அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியாது!

அரசாங்கத்திலும் அங்கம் வகித்துக்கொண்டு, உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சியொன்றின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது.

பொது எதிரணியினரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதன் காரணமாகவே பொது எதிரணியினருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற தீர்மானத்திற்கு சபாநாயகர் வந்திருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொது எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது என்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான செயற்பாடாகவே உள்ளது. எனவே இந்த விடயத்தை புரிந்துகொள்ள அவர்கள் வேண்டியது அவசியமானதாகும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தி உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டுமென்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பொது எதிரணியினர் கோரி வருகின்றனர். இதற்கான கடிதத்தையும் சபாநாயகரிடம் அவர்கள் கையளித்துள்ளனர். பொது எதிரணியினரான தம்மிடம் 70 நாடாளுமன்ற உறுப்பி­னர்கள் இருக்கையில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொது எதிரணியினர் வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.