சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இலங்கைக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் மற்றும் அதனூடாக பெருமளவு வருமானம் இருக்காது என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
நாணயச்சபை மீளாய்வுக் கூட்டத்தொடரின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று மத்திய வங்கியில் நடைபெற்றது. அச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இவ்வொப்பந்தத்தின் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் மற்றும் அதன் மூலம் பெருமளவான ஏற்றுமதி வருமானம் என்பனவற்றை இலங்கை எதிர்பார்க்க முடியாது. காரணம் சிங்கப்பூர் பெருமளவில் தன்னிறைவடைந்துள்ளது, இலங்கையிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை குறைவாகவே உள்ளது. எனவே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக சிங்கப்பூருடன் ஏற்றுமதி வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகும்.
எனினும் முதலீடு மற்றும் இலத்திரனியல் வர்த்தகம் என்பவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு பெருமளவில் உள்ளது. சிங்கப்பூர் முதலீட்டாளர்களை இலங்கையிலுள்ள வணிக வாய்ப்புக்கள் மூலம் ஈர்த்துக் கொள்வதற்கும், இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் முடியும். அத்தோடு இரு நாடுகளும் பரஸ்பரம் இலத்திரனியல் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் கொடுக்கல் வாங்கல்களை விரிவுபடுத்தவும், வணிக வாய்ப்புக்களை அதிகரிக்கவும் முடியும் என்றார்.