ஜிமெயிலில் டிராப் பாக்ஸ்!

இணையக் கோப்புச் சேமிப்பு சேவையான டிராப் பாக்ஸ், கூகுளின் ஜிமெயில் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜிமெயில் பயனாளிகள், கோப்புச் சேமிப்புக்காக டிராப் பாக்ஸ் சேவையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், இனிமேல் தங்கள் மெயிலில் இருந்தே டிராப் பாக்ஸ் கோப்புகளை அணுகலாம்.

கிளவுட் முறையில் கோப்புகளைச் சேமித்து, எந்த இடத்தில் இருந்தும் அணுக வழி வகுக்கும் சேவைகளில் முன்னணியில் விளங்குகிறது டிராப் பாக்ஸ். மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட பல சேவைகளுடன் தனது சேவையை ஒருங்கிணைப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது டிராப் பாக்ஸ். இந்த வரிசையில், தற்போது கூகுள் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜிமெயிலுக்கான டிராப் பாக்ஸ் ‘ஆட் ஆன்’ மென்பொருளை நிறுவுவதன் மூலம் இதைப் பயன்படுத்தலாம். இந்த ஒருங்கிணைப்பால் இரண்டு சேவைகளைப் பயன்படுத்துபவர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.