இன்னும் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் வரத்தான் செய்கிறது. ஆனால், கதை சொல்ல வருவதே, வாழ்க்கை உன்னோட ப்ளானை எல்லாம் மதிக்காது. ஆனாலும் நீ பயணம் செஞ்சுதான் ஆகணும். நீ வளைக்கும் ஒவ்வொரு திருப்பத்துக்குமான விளைவை நீதான் சமாளிக்கணும் என்பதைத்தான். அதைச் சரியாகப் புரிய வைத்ததில் இயக்குநர் அக்ராஷ் கருணாவு வென்றிருக்கிறார்.
க்ளீஷே காட்சிகளைத் தவிர்த்து பார்த்தால், `கர்வான்’ நிச்சயம் பார்வையாளர்களின் மனம் கவரும் ஃபீல்-குட் அனுபவமாக இருக்கும்.