இம்ரான் கான் (IMRAN KHAN) என்னும் ஆளுமையின் வளர்ச்சியில் கற்கக்கூடிய சில பாடங்கள்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஆவணி மாதம் 11ம் திகதி பதவி ஏற்கவிருக்கும் இம்ரான் கான் தொடர்பான சில குறிப்புகளுடன் இந்த பதிவு அமையவிருக்கிறது. 1952ம் ஆண்டு ஜப்பசி மாதம் 05ம் திகதி லாகூரில் பிறந்த இம்ரான் கான், 1971ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சார்பாக பேர்மிங்கத்தில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஆரம்பித்து, 1992ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையினை நிறைவு செய்து கொண்டார். இந்த இடைப்பட்ட 21 வருட காலத்தில் சகலதுறை ஆட்டக்காரராக, 88 டெஸ்ட், 175 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், உச்சபட்ச சாதனையாக 1992ல் மெல்பேர்ணில் நடந்த உலக கோப்பையில், கப்டனாக இருந்து தனது கணிசமான பங்களிப்புடன் பாகிஸ்தானுக்கு கோப்பையினை வென்று கொடுத்துள்ளார்.

தனது உழைப்பின் பெரும்பகுதியில், புற்றுநோய்க்கு வைத்தியம் செய்ய முடியாத நிலையில் இறந்த தனது தாயின் பெயரில் (Shaukat Khanum) ஒரு புற்றுநோய்க்கான அறக்கட்டளை நிறுவனம் ஒன்றை 1991ம் ஆண்டு ஆரம்பித்து, வறியவர்களுக்கு புற்றுநோய்க்கு இலவசமாக வைத்தியம் கொடுக்கும் மிகப்பிரமாண்டமான வைத்தியசாலை ஒன்றினை அமைத்தார். கிரிக்கெட்டிலிருந்து இளைப்பாறிய நிலையில், வைத்தியசாலையின் கட்டுமானப்பணிகளுக்குரிய பணம் போதாமையில் தானே நேரடியாக வீதியில் இறங்கி அறக்கட்டளை மூலம் சிறுகச் சிறுக பணத்தினை சேர்த்து கட்டுமானப்பணிகளை முடித்தார். இன்று இலட்சக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக புற்றுநோய்க்கு வைத்தியத்தினை செய்யும் ஒரு கோவிலாக அந்த வைத்தியசாலை உயர்ந்து நிற்கிறது.

தனது வாழ் நாளில் பல தேசிய, சர்வதேச விருதுகளுக்கு சொந்தக்காரரான இம்ரான் கான், 1983ல் வழங்கப்பட்ட ஆண்டுக்கான உலக கிரிக்கெட் வீரர் விருது, 1983ல் பாகிஸ்தானில் அவருக்கு வழங்கப்பட ஜனாதிபதி விருது (Pride of Performance Award), ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தால் (Oxford University) வழங்கப்பட்ட விருது, 2007ல் வைத்தியசாலையினை கட்டியதன் பேரில் மலேசியாவில் வழங்கப்பட்ட மனிதாபிமானத்துக்குரிய விருது, 2009ல் சர்வதேச கிரிக்கெட் சபையால் வழங்கப்பட்ட விருது, 2012ல் பாகிஸ்தானில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார் என்ற மதிப்பளிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் பிராட்போட் பல்கலைக்கழகம் (University of Bradford) 2005ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை இவரை 5வது வேந்தராக (Chancellor) நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கும் அப்பால் அவர் ஒரு ஆய்வாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த எழுத்தாளராக பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

இனி விடயத்திற்கு வருவோம்,

1996 ம் ஆண்டு டெஹ்ரீக் ஈ இன்ஸாஃப் என்னும் அரசியல் கட்சியினை தொடங்கி, 1997ம் ஆண்டு முதலாவது பொதுத்தேர்தலை சந்திக்கிறார். இந்த தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பெறாமல் தோல்வி அடைகிறார். தோல்வி அடைந்தவுடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேட்ட, நீங்கள் படுதோல்வி அடைந்தது பற்றி என்ற கேள்விக்கு இம்ரான் கான் வழங்கிய பதில் “எனது ஆதரவாளர்கள் இளையவர்களாகவே இருக்கிறார்கள், அவர்கள் வளருவதற்கு சிறிது காலம் வழங்க வேண்டும்” என பதிலளித்தார்.

