மண்விடுதலைக்காக போராடிய வீரத்தாய்!

இந்திய சுதந்திர போராட்டடத்தில் பெண்களின் பங்கு என வரும்போது நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் ஜான்சி ராணி லட்சுமிபாய் மட்டும்தான். தமிழநாட்டை சேர்ந்தவர்களுக்கு நினைவுக்கு வருவது வீரமங்கை வேலுநாச்சியாராய் இருக்கும். ஆனால் அவர்களை விட பெரிய தியாகம் செய்து ஆங்கிலேயர்களை திணறடித்த ஒரு வீரத்தமிழச்சியை பற்றி வெகுசிலரே அறிந்து வைத்திருப்பார்கள். அந்த வீரத்தமிழச்சியின் பெயர்தான் “குயிலி”.

” வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்னும் பாரதியார் கூற்றுக்கேற்றபடி பெண்ணடிமை தழைத்தோங்கிய காலத்திலேயே தன் பிறந்த மண்ணுக்காகவும், தான் உயிராய் மதிக்கும் வேலுநாச்சியாருக்காகவும் வெறும் பதினெட்டே வயதில் ஆயுதம் ஏந்தி வெள்ளையனை எதிர்த்தார் வீரமங்கை குயிலி. தன் இறப்பும் எதிரியின் தலையில் இடியென இறங்க வேண்டுமென்று தற்கொலைப்படையாய் மாறி தன் இன்னுயிர் தந்து எதிரியின் படைகளை நாசம்செய்தார்.

வீரத்தாய் குயிலி

 

 

 

 

 

தன் கணவர் முத்துவடுகநாதர் இறந்த பிறகு தலைமறைவாய் வாழ்ந்துவந்த வேலுநாச்சியார் அவர்கள்ஆங்கிலேயரை தாக்க தக்க சமயம் எதிர்பார்த்து கத்திக்கொண்டிருந்தார். அவரின் படையில் சாதாரண ஆளாக இருந்த குயிலி, வேலுநாச்சியாருக்கு எதிராக சதிசெய்த தன் சிலம்பு ஆசிரியரை கொன்றதன் மூலம் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக மாறினார். குயிலியின் மீது அளவற்ற அன்பும், நம்பிக்கையையும் கொண்டிருந்தார் வேலுநாச்சியார். பிற்படுத்த வகுப்பை சேர்ந்த குயிலியின் மீது வேலுநாச்சியார் அன்பு பாராட்டுவது பலரையும் வெறுப்புக்கொள்ள செய்தது.

 தளபதியாய் குயிலி

ஒருமுறை வேலுநாச்சியார் உறங்கிக்கொண்டிருந்த போது அவருக்கு பாதுகாப்பாக குயிலி அங்கிருந்தார். அப்போது மல்லாரிராயன் அனுப்பிய ஒருவன் வேலுநாச்சியாரை கொல்ல அங்குவந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் வேலுநாச்சியாரின் கழுத்தில் கத்தியை பாய்க்க முயன்றபோது இடையில் தடுத்தது ஒரு கை. அது வேறு யாருமல்ல மரத்தமிழச்சி குயிலியின் கைதான். குருதி வழியும் கையோடு அவனை எதிர்த்த குயிலியின் சத்தம் கேட்டு கண் விழித்தார் வேலுநாச்சியார். அவன் தப்பித்துவிட மயங்கி வேலுநாச்சியார் மீது விழுந்தார் குயிலி. தன் உயிரை காத்த குயிலியின் தைரியத்தை பாராட்டி தன் படையின் முக்கிய தளபதிகளில் ஒருவராய் குயிலியை நியமித்தார் வேலுநாச்சியார்

 போர் தொடக்கம்

திப்புசுல்தானிடம் இருந்து படை உதவி கிடைத்ததும் போர் புரிய ஆயத்தமானார் வேலுநாச்சியார். முதலில் வேலுநாச்சியாரின் வீர வாளுக்கு பலியானவன் மல்லாரிராயன். அவன்தான் ஆங்கிலேயருடன் சேர்ந்து வேலுநாச்சியாரின் கணவரை கொன்றவன். வெற்றி சங்கு விண்ணை பிளக்க சிவகங்கை சீமைக்குள் நுழைந்தது ராணியின் படை. ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தார்கள். கோட்டை முழுவதும் ஆயுதங்களால் சூழப்பட்டிருந்தது. ராணியின் படை தைரியத்துடன் இருந்தாலும் இவ்வளவு ஆயுதங்களுடன் போரிட்டால் அவர்களால் வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்திருந்தார்கள்.

