திரைப் பார்வை: பிரதி மாறிய பிம்பம்! – தடக் (இந்தி)

ஒரே கதை வெவ்வேறு இந்திய மொழிகளில், வெவ்வேறு மாற்றங்களுடன் வருவது இந்திய சினிமாவுக்குப் புதிதல்ல. பாசில் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘அந்நியத்துபிராவு’. அது தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, தெலுங்கில் ‘நேனு பிரேமிச்துன்னானு’, இந்தியில் ‘டோலி சஜாகி ரக்னா’, கன்னடத்தில் ‘ப்ரீத்திகாகி’ என மறு ஆக்கம் செய்யப்பட்டுப் பெரு வெற்றி கண்டது.

இது பழைய உதாரணம் என்றால், இன்று பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் 2004-ல் வெளிவந்த ‘காதல்’ படத்தை புதிய உதாரணமாகக் கொள்ளலாம். திரைப்பட வணிகம் என்பது நேரடியாக, மொழிமாற்றுப் படமாக, மறு ஆக்கமாக என ஒரு பெரிய சுழற்சியில் சிக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ‘காதல்’ படத்தின் மறு ஆக்க உரிமையை எதையும் பெறாமலேயே அதைத் தழுவி, நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் ‘சாய்ராட்’ மராத்திப் படம் வெளிவந்தது.

எந்த இடத்திலும் காதல் படத்தைப் பற்றிக் குறிப்பிடாமல், மராத்திய திரைவரலாற்றில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் படமாகப் பெருவெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மராத்தியில் ருசித்த வெற்றியை இந்தியிலும் ருசிக்க முடிவுசெய்து ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியிருக்கும் படம்தான் ‘தடக்’.

இரானிய இயக்குநர் மஜித் மஜிதி இந்தியா வந்து இயக்கிய ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் சிறப்பான நடிப்பைத் தந்த வளரும் நடிகரான இஷான் கட்டார்தான் நாயகன்.

காதல் அகதிகள்

ஷஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் படத்தின் கதை நடப்பது ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில். செல்வாக்கு மிக்க வட்டார அரசியல்வாதியின் தைரியமான பெண் பார்த்தவி. நடுத்தரவர்க்கக் குடும்பத்திலிருந்து கல்லூரியில் அடிவைத்திருக்கும் பயந்த சுபாவமுள்ள இளைஞன் மதுகர். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பார்த்தவியின் தந்தைக்கு இவர்களது காதல் தெரிய வரும்போது அவரும் அவரது ஆட்களும் விரட்ட, பார்த்தவியின் துணிச்சலால் இருவரும் தப்பிக்கின்றனர்.

மும்பை, நாக்பூர் என ஒடி, கொல்கத்தாவில் தஞ்சமடைந்து, புது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். மண்மூடித் துருப்பிடித்த பீரங்கிக் குழாயிலிருந்து முளைத்தெழுந்த செடி, மொக்குகளும் பூக்களுமாக வசீகரிப்பதுபோன்ற அவர்களது வாழ்க்கையைக் கவனித்துக் கொண்டிருக்கும் காலம், அவர்களுக்குக் கொடுக்க என்ன வைத்திருந்தது என்பதே கதை.

‘முடிவு’ மட்டுமே படமல்ல

தமிழில் ‘காதல்’, இந்தியில் ‘என்.எச்.10’ போன்ற படங்களில் சாதிப் பிரிவினை, ஆணவக் கொலை பற்றி ஏற்கெனவே வந்திருக்கின்றன. ஆனால், மராத்தி சினிமாவுக்கு ‘சாய்ராட்’ திரைப்படம் வழியே வெவ்வேறு சாதி அடுக்குகளைத் தெளிவாகக் காட்டினார் நாகராஜ் மஞ்சுளே. அந்த ஜோடி வெவ்வேறு சூழலில் வளரும் விதம், வாழும் குழ்நிலையில் பணம், சாதியில் காட்டப்பட்ட வேறுபாடுகளும் அவர்களுக்கிடையே இயல்பாக மலர்ந்து அழுத்தமாக மையம் கொள்ளும் காதலும் மிகையற்ற காட்சிகளில் இருந்த நேர்மையான சித்தரிப்பு பார்வையாளர்களை கதாபாத்திரங்களைப் பின்தொடர வைத்தன.

