மாற்றுத் தலைமையும் முதலமைச்சர் பதவியும்…. !

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது மில்லியன் டொலர் பெறுமதி மிக்க கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்த்தரப்பு அரசியல் ஓர் அரசியல் சுழலுக்குள் சிக்கி ஒரு தள்ளாட்டமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும்.

உள்ளுராட்சித் தேர்தலுக்கு அடுத்தபடியாக நடைபெற வேண்டிய மாகாணசபைத் தேர்தல், இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் திணைக்களம் தயாராக இருக்கின்ற போதிலும், அரச பங்காளிக்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில்; எழுந்துள்ள முரண்பாடுகளும், மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சிக்குரிய ஆதரவான அரசியல் கள நிலைமையும் அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக அமைந்திருப்பதையே காண முடிகின்றது.

இருப்பினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் வடமாகாணசபையின் ஆயுள் முடிவடைவதையடுத்து, மக்கள் புதிய மாகாண சபையைத் தெரிவு செய்ய வேண்டிய அவசியமும், அவசரமும் எழுந்திருக்கின்றது. இதனால் வடமாகாணசபைக்கான தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமாகாணம் மீள் எழுச்சி பெறுவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கி;ன்றது. அதேநேரம், விடுதலைப்புலிகளின் ஏகபோக அரசியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த வடமாகாணத்தை, தமிழ் அரசியல் தலைமைகளுக்குக் கீழ் தொடர்ந்து நிலைத்திருப்பதைத் தடுத்து, அங்கு அரசியல் ரீதியாகப் பலமாகக் காலூன்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், அதேபோன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.

வடக்கும் கிழக்கும் தமது தாயகம் என்ற தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் நிலைப்பாட்டைத் தகர்த்து, அவர்கள் மீண்டும் தனி நாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதை நிரந்தரமாக இல்லாமல் செய்துவிட வேண்டும். அங்கு அரசியல் ரீதியாக ஊடுருவி, பௌத்த சிங்களவாத அரசியல் நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்பதே, இந்த முயற்சிகளின் அடிப்படை நோக்கமாகும்.

மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆட்சி செலுத்தி வருகின்ற ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பெரிய தேசிய கட்சிகளுமே, தங்களுக்குள் அரசியல் போட்டிகள் இருக்கின்ற போதிலும், இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கே சொந்தமானது. அவர்களே மேலாதிக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டைப் பொதுக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றன.

ஒற்றையாட்சியின் கீழ் ஒரு ஜனநயாக நாடாக இலங்கை திகழ வேண்டும். அதேவேளை, பௌத்த சிங்களவர்களே அனைத்து விடயங்களிலும், தனித்துவமான மேன்மையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதிலும் இந்தக் கட்சிகளும், ஏனைய சிங்கள அரசியல்வாதிகளும் உறுதியான உடும்புப் பிடியைக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கைத் தீவினுள் தமிழர்களுக்கான தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்காக ஆயுதமேந்தி வலிமையோடு போராடிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்ற சர்வதேச அரசியல் கோட்பாட்டுக்குள் சிக்க வைத்து, அவர்களை யுத்தத்தில் வெற்றிகொள்வதற்கு உள்நாட்டில் பௌத்த சிங்களத் தேசியவாதமே அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு உறுதுணையாக அமைந்திருந்தது.

ஏனைய சிங்கள அரசியல் தலைவர்களைவிட, இந்த நாடு பல்லினத்தன்மையைக் கொண்டதல்ல என்பதை நிலைநிறுத்துவதற்காக வெளிப்படையான நடவடிக்கைகளை மிகுந்த துணிச்சலோடு, கடும் போக்கில் மகி;ந்த ராஜபக்ச முன்னெடுத்திருந்தார் என்பது முக்கிய கவனத்திற்குரியது. எனினும், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சிங்கள மென்போக்கு அரசியல் நகர்வை முன்னெடுத்திருந்த சிங்கள பேரினாத அரசியல் தலைமைகளிடம் தோல்வியைத் தழுவிய அவர், இனவாத அரசியல் போக்கில் சிங்கள மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சியின் ஊடாக இப்போது பேராதரவைப் பெற்று வருகின்றார்.

பொதுஜன பெரமுன என்ற புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக வலிமையோடு மகிந்த ராஜபக்ச தலையெடுத்துள்ளதனால், பிரதான சிங்கள கட்சிகள் மும்முனை போட்டிக்குள் சிக்கியிருக்கின்றன. இந்த போட்டி காரணமாக தேசிய அரசியல் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. தேசிய அரசியலில் வெற்றி பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குவங்கியை நாட வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றன.

