இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.0 என்று பதிவாகியிருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
10 கிமீ ஆழத்திலேயே இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலோரம் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
“மக்கள் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டாம், உயரமான பகுதிகளுக்குச் செல்லவும் அமைதியாக இருக்கவும் பதற்றம் வேண்டாம்” என்று புவியியல், வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் த்விகோரிட்டா கர்ணாவடி உள்ளூர் தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லோம்போக் தீவின் முக்கிய நகரமான மடாரம்மில் கடுமையான அதிர்வை உணர்ந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளிலிருந்தும் கட்டிடங்களிலிருந்தும் வெளியேறினர்.
கடந்த வாரம்தான் இதே பகுதியில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதில் 12 பேருக்கும் மேல் உயிரிழந்து ஏகப்பட்ட பேர் காயமடைந்தனர். சுமார் 100 கட்டிடங்கள் கடும் சேதமடைந்தன. நிலச்சரிவையும் முடுக்கி விட்டது இந்த நிலநடுக்கம்.
இந்தப் பூவுலகில் பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது இந்தோனேசியா, இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங்கள் அதிகம்.