சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வின் முதல் நாள் அமர்வு நேற்று (28) மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயற்சி நிலையத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் “முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை வெறும் முஸ்லிம் பிரச்சினைகளாக மாத்திரம் பார்க்காமல் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகமான விடயம், தேசிய நலனுக்கு முரணான விடயம் என்பதைக் காட்டுகின்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்யவேண்டும்.
“இனவாதிகளின் நடவடிக்கைகள் ஒரு இனத்துக்கு எதிரானது மாத்திரமல்ல. இனவாத செயற்பாடுகள் இந்த நாட்டுக்கு எதிரான விடயம் என்ற பார்வை மாற்று மதத்தினர் மத்தியில் வரக்கூடிய வகையில் எமது அரசியல் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தோற்றுப்போவோம்.
“ஒரு பக்குவப்பட்ட பார்வையுடன்தான் இந்தப் பிரச்சினைகளை அணுகவேண்டும். எடுத்த எடுப்பில் ஒரு இனத்தின் மீது அல்லது ஒரு சமயத்தின் மீது முலாம் பூசுவதன்மூலம், இனவாத நடவடிக்கைகளை தோல்வியடையச் செய்துவிடலாம் என எதிர்பார்ப்பது பிழையானதொரு அணுகுமுறை.
“ஒரு இனத்தின் மீது அல்லது ஒரு குழுவின் மீது பாய்ச்சலை நடத்தாமல் நிம்மதியில்லாமல் அலைந்துதிரியும் இனவாதம் கூட்டம் இந்த நாட்டில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் இந்தக் கூட்டத்தின் செயற்பாடுகள் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் புடம்போட்டு காட்டப்படவேண்டும்.
“அதிகாரங்களின் அடிமட்ட மையமாக இருக்கின்ற உள்ளூராட்சி சபைகள் சரியாக இயங்கத் தொடங்கினால், அதிகாரப்பகிர்வு சம்பந்தமான இழுபறிகள் முடிவுக்கு வந்துவிடும். மத்திய அரசாங்கத்திலிருந்து நேரடியாக உள்ளூராட்சி சபைக்கு அதிகாரத்தைக் கொடுப்போம் என்று சொல்கின்ற சில இனவாத சக்திகளும் இருக்கின்றன. அதிலும் மாட்டிக்கொள்ளாமல் தெளிவாக இருக்கவேண்டும்.” என்றார்.