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் ஐக்கிய தேசிய கடசியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பாக வடக்கில் ஆழமாகக் கால்ஊன்றுவதற்கு கள நிலைமைகள் சாதகமாக மாற்றம் பெற்றிருக்கின்றன என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள உடைவும், வடமாகாணசபையின் ஆளுமையற்ற செயற்பாடுகளும், தனித்துவமான தமிழர் அரசியல் தலைமை என்ற நிலைப்பாட்டைத் தள்ளாடச் செய்திருக்கின்றன. இந்தத் தள்ளாட்டமே, ஐக்கிய தேசிய கட்சியையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் முன்னேற்றகரமான நிலையில் உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கில் கால் ஊன்றச் செய்திருக்கின்றன. அடுத்தடுத்து வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்பவற்றில் இந்தக் கட்சிகள் இன்னும் பரந்த அளவில் வடக்கில் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்குரிய சாதகமான நிலைமைகளை உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன. அந்தக் கட்சிகள் உற்சாகமாக வடக்கில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஊக்குவித்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் வடமாகாண சபைக்கான தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அதன் அடுத்த முதலமைச்சருக்கான வேட்பாளர் யார் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

கள நிலைமைகள்

ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தைக் கொண்டிருந்த வடமாகாணசபை ஆளுமை மிக்கதோர் அரசயல் நிர்வாக சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் தோல்வியடைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். மாகாணைசபைக்குரிய அதிகாரங்களைப் போதிய அளவில் பயன்படுத்த முடியவில்லை. அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தின் அடிப்படையான அவசிய, அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உரிய அதிகாரங்களும் வளங்களும் கைவசம் பெற்றிருக்கவில்லை. செயலாற்றல் மிக்க ஒரு மாகாண நிர்வாகமாக அதனைச் செயற்பட விடாமல் மத்திய அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு அப்பால், அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த போதிலும், கட்டுக்கோப்பான முறையில் சபை உறுப்பினர்களை ஒன்றிணைத்துச் செயற்படுத்துவதற்கு முதலமைச்சரினால் முடியாமல் போயுள்ளது.

பல கட்சிகளைக் கொண்டிருந்தாலும்கூட, மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் ஆதரவையும் பெற்றிருந்த போதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒன்றிணைந்த ஓர் சக்தியாக மாகாணசபை நிர்வாகத்தின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு முதலமைச்சர் தவறிவி;டடார். இதன் ஊடாக அவர் தனது அரசியல் நிர்வாக ஆளுமையை வெளிப்படுத்தவும் முடியவில்லை.

அரசியலுக்கு அவர் புதியவராக, அனுபவமற்றவராக இருக்கலாம். ஆனாலும், ஒரு நீதியரசராக இருந்தவர் என்ற வகையிலும், நீதித்துறையில் அவர் பெற்றுள்ள நீண்ட அனுபவமும், கூடவே, வெளி உலக வாழ்க்கை அனுபவமும் அவரைப் போதிய அளவில் புடம்போட்டிருக்கின்றன, பக்குவப்படுத்தி இருக்கின்றன என்பதை முதலமைச்சர் பதவியின் ஊடாக செயல் வடிவங்களில் அவர் நிரூப்பிக்கத் தவறிவிட்டார் என்றே கூற வேண்டியுள்ளது.

முதலமைச்சர் என்ற ரீதியில், ஓர் அரசியல்வாதி என்ற நிலைப்பாட்டில் அவர் எடுத்த பல முடிவுகள், அவருடைய ஆளுமைக்கும் திறமைக்கும் சவால்களாகவே மாறிப்போயின. அவர் மீது உகட்சியினரே பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பதற்கும் அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அவருக்கு எதிராக எதிரணியினரைப் போல செயற்படவும் இந்த சவால்கள் களமமைத்துக் கொடுத்துவிட்டன.

ஒரு நீதியரசராக இருந்தவர். கனவான். கண்ணியமானவர் என்ற மதிப்பையும் மரியாதையையும் தமிழ் மக்கள் அவர் மீது கொண்டிருந்தாலும்கூட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுமைய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசியல் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களில் அவர்களுக்கோர் ஆளுமைமிக்க அரசியல் தலைமையை வழங்குவதிலும், போதிய அளவில்; தனது திறமைகளை வெளிப்படுத்த அவரால் முடியாமல் போயுள்ளது.

மறுபக்கத்தில் அவரை அரசியலுக்குள் கொண்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியும்கூட, அவரை ஒன்றிணைத்துக் கொண்டு மீள்கட்டமைப்புப் பணிகளையும், அவிவிருத்திச் செயற்பாடுகளையும், அரசியல் முன்னெடுப்பக்களையும் மேற்கொள்ளவில்லை. அல்லது வடமாகாண முதலமைச்சர் என்ற வகையில் அவரை தமது நீண்டகால அரசியல் அறிவையும் அனுபவங்களையும் கொண்டு, அவரை நெறிப்படுத்தி ஆளுமையும் திறமையும் கொண்ட மாகாண நிர்வாகத்தின் அரசியல்வாதியாக வழிநடத்தவுமில்லை.

