சிறிலங்கா பயணமாகும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்!

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சிறிலங்காவிற்கு வருகைத்தரவுள்ளார்.

அவர் கடந்த 2016ஆம் ஆண்டு அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது.

நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார். விஜயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் இடம்பெறவுள்ள அவரது சந்திப்புகளில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், மலிக் சமரவிக்ரம; மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சர், பைசர் முஸ்தபா, இளைஞர் விவகார, திட்ட முகாமைத்துவ மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர்; சாகல ரத்நாயக, பொது நிர்வாகம், முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, கல்வி அமைச்சர், அகில விராஜ் காரியவசம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை சநதிக்கவுள்ளார்.

பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல் உட்பட, 2018ஆம் ஆண்டில் பொதுநலவாய அரசாங்க தலைவர்களுடன் இலண்டனில் இடம்பெற்ற கூட்டத்தில் உடன்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவதில் விரிவான ஆதரவையும் ஓத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் செயலாளர் நாயகம் ஆராய்வார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.