 குயிலியின் தந்திரம்

படை மொத்தமும் கவலையில் இருக்க அங்கே வந்து சேர்ந்தால் தள்ளாத கிழவியொருத்தி. பெரிய மருதுவிடம் தற்போது விஜயதசமி என்பதால் கோட்டையில் உள்ள கோவிலில் கொலு வைத்துள்ளனர். அதனை பார்க்க பெண்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. எனவே ராணியின் படை அந்த பெண்களுடன் கோட்டைக்குள் புகுந்து விட்டால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்று கூறினார் அந்த கிழவி. அனைவரின் கண்களும் அவரை சந்தேகமாய் பார்க்க தன் வேஷம் கலைத்து நின்றார் குயிலித்தை. கோட்டையை உளவுபார்க்க கிழவி வேடத்தில் கோவிலுக்குள் சென்றதை கூறியதும் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

 கோட்டைக்குள் போர்

அம்மனை வழிபடும் பூவிற்குள் கத்தியை ஒளித்துவைத்து கொண்டு கோட்டைக்குள் புகுந்தனர் வேலுநாச்சியாரும் அவரின் பெண்கள் படையும். விழா என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் முற்றத்தில் மொத்தமாய் வைத்திருப்பதை கவனித்தார் வேலுநாச்சியார். அதேசமயம் அதனை மற்றொரு ஜோடி கண்களும் கவனித்தது அது வேறுயாருடையதுமில்லை குயிலியின் கண்கள்தான். பூஜை முடிந்து அனைவரும் வெளியே சென்ற பின் இதுதான் சரியான சமயம் என பூவிற்குள் இருந்த வாளை உருவி போரை தொடங்கினார் வேலுநாச்சியார்.

 குயிலியின் வீராதியாகம்

போர் தொடங்கியவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராணியின் பெண்கள்படை ஆங்கிலேயே வீரர்களை வெட்டி சாய்க்க தொடங்கினர். ஆனால் நேரம் போக போக ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களின் கை ஒங்க தொடங்கியது. அனைவரும் போர் புரிந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் குயிலின் மட்டும் கூட்டத்தை விட்டு பிரிந்து கோட்டையின் மாடியை நோக்கி ஓடத்தொடங்கினார். கோட்டையின் உச்சியை அடைந்த அவர் இப்போரில் தோல்வியுற்றால் இனி இதுபோன்ற சந்தர்ப்பம் கிடைக்காது என உணர்ந்து தன் உடல்முழுவதும் எண்ணெயை ஊற்றிக்கொண்டார். தன் பிறந்த மண்ணை கடைசியாய் ஒருமுறை பார்த்தன குயிலியின் கண்கள். தன் மண்ணின் விடுதலைக்காக பதின்ம வயதில் இருந்தா அந்த வீரச்சுடர் தன் உடலில் தீயை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கின்மீது எரியும் தீப்பிழம்பாய் குதித்தார். ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது.

 போர் வெற்றி

ஆயுதக்கிடங்கு வெடித்ததும் ஆங்கிலேயர்கள் நிராயுதபாணி ஆனதால் வேறுவழியின்றி சரணடைந்தனர். அதேசமயம் பெரிய மருதுவும் வெற்றியுடன் கோட்டைக்கு திரும்பினார். சின்ன மருதுவும் திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றிவிட்டு வெற்றியுடன் திரும்பினார். கோட்டை தன் கைக்கு வந்ததும் தன் உயிர்த்தோழி குயிலியை தேடியது ராணியின் கண்கள். தன் வெற்றிக்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும் குயிலி செய்த தியாகத்தை அறிந்து வீர விழிகள் கண்ணீரால் நிரம்பியது. அவர் மட்டுமா மொத்த சீமையுமே அந்த வீரச்சுடரை எண்ணி கண்ணீர் வடித்தது.

 வரலாறு

தன் மண்ணின் விடுதலைக்காக இந்தியாவின் முதல் தற்கொலை படை வீராங்கனையாக மாறிய குயிலியின் தியாகம் சுதந்திர வரலாற்றின் வெற்றிப்படிகளில் ஏறாமல் போனது துரதிர்ஷடவசமானது. வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய இந்த வீரத்தாயின் பெயர் நம்மில் பலருக்கும் தெரியாமல் போனதன் காரணம் நம் முன்னோர்களின் இரத்தத்தில் புரையோடி போயிருந்த இனப்பாசம்தான். பிற்படுத்த வகுப்பில் பிறந்த ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தமிழச்சியின் வீரமும், தியாகமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் நாம் அவ்வாறு விட்டுவிடக்கூடாது, நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திர காற்று பல குயிலிகளின் தியாகத்தால் கிடைத்தது என்பதை மறந்துவிடக்கூடாது.