கடுமையாக வேலை செய்து 2002ல் அடுத்த தேர்தலை சந்திக்கிறார். அந்த தேர்தலில் ஒரே ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்கிறார். 2008ல் நடந்த தேர்தலை புறக்கணித்து விட்டு கடுமையாக மக்கள் மத்தியில் வேலை செய்கிறார். மிகக் கடுமையான உழைப்பின் பின் 2013ல் நடந்த தேர்தலில் 7.5 மில்லியன் வாக்குகளைப் பெற்று எதிர்கட்சி தலைவர் ஆனார். தொடர்ந்தேர்ச்சியான உழைப்பையும் எதிர்கட்சிகளின் பலவீனங்களையும் சரியாக கையாண்டு 2018 ல் நடந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி சில நாட்களில் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.

இதில் இருந்து மூன்று விடயங்களை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்,

01, “எனது ஆதரவாளர்கள் இளையவர்களாகவே இருக்கிறார்கள், அவர்கள் வளருவதற்கு சிறிது காலம் வழங்க வேண்டும்”

02, சர்வதேச ரீதியாக நாட்டுக்கு புகழ்தேடிக் கொடுத்தது மட்டுமன்றி, சமூகத்திற்காக இலவசமாக மிகப்பெரிய வைத்தியசாலையினை அமைத்துக்கொடுத்த ஒரு ஜாம்பவான் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு அரசியலில் 7 ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்துள்ளது,

03, பாகிஸ்தானின் அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்கு 22 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்துள்ளது,

இரண்டாவதும், மூன்றாவதுமான விடயத்தின் ஆழம் முதலாவதில் உள்ளடங்கியுள்ளது. இங்கே இம்ரான் கானால் இளையவர்கள் என குறிப்பிட்ட விடயம், தனது கொள்கையுடன் சேர்ந்து இளையவர்களாக, அரசியல் அனுபவத்தில் இளையவர்களாக, பொருளாதார வலிமையில் இளையவர்களாக, சமூகத்தில் அரசியல்வாதியாக இனங்காணப்பட்டதில் இளையவர்களாக இருக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும். இம்ரான் கானின் பொறுமையும், ஆற்றலும், உழைப்பும் சேர்ந்து, நவாஷ் செரீப், பெனாசீர் பூட்டோ என்ற இரு பெரும் தலைவர்களின் கட்சியினை பின்னுக்கு தள்ளி அவரை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பால் அரசியலுக்குள் உள்ளீர்க்கப்படுவதற்கான ஒருவரின் தகுதி என்பது, கூட்டமைப்புக்குள் செல்வாக்கு செலுத்துகின்ற கறைபடிந்த நபர்களுக்கு சொல்லும் வரையிலும், சொல்லும் அனைத்தையும் கழுவுவதற்கு தயாரானவர்களே தகுதியானவர்கள் என்ற அடிப்படையிலேயே, அனைத்து அவைகளுக்கும் அங்கத்தவர்கள் நிறுத்தப்படுகிறார்கள். தியாகிகளின் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட தமிழ் தேசிய அரசியலை, கழுவும் பண அரசியலாக மாற்றி அறுவடையை அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் நீண்ட காலத்துக்கு நிலைக்கப்போவதில்லை என்பதுடன் மக்களுக்கு எந்தவித பலனையும் கொடுக்கப்போவதில்லை என்ற உண்மையை மக்கள் நலன் நோக்கி சிந்திக்கும் ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நிற்க,
உண்மையிலேயே தமிழ் தேசியத்தில் பற்றுள்ள, ஈழத்தமிழர்களின் விடுதலையில் அக்கறையுள்ள, மூன்று தசாப்த காலமாக செய்த தியாகங்களுக்கு மதிப்பளிக்கின்ற, மக்கள் நலனை முதன்மைப்படுத்தக்கூடிய, அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்கின்ற போது, கொண்டுள்ள கனவுகளை நோக்கி நடைபோட முடியும். மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் ஒன்று சேரும் போது, கழுவுதலுடன் கூடிய பண அரசியலுக்கு காலம் விடைகொடுத்து விடும். இதனை புரிந்து கொண்டு உழைக்கக் கூடிய கூட்டத்தின் அளவு அதிகரிக்கின்ற போது, மக்களுக்காக மரணத்தை அணைத்த தியாகிகளின் கனவுகள் நிஜமாக நம்மை தேடி வரும். எங்களை தேடிவரும் அந்த நிஜங்களை நிறைவாக்குவதற்கு எம்மை தயார்படுத்த நடைபோடுவோமாக…..

…..பிரா. பத்மராஜ்…..