“தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது”!

வின்சென்ட் வான் கா 

தன் அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் அதிகபட்ச ஓவியர்களையும் நண்பர்களையும் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தார் தியோ. மனம் வான் காவையே நினைத்துக் கொண்டிருந்தது. “தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது”  என்று எழுதிய வான் கா, தற்கொலையின்மூலமே மரணத்தைத் தேடிக்கொண்டார்.

வான் காவின் சவப்பெட்டியைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் வண்ணத்தின் ஈரம்கூட காயவில்லை. வான் காவுக்கு விருப்பமான சூரிய காந்திப் பூக்களால் சவப்பெட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரை அமைதிப்படுத்தும் கான்வாஸும், மடிப்பு ஸ்டூலும், திறந்திருந்த வண்ணக்குழம்புகளும் அருகில் இருப்பதை உறுதி செய்துகொண்ட தியோவுக்குக் கொஞ்சம் ஆறுதல். வான் கா இல்லாத வாழ்க்கையை நினைக்கும்போதே வேதனை இதயத்தை அறுத்தது. காய்ந்த ரத்தத்தின் கறைகள் ஆங்காங்கு இருக்க, சவப்பெட்டிக்குள் இருக்கும் வான் காவுக்கு மரணம் விடுதலைதான் என்ற ஆசுவாசமும் தியோவுக்குள் எழுந்தது.

கோதுமை வயல்களுக்கு நடுவில் காக்கையை விரட்டும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் என்ற செய்தி வந்தவுடன் தியோவுக்கு மூச்சடைத்தது. வான் கா விஷயத்தில் எதற்கும் தயாராக இருக்கப் பழகி இருந்தார் தியோ.