“சினிமா… ஒரு மரணிக்கும் கலை!” -இயக்குநர் வெற்றிமாறன்

‘தமிழகம் இனி’ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இப்போது சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அரசை கேள்வி கேட்கும், விமர்சிக்கும் படங்களை வேண்டாம் என்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை மீறித்தான் படங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

சினிமா மரணிக்கும் ஒரு கலையாக இருக்கிறது. 200 படங்களில் 5 படம் தான் வெற்றி பெறுகிறது. லாபமில்லாத துறையாக சினிமா துறை மாறி வருகிறது.

சினிமா மக்களின் ஊடகம். நேரடியாக மக்களிடம் கொண்டு சேரும் ஊடகம். சினிமாவை குறைந்த அளவு பொறுப்புடன் பயன்படுத்தினால் கூட அது நல்லத்தாக்கத்தை ஏற்படுத்தும்.

சினிமாவில் திடீர் திடீர்னு ஒரு சீசன் வரும். லஞ்சம், திருவிழா, ஃபேமிலி செண்ட்டிமெண்ட், விவசாயம் காப்போம்னு விதவிதமான டிரெண்ட் இருக்கும். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் வியாபாரத்துக்காக மட்டுமே பயன்பட்டதே தவிர, அந்தப் பிரச்னையைப் பேசவில்லை. அதற்கான தீர்வையும் முன்வைக்கல.

அரசு இந்த மாதிரியான அணுகுமுறையை கையாண்டால் எல்லா துறைகளும் பாதிக்கும். சினிமாவை பெரிதாக பாதிக்கும்.

சினிமாவின் எதிர்காலம் இருண்டு இருப்பது போன்று தான் தெரிகிறது. அடுத்து 5 , 10 வருடத்தில் புதிய இயக்குநர்கள் வருவது வெகுவாகக் குறையும்.

சினிமாவில் எல்லா தயாரிப்பாளர்களும் கடனில் இருக்கிறார்கள். கடந்த 100 வருடமாக கதாநாயகன் தான் தெரிகிறார்கள். நடிகர்களின் முகத்தை வைத்து தான் படமெடுக்கிறார்கள். படைப்பாளிகளைப் பார்த்து படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

கேள்வி : “எங்களுக்கு ஒரு அறிவுரை சொல்லுங்களேன்”

வெற்றிமாறன் : எனக்கு அறிவுரை கேக்கவும் புடிக்காது, சொல்லவும் புடிக்காது. பாலு மகேந்திரா சார் எப்பவும் ஒரு அட்வைஸ் சொல்லுவார், “நிறைய படிங்க, நிறைய படம் பாருங்க” நான், ஏற்கனவே படிப்பேன், படம் பார்ப்பேன்… இப்போ சமீப காலமாக படிக்க நேரம் இல்லை. மனசுல ஏதோ ஒரு நினைப்பு ஓடிட்டே இருக்கு. ஆனா, சீக்கிரமே படிப்பேன். நீங்களும் வாசிக்கலாம்… நிறைய படம் பார்க்கலாம்.