இளையராஜா இசையை நினைவுபடுத்தும் அஜய்-அதுல் ஜோடியின் பாடல்களும் ஈர்த்தன. ஆனால் அந்த நேர்மையும் உணர்வு ரீதியான ரசவாதமும் அதன் இந்தி மறு ஆக்கமான இந்தப் படத்தில் எடுத்தாளப்படவில்லை.

மூலக்கதையிலிருந்து விலகி கதாபாத்திரங்களை செல்வச் செழிப்புகொண்ட பின்புலத்துடன் படைத்தது, ஆழ்ந்த காதலாக இல்லாமல் டிசைனர் வடிவமைத்த அலங்காரமான ஆடைகளுக்கான ஃபேஷன் ஷோ போலப் பிரதானமாக ஆடுவது, அரசியல்வாதி தந்தையை மொக்கையாகக் காண்பிப்பது, இவர்களை அவர் தேட எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது, பழைய பாணியில் ஓடும் ரயிலில் டிக்கெட் கூட எடுக்காமல் உதய்பூரிலிருந்து மும்பை வருவது, இருவருமே கொல்கத்தாவில் நல்ல பணியில் சேர்வது, வறுமை எந்த விதத்திலும் அவர்களைப் பாதிக்காமல் ஒப்பனையுடன் இருப்பது, மூலப் படத்தின் ஆதாரப் பிரச்சினையான சாதிப் பாகுபாட்டை முற்றிலும் தொடாதது எனப் படம் உணர்வுகள் குறைந்த எலும்புக்கூடாக இருக்கிறது.

கூடுதல் அதிர்ச்சி மதிப்புக்காகக் காட்டப்படும் கிளைமாக்ஸில் குறைகள் அனைத்தையும் பார்வையாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் என்ற இயக்குநரின்  நம்பிக்கை எடுபடாமல் போகிறது. கதாபாத்திரங்களின் முடிவு மட்டுமே படமல்ல. திரும்பத் திரும்ப நமக்கு ‘காதல்’ படத்தின் மெக்கானிக் முருகனும், ஐஸ்வர்யாவும், ‘சாய்ராட்’டின் அர்ச்சியும், பர்ஷ்யாவும் பரிதாபகரமாக நினைவுக்கு வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

பெயரைக் காப்பாற்றிய ஜான்வி

இவை அனைத்தையும் தாண்டி, அதே இரட்டை இசையமைப்பாளர்களைத் திறம்படப் பயன்படுத்தியது, முதன்மைக் கதாபாத்திரங்களில் வரும் ஜான்வி கபூர், இஷான் கட்டர் ஆகிய இருவரும் தங்கள் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதும் நல்ல விஷயங்கள். குறிப்பாக ஜான்வியின் நடிப்பும் அழுகையும் உடல்மொழியும் பல இடங்களில் புதுமுக நாயகிபோல் இல்லாமல் தேர்ச்சிமிக்க நடிப்பை வழங்கி, அவர் அம்மாவின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்.

திரைப்படம் என்பது காட்சிகளாக எழுதப்பட்ட கதையை கதாபாத்திரங்கள் வழியே உயிரூட்டும் கலை. எவ்வளவு நல்ல பாடலும், நடிப்பும் இருந்தாலும் எழுத்தில் நம்பகத் தன்மைக்கான சாரம் இல்லாமல்போகும்போது அது எடுபடாமல் போய்விடும் என்பதற்கு இந்தப்படம் ஓர் உதாரணம். இவ்வளவுக்கும் பிறகு, சாய்ராட் திரைப்படம் தமிழிலும் வெளிவரும் என்ற தகவல் தரும் சலிப்பை மறுக்க முடியவில்லை.