மாறாக, அவருக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஈடுபட்டிருந்தது. அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்குவதற்காக, அவர் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஆளுனரிடம் சென்று நேரடியாகக் கையளித்தது. அத்துடன் மாகாண அமைச்சர்களின் செயற்பாடுகள் சம்பம்தப்பட்ட விவகாரத்தில், அமைச்சர் ஒருவருடைய விடயத்தில், அவருக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்று வழக்காடி, அவருக்கு எதிரான உத்தரவு ஒன்றையும் தமிழரசுக்கட்சி பெற்றுள்ளது.

இந்த நிலையில் அடுத்த மாகாண முதலமைச்சராக அவரை நிறுத்தப் போவதில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையிலும், தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களை மிஞ்சிய செயல் வல்லமை உடையவர் என்ற ரீதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாகத் தனது நிலைப்பாடு தொடர்பில் வெளியிட்ட கருத்தும், சுமந்திரனுடைய கூற்றுக்கு வலு சேர்த்திருக்கின்றது.

எனினும், வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வேட்பாளராக நியமிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழரசுக் கட்சி தீர்க்கமான முடிவு எதனையும் இன்னும் எடுக்கவில்லை என்றே கூறப்பட்டிருக்கின்றது. அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

முதலமைச்சருக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையில், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், கடந்த முறையைப் போலவே, புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கத் துணிவாரா, அல்லது கடந்த முறை தனக்குரிய சந்தர்ப்பத்தைத் தியாகம் செய்திருந்த மாவை சேனாதிராஜாவையே வேட்பாளராக்குவாரா என்பது தெரியவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் அதன் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்ச்pயையும் அரசியல் ரீதியாக விமர்சித்திருந்த முதலமைச்சர், கூட்டமைப்புக்கு மாற்றுத் தலைமையாக பிறப்பெடுத்ததாகக் கருதப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைவராக இணைந்து தமிழரசுக் கட்சியின் வெறுப்பையும் சம்பாதித்திருந்தார். அது மட்டுமல்லாமல், தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமையொன்றை உருவாக்குவதற்காகச் செயற்படுகின்ற அரசியல் தரப்புக்களின் தலைமைப் பொறுப்பை முதலமைச்சரே ஏற்றுச் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்;பும், அதன் ஊடாக அவர் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவார் என்ற நம்பிக்கையும், தமிழரசுக்கட்சி அவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வதற்குப் பாதகமான நிலைமையையே உருவாக்கி இருக்கின்றன.

தமிழரசுக்ட்சியில் தொடர்வாரா பிரிந்து செல்வாரா புதியகட்சியை உருவாக்குவாரா அல்லது தலைமையை ஏற்பாரா என்பது பற்றிய தனது நிச்சயமான நிலைப்பாட்டை அவர் வெளியிடவில்லை. இது தொடர்பில் தள்ளாட்டமான கருத்துக்களையே அவர் கூறி வருகின்றார். புதிய கட்சியொன்றை உருவாக்குவீர்களா என்ற கனடிய தூதுவரின் கேள்பவிக்கு அவ்வாறு புதிய கட்சியை உருவாக்கப் போவதில்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.

எனினும், முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்குவதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன்,;; தமிழரசுக் கட்சியையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் முழுமையாக நம்பியிருக்கவும் நம்பிச் செயற்படவும் முடியாத ஒரு கள நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் இது தள்ளாட்டமான ஓர் அரசியல் சூழ்நிலை.

மறுபக்க நிலைமை

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியும் தேர்தல் கால வாக்குறுதிகளின் நிலைப்பாட்டுக்கு மாறான முறையிலேயே செயற்பட்டு வந்ததாகப் பொதுவாகக் குற்றம் சுமத்தப்பட்டது, இன்னும்கூட அந்த நிலைமை தொடர்கின்றது. அந்த அடிப்படையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே தமிழரசுக் கட்சியையும் தமிழ்ததேசிய கூட்டமைப்பையும் முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.

அவருடைய இந்த நிலைப்பாடானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளினதும், குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தனது அரசியல் இருப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்துகின்ற அரசியல் செயற்பாட்டு உத்தியைக் கடைப்பிடித்த தமிழரசுக்கட்சியின் மீது அதிருப்தி கொண்டவர்களினதும் மாற்றுத்தலைமையொன்றை உருவாக்குகின்ற முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது.

மாகாணசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவைப் பெற்ற தலைவர் என்ற வெகுஜன அரசியல் வசீகர அடையாளமாகக் கருதப்பட்ட முதலமைச்சரின் தலைமையில் புதிய தலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மாற்றுத்தலைமையை உருவாக்க வேண்டும் என்று விரும்பிய அரசியல் சக்திகள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. அந்த அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது.

அரசியல் கட்சியாகவோ அல்லது தேர்தலை ஆதாரமாகக் கொண்டதோர் அரசியல் சக்தியாகவோ தன்னை உருவாக்கிக் கொள்ள விரும்பாத சக்தியாக உருவாக முயன்ற தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ் மக்கள் பேரவை அரசியல் சக்தியாக செயற்பட முற்பட்டிராத போதிலும், அது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குறைபாடான அரசியல் செயற்பாடுகளை இட்டு நிரப்புகின்ற குறைநிரப்பு சக்தியாகவும், கூட்டமைப்புக்கு ஓர் அழுத்தம் தரக்கூடிய அழுக்க சக்தியாகவும் செயற்படவே முற்பட்டிருந்தது.

தன்னை ஓர் அரசியல் கட்சியாக வளர்த்துக் கொள்ளப் போவதில்லை. அல்லது தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப் போவதுமில்லை என்று திட்டவட்டமாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருந்தது. இருப்பினும், தமிழ் மக்கள் பேரவைக்கு வலுவானதோர் ஓர் அரசியல் சார்ந்த அடையாளத்தையும், அரசியல் ரீதியான பின்புல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அரசியல் சார்ந்த ஒரு சக்தியாகவும் ஒரு றபர் முத்திரையாக முதலமைச்சர் திகழ்ந்தார்.

அரசியல் ஈடுபாடு கிடையாது. அரசியல் கட்சியாகப் பரிணமிக்கமாட்டோம். குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அரசியல் தலைமையாக உருவாக மாட்டோம் என்று அடித்துக் கூறிச் செயற்பட்ட போதிலும், மாற்றுத் தலைமைக்குரிய ஓர் அடித்தளமாகவே அது அமைந்தது. அது கருதப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் ஆகிய இரண்டு கட்சிகளும் முக்கிய பங்காளிகளாக அதில் இணைந்திருந்தன. அது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தொடர்ந்து அங்கம் வகிக்கின்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற புளொட் அமைப்பும் அதில் இணைந்திருந்தது.

மதில் மேல் பூனை

கட்சி அரசியல் செயற்பாடுகளில் நாட்டமில்லை. மாற்றுத்தலைமையை உருவாக்குவதும் நோக்கமில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும்கூட, தமிழ் மக்கள் பேரவை என்ற அத்திவாரத்தின் மீதே மாற்றுத்தலைமையை கட்டியெழுப்புவதற்கான அரசியல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்னும்கூட அந்த முயற்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக வெகுஜன ஆதரவுடைய அரசியல் தலைமை என்ற அடையாளத்தைக் கொண்ட முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாற்றுத்தலைமையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈபிஆர்எல்எவ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்டுக்கோப்பில்லாத செயற்பாடுகளும், அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அரச நலன்களைப் பேணிப்பாதுகாக்கின்ற போக்கும், அரசாங்கத்துடன் நல்லுறவை மாத்திரமே தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்குமான செயற்பாடுகளும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி மாற்றுத் தலைமையை நோக்கி நகர்வதற்கு நிர்பந்தித்திருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை வலுவானதோர் அரசியல் சக்தியாகக் கட்டமைத்துச் செயற்படுத்துவதற்கு முற்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியும், ஏனைய சமூக சக்திகளும் தோல்வியடைந்த நிலையில் மாற்றுத்தலைமைக்கான தேவை வலுப் பெற்றிருக்கின்றது. கூட்டமைப்பின் மீதான அதிருப்தி காரணமாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளின் பக்கம் பாதிக்கப்பட்ட மக்கள் சாயத் தொடங்கியிருப்பதுவும், மாற்றுத் தலைமைக்கான தேவையை அதிகரித்திருக்கின்றது.

இந்த நிலையில் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் என்ற பதவி ரீதியிலான தமிழ் மக்களுடைய அரசியல் தலைமை அதி முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யார் வரப்போகின்றார்கள் என்ற கேள்வி கனமுடையதாகி உள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் குறைபாடுகள் இருந்தாலும்கூட, உள்ளவர்களில் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் விக்னேஸ்வரனே பொருத்தமானவராக இருக்க முடியும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகக் கருதப்படுகின்றது. ஆனால் தள்ளாடும் நிலையில் உள்ள இப்போதைய தமிழ் அரசியல் சூழலில் அவர் ஓர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் காட்டுகின்ற மதில் மேல் பூனை போன்ற செயற்பாடு நிலைமைகளை இன்னும் மோசமாக்கவே வழிவகுத்திருக்கின்றது.

பி.மாணிக்கவாசகம்